Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதோஷ விரதத்தின் மகிமையும் பலன்களும்

சிவபெருமானுக்கு மிக உகந்த விரதமான பிரதோஷ விரதத்தை தவறாமல் எடுப்பதால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்களும் அதன் மகிமையும் பற்றிய தகவல்.

பிரதோஷ விரதத்தின் மகிமையும் பலன்களும்

KarthigaBy : Karthiga

  |  4 Nov 2022 1:30 PM GMT

பிரதோஷ விரதம் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிக முக்கியமான விரதமாகும். இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கும் நபர் நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் பெறுவார் என்பது நம்பிக்கை. பிரதோஷ விரதத்தைக் கடைப்பிடிப்பவருக்குச் சந்திர தோஷம் மற்றும் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள், சர்ப தோஷம் யாவும் நீங்கும்.சகல சௌபாக்கியமும் கிட்டும்

ஐந்து வகையான பிரதோஷ காலங்கள்.

நித்தியப் பிரதோஷம்: தினமும் சூரிய அஸ்தமனத்திற்கு மூன்று நாழிகைக்கு (72 நிமிடம்) முன்னர் உள்ள காலகட்டத்தை இது குறிக்கும்.

பட்சப் பிரதோஷம்: இது வளர்பிறைத் திரயோதசியன்று வரும்.

மாதப் பிரதோஷம்: இது தேய்பிறைத் திரயோதசி யன்று வரும்.

மகா பிரதோஷம்: சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் சனிக்கிழமை கூடிய திரயோதசி நாளன்று இது வரும். (ஆலகால நஞ்சை ஈசன் ஏற்றருளியது கார்த்திகை மாதம் சனிப் பிரதோஷத்தன்று என்று கருதப்படுகிறது. இதற்கு மாறாக, ஆந்திராவில் வைகாசி மாதம் சனிப் பிரதோஷ வேளையென்று கருதுகிறார்கள்.)

பிரளயப் பிரதோஷம்: இது பிரளய காலத்தில் வருவது. அப்போது எல்லாமே ஈசனுள் அடங்கும்.

பிரதோஷ காலங்களில் உபவாசம் இருந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேக, ஆராதனைகள் செய்ய வேண்டும். பிரதோஷ காலங்களில் சிவ பெருமான் அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்கிறார். எனவே இக் காலங்களில் ஈஸ்வரனை நினைத்து தியானம் செய்வது மிகச் சிறந்த பலன் அளிக்கும்.

" சிவாய நம " என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிப்பது மிகுந்த நன்மைகளை தரும். சிவ புராண பாடல்களை பாடியும் எம் பெருமானை வழிபடலாம்.


நந்தி தேவருக்கு பூஜைகள் முடிந்த பின்னர் பிரதோஷ புஜைகள் மூலவருக்கு செய்யப்படும்.மூலவருக்கு தீபாராதனை முடிவுற்ற பின்னர் நந்தி தேவரது காதுகளில் யாரும் கேட்கா வண்ணம் நமது வேண்டுதல்களை சொல்ல வேண்டும்.


மூலவரின் தீபாராதனையை நந்தி தேவரின் இரு கொம்புகள் வழியே காண்பது சிறந்த பலனை கொடுக்கும். பிரதோஷ காலங்களில் சிவ பெருமான் நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கிடையே திருநடனம் புரிகின்றார் என்பது ஐதீகம். இத்தகைய தரிசனம் சகல பாவங்களையும் போக்கும். அனைத்து விதமான தோஷங்களையும் நீக்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News