ரேகையும் நரம்பும் இன்றும் உயிரோட்டமுடன் தெரியும் அதிசய நடராஜர் ஆலயம்!
By : G Pradeep
அந்தி மதியோடும் அரவச்சடைதாழ
உந்தி யனலேந்தி முதுகாட்டெரியாடி
சிந்தித் தெழவல்லார் தீராவினை தீர்க்கும்
நந்தி நமையாள்வான் நல்லம் நகரானே
திருஞானசம்பந்தர் திருநல்லம் இறைவன் மீது போற்றி பாடிய பாடல். திருநல்லம் என்பது கும்பகோணம் மற்றும் காரைக்கால் சாலையில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பெயர் கோனேரிராஜபுரம் பூமீஸ்வரர் கோவில். தேவாரப்பாடல் பாடப்பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் இது 34 ஆவது சிவன்தலமாகும்
இது ஏராளமான அதிசயங்களும், ஆச்சர்யங்களும் நிறைந்த தலமாக உள்ளது. செங்கல்லால் முன்பு கட்டப்பட்டிருந்த இந்த கோவிலை கற்றளிக் கோவிலாக மாற்றியவர் கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி. இவர் ஊரிலிருந்த சிறந்த சிற்பி ஒருவரை அழைத்து சிறந்த நடராஜர் சிலையை செய்யும் படி பணித்துள்ளார். அதற்கென கால நிர்ணயமும் செய்யப்பட்டது. ஆனால் குறிப்பிடப்பட்ட காலகட்டதில் அவரால் செய்ய முடியாமல் போனது. இதனால் மிகுந்த வேதனை அடைந்த சிற்பி கடவுளிடம் இறைஞ்சி வேண்டினார்.
அப்போது மனித உருவில் நான்கு வேதங்களையும் நாய்களென அழைத்து கொண்டு அன்னை சிவகாமி தேவி கையில் குடத்துடனும், இடுப்பில் முருகரை குழந்தையாக சுமந்தவாறும் வந்துள்ளார். தாகத்திற்கு தண்ணீர் வேண்டுமென மனித வடிவிலிருந்த சிவபெருமான் ஒவ்வொரு வீடாக சென்று தண்ணீர் கேட்க,, இவரி கோலத்தை கண்டு பலரும் இவருக்கு தண்ணீர் தர மறுத்துள்ளனர்.
இறுதியில் சிற்பியிடம் வந்து குடிக்க தண்ணீர் வேண்டுமென கேட்டபோது, அதற்கு சிற்பி உலைகளத்தில் ஏது தண்ணீர் ? வேண்டுமானல் ஈசனை சிலை வடிப்பதற்காக காய்ச்சி உருக்கிய வைத்த உலோக கூழ் மட்டுமே உண்டு. வேண்டுமானல் அதை எடுத்து பருகுங்கள், என்றதும் ஈசனும், அம்பிகையும் அதை அருந்திய மாத்திரத்தில் அவ்விடத்திலேயே சுயம்புவாக மாறி போனார்கள்.
மிகவும் உயிரோட்டம் மிகுந்த அந்த சிலையை கண்டு ஆச்சர்யமுற்ற அரசர் இது எவ்வாறு சாத்தியம் என கூறி சிலையின் பாதத்தில் அவர் கையில் வைத்த கூரான பொருளால் காயம் ஏற்படுத்தவே, அதிலிருந்து குருதி பெருகியதாகவும் கூறப்படுகிறது.
இன்றும் இந்த அதிசய நடராஜரின் சிலையில் கைரேகையையும், பச்சை நரம்பையும் பார்த்து பரவசமடைகின்றனர் பக்தர்கள். இந்த கோவிலை பூர்வ புண்ணியம் இருந்தால் தான் தரிசிக்க முடியும் என்பது அப்பர் பெருமானின் வாக்கு. பூமாதேவியே பூஜித்து பேறு பெற்ற தலம், என்பதும் பூமாதேவி வழிபடுவதற்காக தேவ சிற்பி விஸ்வகர்மாவே இக்கோவிலை வடிவமைத்ட்தார் என்றும் புராணங்கள் சொல்கின்றன