Kathir News
Begin typing your search above and press return to search.

முத்தான வாழ்வருளும் முந்தி விநாயகர்

விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெறும், முத்தான வாழ்வருளும் முந்தி விநாயகரைப் பற்றி சிறு தகவல்

முத்தான வாழ்வருளும் முந்தி விநாயகர்

KarthigaBy : Karthiga

  |  30 Aug 2022 2:30 PM GMT

கோயமுத்தூர் அருகே உள்ள புலியகுளம் என்ற இடத்தில் அமைந்துள்ளது முந்தி விநாயகர் திருக்கோவில். ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட விநாயகரை இங்கே தரிசிக்கலாம்.


இங்கு அருளும் விநாயகப்பெருமானின் தும்பிக்கை வளம் சூழ்ந்து காணப்படுகிறது. நான்கு கரங்களுடன் அமைந்த விநாயகர் தன்னுடைய வலது முன் கரத்தில் தந்தமும் ,வலது பின்கரத்தில் அங்குசமும்,இடது முன்கரத்தில் பலாப்பழமும், இடது பின்கரத்தில் பாசக் கயிறும் தாங்கி காட்சி தருகிறார் .தும்பிக்கையில் லட்சுமியின் அம்சமான அமிர்த கலசத்தை வைத்து இருக்கிறார்.


தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் இந்த முந்தி விநாயகர் தன்னுடைய வயிற்றில் வாசுகி பாம்பை கட்டியிருக்கிறார். இதனால் நாக தோஷம் உள்ளவர்கள் இந்த விநாயகரை வணங்கினால் அந்த தோஷங்கள் விலகி ஓடும் .இந்த விநாயகரின் வலது பகுதி ஆண்களை போலவும் இடது பகுதி பெண்களின் வடிவிலும் அமைக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள். இந்த விநாயகர் அரசமரத்தடியில் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிப்பதால் அருள் கடாட்சம் அதிகம் மேலும் இவரது இடது திருவடியால் சித்த லட்சுமியின் அம்சமான பத்ம சக்கரம் இருப்பதால் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு செல்வத்தை வாரி வழங்குபவராக இருக்கிறார்.


இந்த முந்தி விநாயகரின் பிரம்மாண்ட உருவம் 21 சிற்பிகளைக் கொண்டு ஆறு ஆண்டுகால உழைப்பால் உருவாக்கப்பட்டிருக்கிறது. பல இடங்களில் தேடி அலைந்து முடிவில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி என்ற இடத்தில் இந்த விநாயகரின் உருவம் செய்வதற்காக மிகப்பெரிய அளவில் பாறை தேர்வு செய்யப்பட்டுள்ளது.


பின்னர் அங்கேயே வைத்து இந்த சிலை செய்யப்பட்டு புலியகுளம் கொண்டுவரப்பட்டது. ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட முந்தி விநாயகர் சுமார் 19 அடி 10 அங்குலம் உயரமும் 11 அடி 10 அங்குலம் அகலமும் கொண்டவர். சுமார் 190 டன் எடை கொண்டவர் .


இந்த விநாயகர் சிலையை நிலைக்கு கொண்டு வர எந்த இயந்திரத்தின் துணையையும் பயன்படுத்தவில்லை. முழுக்க முழுக்க மனித சக்தியை பயன்படுத்தி அதன் மூலஸ்தானத்தில் நிலை நிறுத்தி இருக்கிறார்கள் .எனவே தான் இந்த முந்தி விநாயகரை நிலைநிறுத்துவதற்கு 18 நாட்கள் தேவைப்பட்டிருக்கிறது. இதற்காக சாய்வு தளம் ஒன்றை உருவாக்கி இரும்பு சங்கிலி மற்றும் உருளைகளின் உதவியோடு கொஞ்சம் கொஞ்சமாக மூலஸ்தானத்தில் நிலை நிறுத்தியுள்ளனர்.


இந்த ஆலயத்தில் சங்கடஹரசதுர்த்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று மூன்று டன் எடை கொண்ட பல்வகை பூக்களும் மலர் மாலைகளும் கொண்டு விநாயகருக்கு அலங்காரம் செய்யப்படும்.நவராத்திரி விழாவும் இங்கு சிறப்பான முறையில் நடக்கிறது.


ராகு -கேது தோஷம் ,நவக்கிரக தோஷம் விலக இந்த விநாயகரை வணங்கலாம். மேலும் திருமணம் கைகூட ,குழந்தை பாக்கியம் கிடைக்க ,குடும்பம் ஒற்றுமையாக நடைபெற இந்த விநாயகரை வணங்கி செல்கிறார்கள். கோயம்புத்தூர் காந்திபுரம் பஸ் நிலையத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது புலியகுளம் முந்தி விநாயகர் திருக்கோவில்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News