மனதை ஒருநிலைப்படுத்தி தியானத்தை சாத்தியப்படுத்துவது எப்படி?
By : G Pradeep
தியானம் என்பது எடுத்த எடுப்பில் நாம் ஒரு இடத்தில் அமர்ந்து செய்கிற வித்தை அல்ல. ஒரே இடத்தில் மனதினை ஒருநிலை படுத்தி அமர்கிற நிலையை அடைவதற்கு நாம் பல படிகள் கடக்க வேண்டியிருக்கும். . "அஷ்டாங்க யோக" முறையில் இது எட்டாவது நிலையில் வருவதாகும். தியானம் என்பது விழிப்புணர்வுடன் இருத்தலே ஆகும்.
ஒருவர் தியானத்தில் இருக்கிறார் என்றால் அவர் விழிப்புணர்வுடன் இருக்கிறார் என்று அர்த்தம். அங்கு மனமோ, உடலோ, மற்ற வேறு எதுவோ இல்லை. இன்றைய காலகட்டத்தில் குண்டலினியோகம், உபாஸனா தியானம் என நிறைய பதங்கள் வழக்கத்திற்கு வந்துவிட்டன. அவை எல்லாம் அவ்வளவு எளிதில் கற்றுக் கொள்ளக் கூடியதா ? எந்த பயிற்சியும் இல்லாமலேயே இவையெல்லாம் நாம் செய்ய முடியுமா? என்பதே கேள்வி.
தியானத்திற்கு முதலில் தேவையானது மற்றும் முக்கியமானது ஆசனங்கள். உடலை ஒரு குறிப்பிட்ட நிலையில் வைத்திருத்தல் ஆசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆசனங்களில் ஐந்து ஆசனங்களில் மிக முக்கியமானது மற்றும் அடிப்படையானதும் ஆகும். சுகாசனம், சித்தாசனம், வஜ்ராசனம், பத்மாசனம், அர்த்த பத்மாசனம் இந்த ஐந்து ஆசனங்களில் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் நீண்ட நேரம் எளிதாக அமர முடியும்.
ஒருவர் ஆசனங்களில் சிரமமில்லாமல் அமர பழகியபின் முத்திரைகளை பழகலாம். நமது ஆயுர்வேத மருத்துவ முறையில் நோய் தீர்ப்பதற்கான ஒரு வழிமுறையாக முத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. முத்திரை என்பதற்கான பொருள் நம் உடல் பாகங்களை ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் வைத்திருப்பதாகும். கை விரல்களிலிருந்து உடல் முழுமைக்கும் பொருந்தும் இந்த முத்திரைகளால் எண்ணிலடங்கா நோய்களை தீர்க்க முடியும். மனம் சார்ந்தபல பிரச்சனைகளை முத்திரைகளால் தீர்க்க முடியும். முத்திரைகள் நம் ஆழ்மனதோடு நேரடியாக தொடர்பு கொள்ள நமக்கு உதவிசெய்யும். உடல் பாகங்களை உறுதிப்படுத்தவும், நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கவும் இவை உதவும்.
தியானத்தின் போது ஏதாவது ஒரு முத்திரையைப் பயன்படுத்தி வந்தோம் என்றால் தியானம் எளிதாக கைகூடும். ஆசனங்களையும் முத்திரைகளையும் பழகிய பிறகு "த்ராடகம் " என்ற பயிற்சி உண்டு. அதாவது ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது ஒரு காட்சி உருவத்தின் மீது மனதை ஒரு நிலையாக குவிப்பது. ஒரு சுடர் தீபத்தின் மீதோ கரும் புள்ளியின் மீது நீண்ட நேரம் பார்வையையும் கவனத்தையும் செலுத்த வேண்டும். இதனால் கண்பார்வை கூர்மை அடைவதோடு மன உறுதியும், மன குவிக்கும் திறனும் ஏற்பட்டு ஆக்ஞா சக்கரம் தூண்டப்படும்.
இதன்பிறகு இந்த நிலையில் சில காலம் பயிற்சி செய்த பிறகு " "அந்தர தாரனா " என்ற அடுத்த நிலைக்கு வருவார். இது மனதை உள்முகமாகத் திருப்பி மனதிற்கு உட்புறமாகவோ அல்லது உடலில் ஏதாவது ஒரு சக்கரத்தையோ கவனிப்பதாகும். இப்படி செய்வதினால் மனம் முன்பை விட அதிகமாக ஒருமுகப்படும் மனதின் அலைகள் குறையும். பெரும்பாலும் இந்த நிலையில் மனதில் ஒரே ஒரு அலைதான் இருக்கும். இந்த நிலையில் மனம் அது தியானிக்கும் வடிவத்தை எடுத்து அந்த வடிவமாகவே மாறிவிடும்.
ப்ராணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சியை இந்த பயிற்சிகளின் நடுவே செய்துவந்தால் இரட்டிப்பான பயன்களை பெறலாம். மூச்சை நம் பிரஞ்ஞையுடன் இழுப்பதும், நிறுத்துவதும் பிராணாயாமம் எனப்படுகிறது. யோக சாஸ்திரத்தின் படி ஒருவர் 20 நிமிடங்கள் மூச்சை நிறுத்த முடிந்தால் அவருக்கு "அந்தர தாரனை "கைகூடி விட்டது என்று அர்த்தம். இந்த படிநிலைகளை கடந்த பிறகே ஒருவர் தியானம் என்கிற மனம் அற்றுப்போன நிலையை அடைய பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த பயிற்சிகளை நினைத்த நேரங்களிலெல்லாம் செய்வதைவிட பிரம்மமுகூர்த்தத்தில் அதாவது அதிகாலை 4 முதல் 6 மணி வரையில் செய்தால் மிகப் பெரிய நன்மையை தரும்.
Credits = pragayata