Kathir News
Begin typing your search above and press return to search.

பிரிந்த தம்பதிகளை ஒன்று சேர்க்கும் நெய்குப்பை சுந்தரேஸ்வரர்!

அடிக்கடி சண்டையிட்டுக் கொள்ளும் கணவன் மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த கணவன் மனைவியும் வணங்க வேண்டிய தலம் நெய்குப்பை சுந்தரேஸ்வரர் சுவாமிகள் வீற்றிருக்கும் திருத்தலம்.

பிரிந்த தம்பதிகளை ஒன்று சேர்க்கும் நெய்குப்பை சுந்தரேஸ்வரர்!
X

KarthigaBy : Karthiga

  |  12 May 2023 11:30 AM GMT

அன்னை பார்வதிக்கு ஒருநாள் திடீரென்று ஒரு ஆசை உண்டானது.பந்து விளையாட வேண்டும் என விரும்பினாள் அன்னை பார்வதி. தனது ஆசையை சிவபெருமானிடம் கூறவே சிவபெருமான் உடனே நான்கு வேதங்களையும் ஒரு பந்தாக உருவாக்கி பார்வதியிடம் கொடுத்தார் . பார்வதி தனது தோழிகளுடன் பந்து விளையாட தொடங்கினாள் . நேரம் கடந்து கொண்டே இருந்தது .ஆட்டம் முடியவில்லை. ஆதவன் அஸ்தமிக்கும் நேரம் வந்தது. தான் மறைந்தால் அன்னையின் ஆட்டம் தடைபடுமே என்று எண்ணிய சூரியன் அஸ்தமிக்க தயங்கி நின்றான்.

கோபம் கொண்ட சிவபெருமான் பார்வதிக்கும் தன் கடமையை செய்ய தவறிய சூரியனுக்கும் சாபமிட்டார். தேவியை பசுவாகும் படி சிவபெருமான் சாபமிட்டார். இதை அடுத்து தேவி தன் தமையன் கேசவன் மாட்டு இடையனாக பின் தொடர பூலோகம் வந்தாள்.பந்து வந்து விழுந்த கொன்றைக்காட்டில் சுயம்புலிங்கமாக இருந்த புற்றின் மீது பசு உருவில் இருந்த தேவி பாலைச் சொரிந்து வழிபட்டாள். ஒருநாள் பசுவின் குளம்பு புற்றின் மீது பட தேவி சுய உருவம் பெற்றாள்.

சாபம் நீங்க பெற்ற அன்னையின் முன் தோன்றிய இறைவன் "நீ சுயரூபம் பெற்று விட்டாய். எனினும் நெய்யால் பூஜை செய்து பஞ்சாக்னியில் தவம் செய்து என்னை வந்தடைவாய்" எனச் சொல்லி மறைந்தார் .உமையவள் இறைவனை பால் கொண்டு அபிஷேகம் செய்த தலம் பந்தனை நல்லூர் . இது தற்போது பந்தநல்லூர் என்று அழைக்கப்படுகிறது .பார்வதி தேவி இறைவனுக்கு ஊற்றி வழிபட்ட பால் அங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெய் குப்பை என்ற தலம் வரை ஓடி வந்து நெய்யாக மாறியது .அன்னை பார்வதி அந்த நெய்யை கொண்டு இங்குள்ள இறைவனை பூஜித்தாள். அந்த தலமே நெய் குப்பை திருத்தலமாகும் .

அன்னையின் சாபம் நீங்கிய தலம் இது. இங்குள்ள ஆலயமே சுந்தரேஸ்வரர் ஆலயமாகும் . பந்தநல்லூரில் சொரிந்த பால் இந்த தலத்தில் நெய்யாக மாறியதாக தல வரலாறு தெரிவிக்கிறது. கூபம் என்றால் கிணறு என்று பொருள். நெய் கூபம் என்ற பெயர் கொண்ட இத்தலம் நெய் கூடம் என்றாகி பின்னர் மருவி தற்போது நெய் குப்பை என்று அழைக்கப்படுகிறது . பார்வதி தேவி கிணற்றிலிருந்து நெய் எடுத்து சுவாமிக்கு பூஜை செய்து இறைவனோடு ஐக்கியமான சிறப்புக்குரிய தலம் இது.

சூரியன் அஸ்தமனம் ஆகாமல் சிவபெருமானிடம் சாபம் பெற்றார் அல்லவா? அந்த சாபத்திலிருந்து விமோசனம் பெறுவது எப்போது? என்று அவர் சிவபெருமானிடம் கேட்டார். ஆண்டுதோறும் மூன்று நாட்கள் தனது கிரகணங்களால் இத்தலத்தில் பூஜை செய்ய சாப விமோசனம் கிடைக்கும் என சிவபெருமான் கூற சூரியனும் அதன்படி பூஜை செய்து, சாப விமோசனம் பெற்றார் என்பது புராண வரலாறு. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் பெரும் சிறப்பை பெற்றுள்ள இத்தலத்தை ஒருமுறை தரிசனம் செய்வதால் சகல சாப விமோசனங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை .

பிரிந்து தம்பதியர் இந்த ஆலயம் வந்து இறைவன் இறைவியை அர்ச்சனை செய்து வழிபட்டு 48 நாட்கள் முடிவில் ஆலயத்தில் மூல மந்திரஹோமம் நடத்துவதினால் அவர்கள் மீண்டும் சேர்ந்து இனிய இல்லறம் நடத்துவது உறுதி என்கின்றனர் பக்தர்கள் . தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இத்தலம் கும்பகோணத்தில் வடகிழக்கில் 29 கிலோமீட்டர் தொலைவிலும், பந்தநல்லூர் - வைத்தீஸ்வரன் கோவில் சாலையில் பந்தநல்லூரில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News