Kathir News
Begin typing your search above and press return to search.

குருவாயூர் கிருஷ்ணரும் குன்றிமணி வழிபாடு தோன்றிய வரலாறும்!

கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூரப்பன் கோவில் பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் குருவாயூர் ஆலயத்தில் இருக்கும் குன்றிமணி.

குருவாயூர் கிருஷ்ணரும் குன்றிமணி வழிபாடு தோன்றிய வரலாறும்!
X

KarthigaBy : Karthiga

  |  18 May 2023 4:00 PM GMT

குருவாயூர் கோவிலில் ஒரு பெரிய உருளியில் குன்றி மணியை நிரப்பி வைத்திருக்கிறார்கள். இங்க வரும் பக்தர்கள் அந்த குன்றின்மணிகளுக்குள் தங்களின் இரண்டு கைகளையும் விட்டு அளந்தபடி நாள்பட்ட நோய்கள் நீங்கவும், குழந்தை வரம் கிடைக்கவும் தங்களுக்கு வேண்டிய பிரார்த்தனைகளை எல்லாம் செய்து கொள்கிறார்கள். பின்னர் அந்த குன்றிமணிகளை அப்படியே உருளியில் போட்டுவிட்டு திரும்பி விடுகிறார்கள்.


குருவாயூர் ஆலயத்தில் உள்ள இந்த விசேஷமான வழிபாட்டின் பின்னால் ஒரு சுவையான சம்பவம் இருக்கிறது. அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். முன்னொரு காலத்தில் ஒரு வயதான பெண்மணி ஒரருவர் குருவாயூர் திருத்தளத்தில் இருந்து வெகு தொலைவில் வசித்து வந்தார் . வெகு தொலைவில் இருந்தாலும் அந்த மூதாட்டியின் இஷ்ட தெய்வமாக குருவாயூரப்பன் இருந்தார் . என்றாவது ஒருநாள் குருவாயூர் சென்று குருவாயூரப்பனை தரிசித்து வழிபட வேண்டும் என்பதுதான் அவரது வாழ்நாள் பிரார்த்தனையாக இருந்தது.


குருவாயூரப்பனை பார்க்கச் செல்லும்போது வெறும் கையுடன் சென்றால் நன்றாகவா இருக்கும்? அதனால் ஏதாவது ஒன்றை காணிக்கையாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று அந்த மூதாட்டி நினைத்திருந்தார் . ஆனால் பொன் பொருளை கொண்டு சென்று குருவாயூரப்பனுக்கு காணிக்கையாக கொடுக்க அந்த மூதாட்டியிடம் பண வசதி எதுவும் இல்லை. அன்றாடம் வரும் வருமானத்தில் தான் தன்னுடைய வயிற்றின் கால் பகுதியை நிறைத்து வந்தார் .அப்படிப்பட்டவரால் என்னதான் காணிக்கை இறைவனுக்கு கொடுத்து விட முடியும் .


பல நாட்களாக இந்த சிந்தனையிலேயே இருந்த மூதாட்டிக்கு தன் வீட்டில் இன்று மஞ்சாடி மரத்திலிருந்து உதிரும் குன்றிமணி முத்துக்கள் கண்ணில் பட்டன. அவற்றையே சேகரித்துச் சென்று குருவாயூரில் இருக்கும் பாலகனான பாலகிருஷ்ணனுக்கு அளித்து விடலாம் என்று மூதாட்டி முடிவு செய்தார். குருவாயூர் கண்ணனை கண்டு விடுவது என்ற முடிவில் தன்னுடைய பயணத்தையும் தொடங்கி விட்டார். அவர் குருவாயூர் செல்ல வேண்டியது இருந்தது .


அவர் சென்ற நேரத்தில் குருவாயூர் ஆலயம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. விசாரித்த போது அவருக்கு ஒரு விஷயம் தெரிந்தது. ஒவ்வொரு மாதமும் முதல் நாளன்று அப்பகுதி அரசன் தன் பக்தியின் வெளிப்பாடாக குருவாயூர் கோவிலுக்கு ஒரு யானையை சமர்ப்பிப்பது வழக்கம். அன்றும் மாதத்தின் முதல் நாள் . எனவே மன்னன் ஒரு யானையை கோவிலுக்கு வழங்க வந்திருந்தான். அதனால் தான் ஆலயமே பரபரப்பில் மூழ்கியிருந்தது.


மன்னன் வருகை தருவதால் வழியில் யாரும் இல்லாதபடி பார்த்துக் கொள்ளும் வகையில் அங்கிருந்த அனைவரையும் சேவகர்கள் அப்புறப்படுத்தி கொண்டிருந்தனர் . சேவகர்களின் அலட்சியத்தால் கண்ணனை பார்க்க வந்திருந்த மூதாட்டி கீழே தள்ளிவிடப்பட்டார். அவரது பையில் வைத்திருந்த குன்றிமணிகள் அனைத்தும் தரையில் சிதறின. அப்போது கோவிலுக்கு அர்ப்பணிப்பதற்காக கொண்டுவரப்பட்டிருந்த யானை மதம் பிடித்து ஓடியது. ஆலயத்தில் இருந்த பொருட்கள் அனைத்தையும் சேதப்படுத்தியது .அங்கிருந்தவர்கள் பதற்றத்துடன் குருவாயூரப்பனிடம் பிரசன்னம் கேட்டனர்.


அப்போது கர்ப்ப கிரகத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. நீங்கள் என் பக்தையை உதாசீனப்படுத்தி விட்டீர்கள். "என் பக்தை எனக்கு அன்பாக கொண்டு வந்த குன்றிமணிகள் எனக்கு வேண்டும்". என்று அந்த குரல் சொன்னது. அப்போதுதான் ஆலயத்திற்கு வெளியே தான் கொண்டு வந்த காணிக்கை சிதறி கிடப்பதை கண்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த மூதாட்டியை அனைவரும் கவனித்தனர் . உடனடியாக ஓடிச் சென்று சிதறி கிடந்த குன்றிமணிகளை பொறுக்கி எடுத்து அந்த மூதாட்டி இடம் கொடுத்து மன்னிப்பும் கேட்டனர்.


பின்னர் அவரை சகல மரியாதையுடன் சன்னதிக்கு அழைத்துச் சென்றனர். அவர் ஆசையுடன் குன்றிமணிகளை குருவாயூரப்பன் முன்பாக சமர்ப்பித்ததும் யானையின் மதம் அடங்கியது . அந்த மூதாட்டியின் நினைவாகத்தான் இன்றும் குருவாயூர் கோவிலின் உருளியில் குன்றிமணிகள் வைக்கப்பட்டுள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News