கருடாழ்வாரும் கருட புராணமும் - வியக்க வைக்கும் சிறப்புகள்!
கருடாழ்வார் பற்றியும் கருட புராணம் பற்றியும் காண்போம்.
By : Karthiga
வைணவ புராணங்களில் விஷ்ணுவின் பெரிய திருவடியாக கருடன் போற்றப்படுகிறார். வைணவ சமயத்தின் பெருமாள் கோயிலின் மூலவரை வணங்குவதற்கு முன்னர் கருடனை வழிபட வேண்டும் என்பது வைணவ ஆகமத்தின் நியதியாகும்.கருடன் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்.
கருடன் , காசிபர் - வினதை தம்பதியர்க்கு பிறந்த பறவை இனங்களின் அரசன். சூரியனின் தேரை ஓட்டும் அருணன் இவரின் தம்பி. காசிபர் – கத்ரு தம்பதியர்க்கு பிறந்த நாகர்கள், கருடனின் எதிரிகள். திருமாலின் வாகனமாக அமைந்தவர் கருடன். சமஸ்கிருத மொழியில் கருடன் என்பதற்கு பெரும் சுமையைச் சுமப்பவன் என்று பொருள்.
சுகீர்த்தி மற்றும் ருத்திரை, கருடனின் மனைவியர். பெருமாள் கோயில் கொடிமரங்களில் கருடனின் திருஉருவம் காணப்படும். ஒருவர் உடலில் ஏறிய பாம்பின் விஷத்தை கருட வித்தியா மந்திரங்கள் செபிப்பதன் மூலம் நீக்கப்படுகிறது. கருடன் பெயரில் கருட புராணம் உள்ளது. அமிர்தத்தை, தேவ லோகத்திலிருந்து பூமிக்கு எடுத்து வந்தவர். விஷ்ணுவின் வாகனமாக கருடன் இருப்பதால், வைணவர்கள் இவரைப் பெரிய திருவடி என்பர்.
பதினெட்டு புராணங்களில் ஸ்ரீ கருட புராணம் மிகவும் பெருமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மனிதனின் பிறப்பு- இறப்பு, வினைகள், பாவ புண்ணிய பலன்கள் பற்றி விவரித்துக் கூறும் ஸ்ரீ கருட புராணம்.பெருமாளால் ஸ்ரீ கருடனுக்குப் போதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது[.
'ஓம் தத்புருஷாய வித்மஹே ஸுபர்ண பஷாய தீமஹீ தன்னோ கருட ப்ரசோதயாத்'. ஒருவர் தொடர்ந்து ஆறு மாதங்கள் இதனை உச்சரித்து வந்தால் அவருக்கு தன் சக்தியின் ஒரு துளியை கருடன் தருகிறார் என்பது ஐதீகம் . ஆகவே பெருமாள் கோவில்களுக்கு செல்லும்போது பெருமாளை வணங்கும் கருட மந்திரத்தை உச்சரித்து கருடாழ்வாரையும் வணங்கிவிட்டு அவரின் அனுமதி பெற்று பெருமாளை வணங்குவது அனைத்து வகையான செல்வங்களையும் வளங்களையும் மென்மேலும் சேர்க்கும்.