Kathir News
Begin typing your search above and press return to search.

சிவபெருமானின் பாதுகைகள் இன்றுமிருக்கும் இரண்டாயிரமாண்டு அதிசய கோவில்!

சிவபெருமானின் பாதுகைகள் இன்றுமிருக்கும் இரண்டாயிரமாண்டு அதிசய கோவில்!

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  28 July 2022 2:08 AM GMT

தமிழகத்தின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ளது குத்தாலம். இந்த பகுதியின் பண்டைய காலத்து பெயர் திருத்துருத்தி என்பதாகும். சிவபெருமானுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட கோவில் இது. தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று. மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகவும் திகழ்கிறது. இங்கிருக்கும் மூலவருக்கு உத்தவேதீஸ்வரர் என்பது திருப்பெயர். இங்கிருக்கும் அம்பாளுக்கு அரும்பன்ன வன்முலை நாயகி, அமிர்த முகிழாம்பிகை என்பதும் திருப்பெயர்களாகும்.

ஏரத்தாள 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் இது என சொல்லப்படுகிறது. இத்தலம் காசிக்கு நிகரான சக்தி படைத்தது. இதை இறைவனே பக்தருக்கு உணர்த்திய அதிசயம் இத்தலத்தில் நிகழ்ந்துள்ளது. ஒரு முறை உருத்திரசன்மன் என்பவன் காசிக்கு சென்று சிவபெருமானை வழிபட சென்றான். இந்த ஆலயமே காசிக்கு நிகரானது தான் என்பதை உணர்த்த எண்ணிய சிவபெருமான், குண்டோதரனை அழைத்து பாம்பு வடிவெடுத்து அவனை தடுக்குமாறு கூறினார். பாம்பு வடிவில் குண்டோதரன் சென்ற போது அந்த அபாயத்திலிருந்து விடுபட உருத்திரசன்மன் கருட மந்திரத்தை உச்சரித்தான். இதனால் பாம்பு மயங்கி விழவே, பாம்பாக இருக்கும் குண்டோதரனை காக்க பாம்பாட்டி வடிவில் சிவபெருமானே இறங்கி வந்தார். வந்திருப்பது சிவன் என்று அறிந்து அவரை பணிந்து வணங்கினான் உருத்திரசன்மன்.

அப்போது அவனிடம் இத்தலத்திலிருக்கும் என்னை தரிசித்தாலே காசியில் வணங்கிய புண்ணியம் கிட்டும் என்று அருளினார்.

இத்தலத்திற்கு மற்றொரு பெருமையும் உண்டு. பரத முனிவர் அன்னை பார்வதி தனக்கு மகளாக அவதரிக்க வேண்டும் என்று யாகம் ஒன்றை வளர்த்தார். அந்த வேள்வியிலிருந்து மகளாக வந்த பார்வதி குமரி பருவத்தை அடைகையில் கைலாயத்திலிருந்து சிவபெருமான் அவரை மணக்க வந்தார். அவர் கைலாயத்திலிருந்து வருகையில் அவருக்கு நிழல் கொடுக்க உத்தால மரம் உடன் வந்தது. பின் சிவபெருமான் குத்தாலம் வந்து பார்வதி தேவியை இத்தலத்தில் கைத்தலம் பற்றினார். சிவபெருமானுக்கும் பார்வதி அன்னைக்கும் திருமணம் நடந்த இடம் என்பதை உணர்த்தவே தான் அணிந்து வந்த பாதுகைகளையும், உத்தால மரத்தையும் இங்கேயே விட்டு கைலாயம் சென்றான் என்பது புராணம்.

இன்றும் கூட சிவபெருமானின் பாதுகைகளையும், உத்தால மரத்தையும் நாம் இக்கோவிலில் காணலாம். இக்கோவிலின் தல விருட்சமாக இருப்பதும் உத்தால மரம் தான். அதுமட்டுமின்றி இந்த பேரின் ஓசையே மருவி குத்தாலம் என்ற பெயர் வந்தது என்றும் சொல்லப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News