திருக்கல்யாணம் நடைபெறாமல் சிவன் குருவாகவும் அம்பாள் மாணவியாகவும் இருந்து அருள்பாலிக்கும் தலம்
திருவானைக்கோவில் திருத்தலத்தில் சிவன் குருவாகவும் அம்பாள் மாணவியாகவும் இருந்து அருள் புரிந்து வருகின்றனர். இதனால் இந்த கோவிலில் இறைவனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுவது இல்லை.
By : Karthiga
அகிலத்து மக்களுக்கு இறைவன் குறித்த ஞானம் பிறக்க வேண்டி காவிரிக்கரையில் நாவல் மரங்கள் நிறைந்த வனத்துக்கு உமையவள் வந்தாள். காவிரியில் இருந்து எடுத்து வந்த நீரினால் லிங்கம் அமைத்து, ஓர் ஆடி மாதத்து வெள்ளிக்கிழமையன்று இறைவனை வேண்டி தவத்தை தொடங்கினாள். அவளது தவத்தை மெச்சி, சிவபெருமானும் காட்சி தந்து அம்பாளுக்கு ஞான உபதேசம் செய்தார்.
இப்பகுதியே திருச்சி அருகே இருக்கும் இன்றைய திருவானைக்கோவில். அகிலத்தைக் காக்க தவமிருந்ததால் அன்னைக்கு அகிலாண்டேஸ்வரி எனப்பெயர். காவிரி நீரில் இருந்து இத்தலத்து சிவபெருமான் உருவானவர் என்பதால் பஞ்சபூத தலங்களில் இது நீர்த்தலமாக (அப்பு) போற்றப்படுகிறது. இங்கு சுவாமி சன்னதி மேற்கு பார்த்தும், அம்பாள் சன்னதி கிழக்கு பார்த்துக் இருக்கிறது.
சிவபெருமான் குருவாக இருந்து, அம்பாளுக்கு உபதேசம் செய்ததால் அவள் சிஷ்யை ஆனாள். சிவபெருமானின் உபதேசம் இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அன்னை இப்போதும் சிஷ்யையாகவே இத்தலத்தில் இருக்கிறாள். அதனால் இத்தலத்தில் சிவனுக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுவதில்லை. உச்சிக்கால வேளையில் அகிலாண்டேஸ்வரி அம்பாள் சன்னதி மடப்பள்ளியில் இருந்து தயாராகும் அன்னமே சுவாமியின் சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு நைவேத்தியம் நடைபெறுகிறது.
அப்போது அம்பாள் சன்னதி பட்டர் சேலை அணிந்து, நெற்றியில் குங்குமத்துடன் அம்பாளின் ரூபத்தில் மடப்பள்ளியில் இருந்து பிரசாதத்துடன் புறப்படுவார். மேள தாளங்கள் முன்னே செல்லும். அப்போது அவருக்கு எதிரே யாரும் வரமாட்டார்கள். இருபுறமும் ஒதுங்கிக் கொண்டு அவரை வழிபடுவார்கள். அவர் பிரகார வலம் வந்து, ஜம்புகேஸ்வரர் சுவாமி சன்னதிக்கு சென்று நைவேத்தியங்களை சுவாமிக்கு படைத்து வழிபாடு நடத்துவார்.
இந்த உச்சிக்கால பூஜை தினம்தோறும் நடைபெறுவதைக் காணலாம். அம்பாள் சன்னதி கலைநயம் மிக்கது. ஆதிசங்கரர் படைத்த இரு ஸ்ரீசக்கரங்கள் இரு தாடகங்களாக அன்னையில் காதுகளை அலங்கரிக்கின்றன. நின்ற திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் அன்னை அருள்பாலிக்கிறாள்.
நன்கு மலர்ந்த செண்பகப்பூவைப் போல் வாசம் வீசும் திருமேனியையுடையவள் அன்னை அகிலாண்டேஸ்வரி. அவளது மூக்குத்தி ஒளியால் இந்த உலகம் ஒளிபெறுகிறது என்று, லலிதா சகஸ்ரநாமத்தில் அம்பாளை ஆதிசங்கரர் வர்ணிக்கிறார். அதுபோல் எதிரிகளே இல்லாத நிலையை பெற வேண்டுமானால் அகிலாண்டேஸ்வரியை வணங்க வேண்டும் என்று செளந்தர்ய லஹரி கூறுகிறது. அகிலாண்டேஸ்வரி காலையில் லட்சுமியின் வடிவாகவும், உச்சிக்காலத்தில் பார்வதியின் வடிவாகவும், இரவில் சரஸ்வதியின் வடிவாகவும் இருக்கிறாள்.
இக்கோயில் மடப்பள்ளியில் பணியாளாக இருந்தவர், அன்னையின் தாம்பூல எச்சிலை உண்டதால் காளமேகப் புலவராக மாறினார். ஆடி வெள்ளிக்கிழமைகளில் அகிலாண்டேஸ்வரி அம்பாள் சன்னதி இரவு முழுக்க திறந்திருக்கும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய தரிசனம் செய்வார்கள்.