Kathir News
Begin typing your search above and press return to search.

செல்வத்தை வாரி வழங்கும் உப்பு மற்றும் மஞ்சள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் !

செல்வத்தை வாரி வழங்கும் உப்பு மற்றும் மஞ்சள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் !
X

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  11 Nov 2021 12:31 AM GMT

வீட்டில் உயிர்ப்பு மிக்க பகுதிகளுள் ஒன்று சமையல் அறை. சமையலறையின் உயிர்ப்பு மிக்க பொருள்களுள் மிக முக்கியமானவை இரண்டு உப்பு மற்றும் மஞ்சள். உப்பு உணவின் சுவையை கூட்டுவது மற்றும் மஞ்சள் உணவுக்கான நிறத்தை கொடுப்பது. ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் இவை பெரும் பங்கு வகிப்பதால் இவை இரண்டும் மிகவும் முக்கியமான பொருட்கள் என்று வகைப்படுத்தப் படுகின்றன.

நம்முடைய புராணங்களின் படியும், முன்னோர்களின் கூற்றுபடியும் உப்பு என்பது செல்வ வளத்தை ஈர்க்கும் ஒரு பொருள். மேலும் உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது போல, உப்பு இல்லாத வீட்டில் இலட்சுமியின் அம்சம் இருப்பதில்லை என்பது நம்பிக்கை.

ஆரோக்கியம், சுவை இவற்றையெல்லாம் தாண்டி இந்த இரு பொருட்களுக்கும் அதிகப்படியான ஆன்மீக கூறுகளும் உண்டு. மற்றும் வாஸ்து சாஸ்திரத்தில் இந்த இரண்டு பொருட்களுக்கும் அதிக முக்கியத்துவம் உண்டு. மஞ்சள் என்பது விநாயகரின் அம்சம். அதனால் தான் எந்த ஒரு சுபகாரியத்திலும் விநாயகரின் திருவுருவத்தை மஞ்சளில் பிடித்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம்.

அமைதி ஆனந்தம் இந்த இரண்டு அம்சங்களின் குறியீடாக மஞ்சளும் உப்பும் திகழ்வதால் இவை மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. மேலும் ஒருவரின் ஜாதகத்தில் உள்ள தோஷம் மற்றும் சாபங்களுக்கு பரிகாரமாக உப்பு பயன்படுவதும் உண்டு. மேலும் மஞ்சள் என்பது சுப மங்களத்தின் அடையாளம், இதன் மருத்துவ குணங்கள் ஏராளம். அதே வேளையில், வீட்டில் நடக்க கூடிய சுபகாரியங்கள், சடங்குகளில் முதன்மையாக இடம் பிடிப்பது இந்த மஞ்சளே.

மஞ்சள் மற்றும் உப்பின் ஆன்மீக முக்கியத்துவத்தால் தான் திருமணம் போன்ற சுப காரியங்களில் திருமணத்திற்கு முன்பு நடக்கும் வைபவங்களில் முக்கியமானதாக உப்பு மஞ்சள் அல்லது உப்பு ஜவுளி என்பது போன்ற சடங்குகளெல்லாம் நம் முன்னோர்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

விநாயகர் மஞ்சளின் வடிவம், உப்பு இலட்சுமி உகந்த பொருள் . எனவே முழு முதற் கடவுளும் செல்வத்தை அருளும் அன்னையும் நம் வீட்டில் முழுமையாக குடி கொண்டிருக்க இந்த இரு பொருட்களும் நம் வீட்டில் இருப்பது அவசியம். பூஜை அறையிலும் இவற்றை வைக்கலாம். உப்புக்கு எதிர்மறையான ஆற்றலை ஈர்த்து கொள்ளும் தன்மை உண்டு என்பதால். உப்பை பூஜை அறை மற்றும் வீட்டின் பல்வேறு இடங்களில் வைப்பதால் அவை எதிர்மறை ஆற்றலை நீக்கி நமக்கு நல்ல ஆற்றலை மட்டுமே வழங்கும் என்பது நம்பிக்கை

Next Story
கதிர் தொகுப்பு
Trending News