மஹாபாரத பீமனின் மனைவி ஹிடும்பி தேவதையாக கருதி போற்றப்படும் அதிசய கோவில்
By : G Pradeep
இந்தியாவின் இமாச்சல் பிரதேசத்தில் ஒரு முக்கிய மலை வாசஸ்தலமாக இருப்பது மணாலி. பியாஸ் ஆற்றின் பள்ளதாக்கில் அமைந்துள்ளது இந்த இடம். சுமார் 30,000 வரையிலான மக்கள் தொகையை கொண்ட மிகச்சிறிய பகுதி தான் எனினும், இந்த பகுதி நம் சப்த ரிஷிகளின் தாயகமாக கருதப்படுவதால் நம் இந்து கலாச்சாரத்தில் அதீத முக்கியத்துவம் பெறும் பகுதியாக இது அமைந்துள்ளது.
இந்த இடத்தில் தான் மஹாபாரதத்தில் வரும் பாண்டவர்களுள் ஒருவரான பீமனின் மனைவியும், கடோத்கஜனின் தாயுமான ஹிடும்பிக்கு இங்கே ஹிடும்பா தேவி கோவில் அமைந்துள்ளது. ஏராளமான சுற்றுலா பயணிகளை உலகெங்கும் இருந்து ஈர்க்கும் முக்கிய தலமாக இந்த கோவில் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு துன்கிரி கோவில் என மற்றொரு பெயரும் உண்டு. இந்த கோவில் 1553 ஆம் ஆண்டு மஹாராஜ் பகதூர் சிங் என்பவரால் கட்டப்பட்டது.
இமயத்தின் அடிவார பகுதியில் அமைந்திருக்கும் இக்கோவில் நான்கு அடுக்கு ஸ்தூபி கோபுரத்தையும், அழகான மர வேலைபாடுகளையும் கொண்ட அதிசய கட்டிடக்கலையாகும். மண்ணாலான சுவர்களில் கற்களாலான வேலைபாடுகள் நிறைந்திருக்கின்றன. இந்த கோவிலுக்கு தேவியை வணங்க கூடும் கூட்டத்திற்கு இணையாக, இந்த கட்டிடக்கலையின் அழகை பார்த்து வியக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்த கோவிலின் கருவறையில் எந்தவித சிலையோ படமோ இல்லை, மண்ணிலிருந்து வெளிநீண்டிருக்கும் ஒரு பாறையினை கோவிலை போல உருமாற்றியிருக்கிறார்கள். இங்கு ஒரு கல்லில் பதிந்திருக்கும் கால் தடத்தையே வழிபடுகின்றனர். ஹிடும்பா தேவி ஆட்சியாளர்களுக்கு நன்மையை செய்ய கூட்டியவர் என்பது நம்பிக்கை. எனவே முந்தைய காலத்தில், அரசராக பதவியேற்பதற்கு முன்பாக இந்த கோவிலில் சில பலிகளை கொடுத்து பின் பதவியேற்றுக்கொள்வது வழக்கமாக இருந்துள்ளது.
இது மட்டுமின்றி இந்த கோவிலில் நடத்தப்படும் வழிபாடும், சடங்குகளும் மிக வித்தியாசமானதாக ஏன் ஆக்ரோஷமானதாக இருப்பதாக கூட சொல்லலாம். பல வகையான பலிகள் இங்கே கொடுக்கப்படுகின்றன. தங்களுக்கு இருக்கும் நெருக்கடிகள், பொருளாதார சிக்கல்கள், குடும்ப பிரச்சனைகள் தீர இங்கே வணங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த பகுதியை பீமனின் சகோதரர் ஆண்டு வந்ததாகவும், தங்கள் வனவாசத்தின் போது இந்த பகுதியை கடந்த பாண்டவர்களின் பீமன் ஹிடும்பியின் மீது காதல் வயப்பட்டு அவர் சகோதரரை அழித்து இந்த இடத்தில் ஓராண்டு காலம் வசித்து, கடோத்கஜன் என்ற பெருவீரனை பெற்றெடுத்தாக வரலாறு. பீமன் சென்றதற்கு பின், கடோத்கஜன் ஆட்சி செய்த காலத்தில், ஹிடும்பி பெரும் தவம் மேற்கொண்டு ஒரு கடவுளுக்கு உரிய வல்லமைகளோடு திகழ்ந்து இந்த பகுதி மக்களுக்கு தேவையான நன்மைகளை செய்து வந்தது இந்த இடத்தில் தான் உள்ளூர் மக்கள் நம்புகின்றனர்.