திருப்பதியில் பிரம்மோற்சவம் தொடங்கிய வரலாறு
திருப்பதி ஏழுமலையானுக்கு புரட்டாசி மாதத்தில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கப்பட்டதன் சுவாரஸ்ய வரலாறு
By : Karthiga
படைப்புத் தொழிலை செய்பவர் பிரம்மதேவன் தன் படைப்புகளில் உருவான அனைத்து உயிர்களும் நலமாகவும் வளமாகவும் வாழ்வதற்காக பிரம்மதேவனால் நடத்தப்படும் உற்சவமே பிரம்மோற்சவம் ஆகும். ஆலயத்தின் கருவறையில் மூலவராக வீற்று இருக்கும் இறைவனின் சக்தியை உற்சவர் திருமேனிக்கு எழுந்தருளச் செய்து நிகழ்த்தப்படும் வீதி உலாவிற்கு 'உற்சவம்' என்று பெயர். இந்த நடைமுறைக்கு கடவுளே பக்தர்களை தேடி வந்து அருள் புரிவதாக ஐதீகம்.
சோழ மன்னன் தொண்டைமான் தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் உதவியுடன் பெருமாளுக்கு கோவில் ஒன்றை எழுப்பினார். அங்கு எழுந்தருளிய இறைவனை தரிசிப்பதற்காக வானுலகை சேர்ந்த முப்பத்து முக்கோடி தேவர்களும் கூடியிருந்தனர். அப்போது பெருமாளுக்கு பெரும் விழா ஒன்றை நடத்த பிரம்மன் அனுமதி வேண்டினார். அதற்கு இறைவனின் அனுமதி கிடைத்ததை தொடர்ந்து தொடங்கப்பட்டதே திருமலை பிரம்மோற்சவம் என்கிறார்கள்.
இந்த வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெறும் ஒன்பது நாட்களும் அரசு முறையில் ஆன விருந்தினர்கள் தவிர, மற்ற பிரமுகர்களுக்கான சலுகைகள், 300 ரூபாய் தரிசன டிக்கெட் போன்றவை ரத்து செய்யப்படும் .அனைத்து பக்தர்களுமே இலவச தரிசன வரிசையில் மட்டுமே ஏழுமலையானைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.