Kathir News
Begin typing your search above and press return to search.

இன்றும் உப்பில்லா நெய்வேத்தியம் படைக்கப்படும் அதிசய உப்பிலியப்பன் ஆலயம்

இன்றும் உப்பில்லா நெய்வேத்தியம் படைக்கப்படும் அதிசய உப்பிலியப்பன் ஆலயம்
X

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  7 Jan 2022 12:31 AM GMT

திருவிண்ணகர் என்றழைக்கப்பட்ட ஒப்பிலியப்பன் கோவில் மஹா விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட தலமாகும். கும்பகோணம் அருகே இருக்கும் திருநாகேஸ்வரம் எனும் இடத்தில் அமைந்துள்ளது இக்கோவில். இந்த கோவில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட தலமாகும். குறிப்பாக சொன்னால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் இது 60 ஆவது ஸ்தலமாகும். இங்கு விஷ்ணு பெருமான் ஒப்பிலியப்பன் என்ற பெயரிலும் அன்னை பூமி தேவி என்ற பெயரிலும் அருள் பாலிக்கின்றனர்.

இக்கோவில் மத்திய சோழ மன்னர்களால் அமைக்கப்பட்டு, பின்பு பல்வேறு காலகட்டங்களில் தஞ்சை நாயக்கர்களால் புணரமைக்கப்பட்டது. இந்த கோவில் ஐந்து அடுக்கு இராஜ கோபுரத்தை கொண்டது. ஒப்பிலியப்பன் என்கிற பெயர் மருவி உப்பிலியப்பன் என்றும் அழைக்கப்படுவதுண்டு.

உப்பிலியப்பன் மகரிஷி மார்கண்டேயர், பூமாதேவி, பிரம்ம தேவர் மற்றும் சிவபெருமானுக்கு இத்தலத்தில் காட்சி கொடுத்துள்ளார். ஆறு கால பூஜையை கொண்ட இத்திருத்தலத்தில் பங்குனி மாதம் நடைபெறும் தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற ஓன்றாகும். இக்கோவிலுக்கு பல பெயர்கள் உண்டு. செண்பகவனம், தென் திருப்பதி, ஆகாசநகரம், மார்க்கண்டேய ஷேத்திரம், என்ற ஏராளமன பெயர்கள் உண்டு.

மார்கண்டேய மகரிஷி இலட்சுமி தேவி தனக்கு மகளாகவும் மகா விஷ்ணு தனக்கு மருமகனாகவும் வர வேண்டும் என்று தீவிர தவமிருந்தார். அதன் பொருட்டு இன்று கோவிலிருக்கும் இந்த திருவிண்ணகரத்தில் துளசி மரத்தின் அடியில் குழந்தையாக தேவி அவதரித்தார். தேவியின் அருள் நிறைந்திருப்பதை உணர்ந்த மகரிஷி அக்குழந்தைக்கு பூமாதேவி என பெயரிட்டு வளர்த்து வந்தார். குழந்தை வளர்ந்து திருமண வயதை எட்டுகையில், பங்குனி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் மஹா விஷ்ணு முதியவர் வேடம் பூண்டு மகரிஷியிடம் பூமாதேவியை பெண் கேட்டு வந்தார்.

வந்தவர் முதியவர் என்பதாலும் மஹா விஷ்ணுவிற்கே தன் பெண்ணை கொடுக்க வேண்டும் என்ற சங்கல்ப்பத்தினாலும் மார்கண்டேயர் மறுத்தார். அதற்கு பல்வேறு காரணம் சொன்னார், அதில் ஒன்று தான் தன் மகளான பூமாதேவிக்கு சரியாக சமைக்க தெரியாது. உப்பில்லாமல் சமைப்பாள் என்றார். என்ற போது, உப்பில்லா சமையலே தனக்கு போதும் என்று அவர் சொன்னார். கண்களை மூடி தன்னுடைய தவ வலிமையால் வந்தவர் யார் என்று அறிந்த மகரிஷி பூமாதேவியை விஷ்ணுவிற்கு மணம் முடித்து கொடுத்தார். உப்பில்லா உணவை ஏற்று கொண்டதால் உப்பிலியப்பன் என்றும் எதற்கும் ஒப்பிலா இறைவன் என்பதால் ஒப்பிலியப்பன் என்ற திருநாமம் நிலைத்தது. இதனால் தான் இன்றும் அய்யனுக்கு உப்பில்லா நெய்வேத்தியமே படைக்கப்படுகிறது.

இங்கு தரிசித்தால் திருப்பதியில் இருக்கும் திருமாலை தரிசித்த புண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News