Kathir News
Begin typing your search above and press return to search.

தீராத பாவங்களை தீர்க்கும் அதிசய தீர்த்தம்! மதுரையின் யோக நரசிம்மர் கோவில்

தீராத பாவங்களை தீர்க்கும் அதிசய தீர்த்தம்! மதுரையின் யோக நரசிம்மர் கோவில்
X

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  16 Sep 2022 12:30 AM GMT

தீராத பாவங்களை தீர்க்கும் அதிசய தீர்த்தம் கொண்ட நரசிங்காபுரம் யோக நரசிம்மர் கோவில்

மதுரை மாவட்டத்தில் நரசிங்காபுரம் எனும் கிராமம் உள்ளது. அங்கிருக்கும் யானைமலை மலை அடிவாரத்தில் குடவறை கோவிலாக அமைந்துள்ளது யோக நரசிம்மர் ஆலயம். இந்த கோவில் 770களில் கட்டப்பட்டது. இக்கோவிலை கட்டியவர் மதுரகவி ஆவார் இவர் மதுரை மன்னனான நெடுஞ்சடையனிடம் அமைச்சராக இருந்தவர். மலையிலேயே நரசிம்மரின் திருவுருவம் குடையப்பட்டிருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு. இக்கோவில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்படவில்லை எனினும், வைஷ்ணவ தலங்களில் மிக முக்கிய தலமான அழகர் கோவில் மற்றும் திருமோகூர் இடையே அமைந்துள்ளது.

அழகர் கோவிலை சுற்றியிருக்கும் கோட்டையை இரண்ய கோட்டை என்கின்றனர். இப்போதும் கூட அதன் முகப்பில் கல்லால் ஆன நரசிம்மர் திருவுருவத்தை ஒருவர் காண முடியும். அழகர் கோவிலின் வெளி பிரகாரத்தில் காணப்படும் மிகப்பெரிய நரசிம்மர் திருவுருவத்தை ஜுவால நரசிம்மர் என்றழைக்கின்றனர். இவர் மிகவும் உக்கிர ரூபமுடன் இருப்பதால் இவரை சாந்தப்படுத்த எப்போதும் நல்லெண்ணை அபிஷேகம் செய்வது வழக்க்கம்.

இந்த மலையின் அடிவாரத்தில் இருக்கும் தலத்திற்கு தான் நரசிங்கபுரம் அல்லது ஹஸ்திபுரம் அல்லது கஜகிரி என்று பெயர். இங்கு மகா மண்டபம், கருட மண்டபம், மற்றும் முக மண்டபம் ஆகிய பாண்டிய காலத்து மண்டபங்களை காண முடியும். இங்கு குடி கொண்டிருக்கும் அம்பாளுக்கு நரசிங்கவள்ளி என்று பெயர். இந்த கோவிலில் நிகழும் நரசிம்ம ஜெயந்தி விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இக்கோவில் குறித்து சொல்லப்படும் ஸ்தல புராணம் யாதெனில், ரோமச முனிவரே இக்கோவிலில் உள்ள நரசிம்மரை நிர்மாணித்தவர். பிரமாண்ட புராணத்தின் படி உத்தர காண்டத்தின் 87 ஆவது பகுதியில் இந்த தல புராணம் சொல்லப்பட்டுள்ளது. அதாவது ரோமச முனிவர் குழந்தை வரம் வேண்டி கடும் தவம் இயற்றிய போது நரசிம்மர் அவருடைய அவதார கோலத்திலேயே காட்சி தர வேண்டும் என வேண்டினார். அவருடைய வேண்டுகோளை ஏற்று நரசிம்மர் காட்சி தந்த போது அவருடைய தரிசனம் மிகுவும் உக்கிரமானதாக இருந்தது. அவர் தரிசனத்தின் வெப்பத்தை இந்த பூவலகத்தால் தாங்க இயலவில்லை. ஞானியர், ரிஷிகளெல்லாம் ஓடோடி வந்தனர். அவர் வெப்பத்தை தணிக்க பிரகலாதனை அழைத்து வந்தனர். பிரகலாதனின் வருகையினால் நரசிம்மரின் வெப்பம் ஓரளவு தான் தணிந்தது. அதன் மகாலட்சுமியை அழைத்து வந்தனர், அவர் வருகைக்கு பின் உக்கிர நரசிம்மர் தன் வெப்பத்தை குறைத்து யோக நரசிம்மராக காட்சி தந்தார்.

அதுமட்டுமின்றி சிவபெருமானே தன்னுடைய பிரம்மஹத்தி தோஷத்தை போக்குவதற்காக இங்குள்ள சக்கர தீர்த்ததில் நீராடியதாக வரலாறு. எனவே இங்கிருக்கும் சக்கர தீர்த்தத்தில் நீராடினால் தீராத வினைகளும் தீரும் என்பது ஐதீகம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News