Kathir News
Begin typing your search above and press return to search.

நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தின் சிறப்புகள்!

நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. பக்தர்கள் அதீத நம்பிக்கையுடன் இந்த ஆஞ்சநேயரை வழிபட்டு வருகின்றனர். எல்லா பிரச்சினைகளுக்கு தீர்க்ககூடிய கூடிய வல்லமை அந்த வாயுபுத்திரனுக்கு உண்டு.

நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தின் சிறப்புகள்!

KarthigaBy : Karthiga

  |  17 Dec 2023 11:15 AM GMT

பல இடங்களில் ஆஞ்சநேயருக்கு கோவில் இருந்தாலும் நாமக்கலில் இருக்கக்கூடிய ஆலயம் சில சிறப்புகளை பெற்றுள்ளது. வாயுபுத்திரனான அனுமன் மங்கள வடிவினனாக பல்வேறு மக்களுக்கு இங்கு அருள்பாலித்து வருகிறார். 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலை ஒரே கல்லில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.எல்லா ஆஞ்சநேயர் கோவில்போலவே இங்கும் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றப்படும். மார்கழி மாதம் மூலம் நட்சத்திரமும், அமாவாசையும் இணைந்து வரும் நாளில் மிக சிறப்பாக ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

தமிழ் மாதத்தில் முதல் ஞாயிற்றுக் கிழமைகள், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கிறது. ஆடிப்பூரம், வைகாசி விசாகம், வைகுண்ட ஏகாதசி ஆகிய நாட்களிலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது. சந்தனக்காப்பு, வெண்ணெய் காப்பு செய்யப்படுகிறது.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வருட திருவிழா பங்குனி மாதம் 15 நாட்கள் நடைபெறும். பங்குனி மாதம் வரும் ஹஸ்த நட்சத்திரத்தில் 3 திருத்தேர்கள் திருவீதி உலா வருவது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு செய்யப்படும் அபிஷேகங்கள், கட்டண விவரங்கள் டிஜிட்டல் போர்டு (எல்.இ.டி) மூலம் பக்தர்கள் பார்க்கும் அளவுக்கு கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து உள்ளது.

ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்ய உயரமான இரும்பு ஏணி உள்ளது. நரசிம்மரின் அவதாரங்கள் கோவிலின் மேற்கூரையில் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.ஆஞ்சநேயர் செய்த வீர, தீர செயல்கள், சீதையிடம் ஆஞ்சநேயர் பேசியது, ராமரின் இதயத்தில் இடம் பெற்றது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள், ஓவியங்களாக வடிவமைத்து வைக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலின் முன்பகுதியில் வினாயகருக்கு தனி சன்னதி உள்ளது. வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படும். விஷேச மலர் அலங்காரம் செய்யப்படும். முத்தங்கி அலங்காரம் செய்யப்படுகிறது. தங்க கவசம் மற்றும் வெள்ளிக் கவசம் சாத்தப்படுகிறது. தினமும் இரவு 7 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறுகிறது. பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாளில் கட்டணம் செலுத்தி தங்க ரதத்தை புறப்பாடு செய்யலாம்.

குழந்தைகள் நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் அவர்களுக்கு அறிவு, வீரம், தைரியம், வலிமை, பயமின்மை, ஞாபகசக்தி, சுறுசுறுப்பு, விடா முயற்சி, நல்ல ஒழுக்கம், அடக்கம், நேர்மை, நோயின்மை, தேர்ச்சி பெறுதல், உண்மை பேசுதல், நாவன்மை, புகழ், நற்பண்புகள் ஆகியவற்றை வழங்குகிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News