தொலைந்த செல்வம் மீண்டும் பெருக இலட்சுமி பூஜை செய்வதெப்படி?
By : Kanaga Thooriga
நம் மரபில் அனைத்து நாள்களும் மிக முக்கியமானவை. அனைத்து நாட்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. இருப்பினும் வாரத்தின் ஏழு நாட்களில் சிறப்பு மிகுந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுவதுண்டு. அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமை என்பது அம்பாளுக்கு உகந்த தினமாக கருதப்படுகிறது. சக்தி, லட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகிய மூவருக்கும் இது உகந்த தினமாக இருப்பது தான் சிறப்பு.
வெள்ளிக்கிழமையை வட இந்தியாவில் சுக்ரவார் என்று அழைப்பர். சுக்ரவார் என்பது சுக்கிரனை குறிக்கும். நம் ஜோதிட சாஸ்திரத்தின் படி சுக்கிரன் என்பவர் அழகு மற்றும் செல்வத்தின் அதிபதியாவார். அதனாலேயே வெள்ளிக்கிழமை என்பது செல்வத்துக்குரிய நாளாக கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமையில் பெண் குழந்தை பிறந்தால் அல்லது ஏதேனும் பொருள் கிடைத்தால் நம் வீட்டிற்கு மகா லட்சுமியே வந்ததாக கருதுகிறோம்.
அதே போல வெள்ளிக்கிழமை நாளில் பிறருக்கு அவசர நிலை தவிர மற்ற நேரங்களில் பெரும்பாலும் தானம் வழங்குவதுமில்லை. இதற்கிடையில் ஒருவர் தன் பொருளாதார தடைகளில் இருந்து விடுபட, தொலைத்த பணத்தை திரும்ப பெற இலட்சுமி வழிபாடு செய்வது உகந்ததாகும்.
வெள்ளிக்கிழமையில் இலட்சுமி விரதம் இருப்பதால் செல்வ செளபாக்கியத்தின் கதவுகளை தன்னை வழிபடுவோருக்கு அன்னை இலட்சுமி தேவி திறப்பதாக ஐதீகம். வெள்ளிக்கிழமை விரதம் என்பது சூரிய உதயத்திலிருந்து சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல் இருப்பது. உணவை மறுப்பதன் மூலம் இறைவன் மீதான நம் பக்தியை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு அமைகிறது.
இந்த விரத நாளில் உடல் தூய்மையும், மனத் தூய்மையும் பேணுவது அவசியம். அடுத்ததாக எத்தனை வெள்ளிக்கிழமை இந்த விரதத்தை மேற்கொள்ள போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். வீட்டை நன்றாக சுத்தம் செய்து, வாசலில் கோலமிட்டு இலட்சுமி தேவியின் திருவுருவை அலங்கரித்து வழிபாடு செய்வது உகந்த்தாகும்.
வழிபாட்டிற்கு பின் தேவையோடு இருப்பவர்களுக்கு பிரசாதத்தை தானம் செய்வது நல்லது.
இவ்வாறு செய்வதால் இலட்சுமி தேவியின் அருளையும். சுக்கிர பகவானின் அருளையும் ஒருவர் பெற முடியும். ஆனந்தம், செளகரியம், உறவுகளில் இணக்கம், ஆடை ஆபரணம் அனைத்து விதமான வளங்களும் ஒருவருக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.