Kathir News
Begin typing your search above and press return to search.

அமாவாசையை பௌர்ணமியாக மாற்றிய அபிராமி அம்மன்

தன்னுடைய தீவிர பக்தரான சுப்பிரமணிய பட்டருக்காக அமாவாசை தினத்தையே பௌர்ணமி ஆக்கிய அபிராமி அம்மனின் மகிமை பற்றிய தகவல்

அமாவாசையை பௌர்ணமியாக மாற்றிய அபிராமி அம்மன்
X

KarthigaBy : Karthiga

  |  3 Nov 2022 1:30 PM GMT

திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில் பட்டராக இருந்தவர் சுப்பிரமணியன் .இவர் தை அமாவாசை நாளில் கோவிலில் அபிராமி அம்மனை நினைத்து ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது தஞ்சையை தலைநகராகக் கொண்ட மராட்டிய மன்னன் திருக்கடையூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அங்கிருந்த பலரும் அவருக்கு மரியாதை செலுத்தினர். ஆனால் அபிராமி அம்மன் சன்னதியில் இருந்த சுப்பிரமணியபட்டார் மன்னரை கவனிக்காமல் தன்னை மறந்து அபிராமி அம்மை நினைத்து ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். இதை கண்ட மன்னர் சுப்பிரமணிய பட்டர் தியானத்திலிருந்து விழித்ததும் இன்று என்ன திதி என்று கேட்டார் .அப்போது சுப்பிரமணிய பட்டர் அபிராமி அம்மனின் திருமுகத்தை மனதில் நினைத்தவாறு இன்று பவுர்ணமி என்று தவறாக கூறிவிட்டார். இதனால் சினம் கொண்ட மன்னர் இன்று இரவு வானில் முழு நிலவை காட்ட வேண்டும். முழு நிலவு தோன்றாவிட்டால் உங்களை அக்னி குண்டத்தில் ஏற்றி விடுவேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.


மன்னர் அங்கிருந்து அகன்ற பிறகுதான் சுப்ரமணியப்பட்டருக்கு தான் தவறாக அமாவாசை நாளை பௌர்ணமி என கூறியது நினைவுக்கு வந்தது. இதனால் அச்சமடைந்த சுப்பிரமணியப்பட்டர் அபிராமி அம்மனை நினைத்து வழிபடத் தொடங்கினார் .இது ஒரு புறம் இருக்க அபிராமி அம்மன் சன்னதி எதிரே சுப்பிரமணியப்பட்டரை அக்னி குண்டத்தில் ஏற்ற ஏற்பாடுகள் தொடங்கியது. எரியும் நெருப்பின் மேல் தொங்கும் உறியில் சுப்பிரமணிய பட்டர் ஏற்றப்பட்டார். சுப்ரமணியப்பட்டரும் அபிராமி அந்தாதி பாடல்களை பாடத் தொடங்கினார். 79 ஆவது பாடலை சுப்பிரமணிய பட்டர் பாடத்தொடங்கும் போது அன்னை அபிராமி அம்மன் வானில் காட்சி தந்து தனது இடது காலில் இருந்த சந்திர தாடங்கத்தினை கழற்றி வானில் வீசினாலள். அது பல கோடி நிலவின் ஒளியை அந்த அமாவாசை வானில் வெளியிட்டது. இதனால் அமாவாசை இருள் நீங்கி வானில் முழு பௌர்ணமி நிலவு தோன்றியது .உரியின் கீழே மூட்டப்பட்டிருந்த நெருப்பு முழுவதும் நறுமணம் வீசும் மலர்களாய் மாறி இருந்தன .


மன்னரர் உட்பட அங்கு கூடியிருந்த அனைவரும் அபிராமி அம்மனின் அருளையும் சுப்பிரமணிய பட்டரின் பக்தியையும் எண்ணி மெய் சிலிர்த்தனர்.மேலும் சுப்ரமணிய பட்டருக்கு அபிராமி பட்டர் என்ற பட்டத்தை மன்னர் சூட்டினார்.தை அமாவாசை தினத்தன்று ஆண்டுதோறும் திருக்கடையூர் அபிராமி அம்மன் சன்னதி முன்பாக அபிராமி அந்தாதி பாடப்படுவதுடன் பௌர்ணமி தோன்றும் நிகழ்வும் நடத்திக் காட்டப்படுகிறது.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News