முழங்காலுக்கு கீழ் பூமிக்கடியில் இருக்கும் காணக்கிடைக்காத தரிசன கோலம்!
திரு நாவாய் முகுந்தன் ஆலயம், மலப்புரம்
By : Kanaga Thooriga
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் திருநாவாய் எனும் பகுதியில் அமைந்துள்ளது திரு நாவாய் முகுந்தன் கோவில். இக்கோவில் பாரதபுழை எனும் அற்றங்கரையின் வடப்புறத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் நவ முகுந்தன் (நாராயணன்) என்றும் அம்பிகை மலர் மங்கை நாச்சியார் என்றும் அழைக்கப்படுகிறார்.
திவ்ய பிரபந்தத்தில் பாடல் பெற்று மங்களாசனம் செய்யபெற்ற 108 தலங்களுள் இக்கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலுக்கென்று தனித்தீர்த்த குளம் கிடையாது. பாரத புழை ஆற்றங்கரையிலேயே அனைத்து கோவில் சடங்குகளும் செய்யப்படுகின்றன. இக்கோவிலின் தீர்த்தம் காசியில் புனிதத்தை ஓத்தது என்பது நம்பிக்கை. அதன் அடிப்படையிலேயே கேரளாவில் பித்ரு பூஜை செய்யக்கூடிய கோவில்களில் இக்கோவில் முதன்மையானதாக திகழ்கிறது.
மகாபாரதத்தின் துவாபர யுகத்தில் கிருஷ்ண பெருமான் பஞ்ச பாண்டவர்களுடன் இங்கு வந்து பித்ரு பூஜை செய்திருக்கிறார் என சொல்லப்படுகிறது. அமாவசைகளில் குறிப்பாக தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் இங்கே பக்தர்கள் கூட்டம் பெருக்கெடுத்திருப்பதை காண முடிகிறது.
இக்கோவிலில் விநாயக பெருமான் ஆதி கணேசர் அல்லது கஜேந்திரர் எனும் பெயரிலும், அன்னை இலட்சுமி தேவியார் மலர்மங்கை நாச்சியார் எனும் பெயரிலும் அய்யப்ப சுவாமியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். கேராளாவிலுள்ள பெருமாள் கோவில்களில் எங்குமில்லா அதிசயமாக இங்கே இலட்சுமி தேவிக்கு தனி சந்நிதி அமையப்பெற்றிருக்கிறது.
இத்திருத்தலத்தில் நவயோகிகள் தவமியற்றி அவர்களால் ஒன்பதாவதாக நிறுவப்பட்ட திருவுருவமே இப்போதிருப்பதால் எனும்படியால் இந்த பெருமானுக்கு நவமுந்த பெருமாள் என்ற பெயர் வந்ததாக நம்பப்படுகிறது. இப்போதிருக்கும் திருவுருவத்திற்கு முந்தைய எட்டு திருவுருவங்களும் நிறுவப்பட்ட உடன் பூமிக்கு அடியில் புதைந்து போய்விடுமாம். இந்த ஒன்பதாவது திருவுருவம் கால் வரை பூமிக்கடியில் புதைந்த போது அதை யோகிகள் தடுத்து நிறுத்தினர். இப்போதும் கூட மூலவர் கால்கள் பாதி உள்ளே பதிந்த நிலையில் மிக மிக அரிதான தரிசனத்தை இங்கே வழங்கி அருள்பாலிக்கிறார். இது அரிதினும் அரிதாகும். இதன் பொருட்டே இங்கே நேர்த்தி கடன் செலுத்தும் அன்பர்கள், முட்டியிட்டு பிரதக்ஷணம் செய்வது வழக்கம். இதனாலேயே இந்த தலத்திற்கு நவயோகி ஸ்தலம் என்ற பெயரும் உண்டு.
இக்கோவில் குறித்து சொல்லப்படும் தல வரலாறு யாதெனில் கஜேந்திரர் மற்றும் இலட்சுமி தேவி ஒரே இடத்தில் இருந்து தாமரை மலர்களை பறித்து விஷ்ணுவிற்கு செலுத்தி வணங்கி வந்தனர். இதனால் ஒரு முறை கஜேந்திரருக்கு மலர் கிடைக்காமல் போனது. தன்னுடைய வருத்தத்தை கஜேந்திரர் விஷ்ணுவிடம் முறையிடவே, இலட்சுமி தேவியை தன் பக்கம் அழைத்து தம்பதியாக தரிசனம் நல்கினார், அதன் பின் தாமரை மலரை மனதார அர்பணித்து மகிழ்ந்தார் கஜேந்திரர் என்பது தல வரலாறு ஆகும்.