Kathir News
Begin typing your search above and press return to search.

பெண்களின் சபரிமலையாகத் திகழும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்!

பெண்கள் இருமுடி கட்டி வந்து வழிபாடு செய்யும் பெண்களின் சபரிமலையாக விளங்கும் மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயம் பற்றி காண்போம்.

பெண்களின் சபரிமலையாகத் திகழும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்!
X

KarthigaBy : Karthiga

  |  14 March 2024 4:40 AM GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயத்தில் ஒன்றுதான் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இந்த ஆலயம் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. சபரிமலையைப் போல இந்த ஆலயத்திலும் இருமுடி கட்டி வழிபாடு செய்யும் வழக்கம் இருக்கிறது. அதை பெண்கள் மட்டுமே செய்வதுதான் இந்த கோவிலின் சிறப்பு. முன் காலத்தில் இந்த இடம் காடாக இருந்துள்ளது. கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு வந்து விடும் இடம் என்பதால் 'மந்தை காடு' என்று அழைக்கப்பட்ட இடம் தற்போது மண்டைக்காடு என்று வழங்கப்படுகிறது .


ஒருமுறை காஞ்சி சங்கரரின் சீடர் ஒருவர் இந்த பகுதிக்கு வந்தார் .அவர் ஸ்ரீசக்கரம் ஒன்றை தரையில் வைத்து விட்டு ராஜேஸ்வரி அம்மனை நினைத்து தியானத்தில் ஈடுபட்டார். அவர் தியானத்தில் ஆழ்ந்த சில நொடிகளிலேயே அவரைச் சுற்றி புற்று வளரத் தொடங்கி விட்டது. அப்போது அங்கு வந்து ஆடு மேய்க்கும் சிறுவர்கள் சீடரை எழுப்பி புற்றிலிருந்து வெளியேற்றினர் .அந்த சீடர் தான் கொண்டு வந்த ஸ்ரீ சக்கரத்தை எடுக்க முயற்சித்த போது அது வெளியே வரவில்லை .அங்கேயே பதிந்து போனது.


இதை அடுத்து அந்த சீடரும் அங்கேயே ஜீவ சமாதி ஆனார் .இந்த தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த அந்த பகுதி மன்னன் மார்த்தாண்டவர்மா அவ்விடத்தில் அம்மனுக்கு ஒரு கோவில் கட்டினான். இதுவே மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உருவான வரலாறு. தமிழ்நாட்டில் காமாட்சி, மீனாட்சி, இசக்கியம்மன், முத்தாரம்மன், முத்துமாரியம்மன் என்று அமைந்த பல ஆலயங்கள் சிறப்புக்குரியவை. அந்த வகையில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் சிறப்பு அங்குள்ள 15 அடி உயர புற்று .இந்த ஆலயத்தின் கருவறையில் புற்று வடிவில் தான் அம்மன் காட்சியளிக்கிறார்.அந்த புற்றின் மேல் அம்மனின் முகம் சந்தனத்தால் உருவாக்கப்பட்டிருக்கும்.


உருவ வழிபாடு இருக்க வேண்டும் என்பதற்காக புற்றுக்கு முன்பாக வெள்ளியில் ஒரு சிலை உள்ளது. அதற்கு முன்பாக வெண்கலத்தில் நின்ற நிலையிலும் ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது .திருமண வரம், குழந்தை பேறு கிடைக்கவும் ,ஆரோக்கிய குறை நீங்கவும் ,கண் திருஷ்டி விலகவும் தலைவலி நீங்கவும் இங்கு வந்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம் .இந்த ஆலயத்தில் வழங்கப்படும் மண்டையப்பபம் என்ற பிரசாதம் பிரசித்தி பெற்றது. அரிசி மாவில் வெல்லம்,பாசிப்பருப்பு, ஏலக்காய் ,சுக்கு ஆகியவற்றை சேர்த்து நீராவியில் வேகவைத்து இந்த மண்டையப்பம் செய்யப்படுகிறது.


அம்மனின் நைவேத்தியம் இதுதான். ஆலயத்தின் தலவிருட்சமாக வேப்பமரம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிகமானவர்கள் வழிபாடு செய்வார்கள். பௌர்ணமி வழிபாடும் இங்கே பிரசித்தம் .இந்த ஆலயத்தில் நடைபெறும் மாசித் திருவிழா புகழ் பெற்றது .இந்த விழாவின் போதுதான் பெண்கள் பலரும் 41 நாட்கள் பயபக்தியுடன் விரதம் இருந்து இருமுடி கட்டி வந்து மண்டைக்காடு பகவதி அம்மனை தரிசனம் செய்கிறார்கள். நாகர்கோவிலில் இருந்து சுமார் 19 கிலோமீட்டர் தொலைவிலும் குளச்சலில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திலும் கடற்கரையை ஒட்டி அழகுற அமைந்துள்ளது மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News