ஏழு குரு பகவான்கள் ஒருசேர அருள் தரும் ஒரே திருக்கோவில் - உத்தமர் கோவில்
சப்த குருக்கள் என்று அழைக்கப்படும் ஏழு குரு பகவான்களைக் கொண்டு அருள் புரியும் ஒரே திருக்கோவிலை பற்றி காண்போம்.
By : Karthiga
திருச்சியில் இருந்து சேலம் செல்லும் பாதையில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது உத்தமர் திருக்கோவில். ஏழு குரு பகவான்களை கொண்டு விளங்கும் ஒரே திருத்தலம் இதுவாகும். இதனால் இந்த ஆலயத்தை 'சப்த குரு தலம் ' என்று அழைக்கிறார்கள். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது மூன்றாவது திவ்யதேசமாகும். இவ்வாழையின் மூலவரின் பெயர் ,புருஷோத்தமன்' என்பதாகும். தாயார் 'பூரணவல்லி'.
யுகங்களின் தொடக்கத்தில் சிவபெருமானை போலவே பிரம்மனுக்கு ஐந்து தலைகள் இருந்துள்ளன. ஐந்து தலைகள் இருப்பதால் தன்னை ஈசனுக்கு சமமானவராக கருதி ஆணவம் கொண்டதால் பிரம்மனின் ஒரு தலையை கொய்தார் ஈசன். அப்படி பிரம்மனின் தலையை துண்டித்ததால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது .அதோட பிரம்மனின் கபாலமும் சிவனின் கையுடன் ஒட்டிக்கொண்டது. சிவன் எவ்வளவோ முயன்றும் அவரால் கபாலத்தை பிரிக்க முடியவில்லை.
அவருக்கு படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் கபாலமே எடுத்துக் கொண்டது. பசியில் வாடிய சிவன் கபாலத்தையே பிச்சைப்பாத்திரமாக ஏந்தி கொண்டு பிச்சாடனர் வேடத்தில் பூலோகம் வந்து பல தளங்களுக்கு சென்றார். அவர் இத்தலத்திற்கு வந்தபோது பெருமாள் சிவனின் பாத்திரத்தில் பிச்சை இடும்படி மகாலட்சுமியிடம் கூறினார். மகாலட்சுமியும் கபாலத்தில் பிச்சை இட அது பூரணமாக நிரம்பி சிவனின் பசியை நீக்கியது. இதனால் தாயார் 'பூரணவல்லி' என்று பெயர் பெற்றாள்.
பெருமாளும் பள்ளி கொண்ட கோலத்தில் சிவனுக்கு காட்சி தந்தால் புருஷோத்தமர் எழுந்தருளியுள்ள திருத்தலமாதலால் உத்தமர் கோவில் என புகழ் பெற்றது. பெருமாள் கிழக்கு பார்த்தபடி பள்ளிகொண்ட கோலத்திலும் உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்திலும் உத்தியோக விமானத்தின் கீழ் அருள் பாலிக்கிறார். பெருமாளுக்கு நேர் பின்புறத்தில் சிவன் மேற்கு பார்த்தபடி லிங்க வடிவில் காட்சி தருகிறார். பிரம்மா விஷ்ணு சிவன் அருளும் ஆலயமாக இந்த திருத்தலம் இருக்கிறது.
தன் மனைவி சரஸ்வதியுடன் பிரம்மன் அருள் பாலிக்கும் இவ்வாலயத்தில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் சிவனும் பெருமாளும் இணைந்து வீதி உலா வருவது தனி சிறப்பாகும். பிரம்மனுக்கு தயிர்சாதம் ஆத்தி இலை படைத்தும் சரஸ்வதிக்கு தாமரை மலர் சூட்டியும் வெள்ளை வஸ்திரம் அணிவித்து விடுபட்டால் ஆயுள் கூடும் கல்வி சிறந்து விளங்கும் என்பது நம்பிக்கை. ஆண்டுதோறும் வரும் குரு பெயர்ச்சி அன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
இவ்வாலய தல விருட்சமாக கதலி வாழைமரம் உள்ளது. தீர்த்தமாக கதம்ப தீர்த்தம் இருக்கிறது. சிவகுரு ஆன தட்சிணாமூர்த்தி, விஷ்ணு குருவான வரதராஜர், குரு பிரம்மா, சக்தி குரு சௌந்தர்ய பார்வதி, ஞானகுரு சுப்பிரமணியர், தேவகுரு பிரகஸ்பதி, அசுர குரு சுக்ராச்சாரியார் ஆகிய ஏழு பேரும் குருவிற்கு உரிய இடங்களில் அமர்ந்து அருள் தருகிறார்கள். குரு பெயர்ச்சியின் போது இந்த ஏழு குருக்களுக்கும் விசேஷ அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன.