ஜெயம் அருளும் சேதுக்கரை ஜெயவீர ஆஞ்சநேயர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புண்ணிய பூமி சேதுக்கரை. சேது என்றால் பாலம் என்று பொருள். பாலம் கட்டிய இடத்தில் உள்ள கரை என்பதால் இத்தளம் 'சேதுக்கரை' என்று அழைக்கப்படுகிறது.
By : Karthiga
திருப்புல்லாணியில் எழுந்தருளியுள்ள ஆதி ஜெகன்னாத பெருமாளை, இராமபிரானின் தந்தை தசரத மகாராஜா வழிபட்டதன் பேரில் ராமபிரான் பிறந்ததாக ஐதீகம். பின் நாட்களில் அதே திருப்புல்லாணிக்கு வந்து அங்கிருக்கும் கடற்கரை பகுதியில் பாலம் அமைத்து, ராமர் இலங்கைக்கு சென்றதாக புராணம் கூறுகிறது. சேது கரையில் பாலம் அமைப்பதில் அனுமன் தலைமையிலான வானர சேனைகள் ராமபிரானுக்கு உதவி புரிந்தன. இதனாலையே அனுமனுக்கு சேது கரையில் கோவில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இத்தளத்தில் எழுந்தருளியுள்ள அனுமனுக்கு ஸ்ரீ சேது பந்தன ஜெயவீர ஆஞ்சநேய ஸ்வாமி என்பது திருநாமம். கடலை நோக்கி அமைந்துள்ள இந்த சிறிய கோவில் முன் மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என்ற அமைப்போடு திகழ்கிறது. ராமாயணத்தில் சேதுக்கரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாகும். காரணம் சீதாதேவியை இலங்கையில் இருந்து மீட்டுவர ராமன் இங்கிருந்துதான் ராமசேதுபாலத்தை வானர சேனைகளின் உதவியோடு கட்டியதாக கூறப்படுகிறது . ராமபிரான் பாதங்கள் பட்ட சேது கரையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சேதுபந்தனை ஜெய வீர ஆஞ்சநேயரை வணங்கினால் நாம் முன்னெடுக்கும் எந்த காரியமாக இருந்தாலும் அது வெற்றியாக தான் முடியும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
வைகானச ஆகம முறைப்படி பூஜை செய்யப்படும் இந்த ஆலயத்தில் தினமும் காலையில் மட்டும் ஒரு கால பூஜை நடைபெறுகிறது . அதே நேரம் காலை முதல் மாலை அவரை அனுமன் தரிசனம் செய்வதற்காக ஆலயம் திறந்து வைக்கப்பட்டிருக்கும். முதலில் திருப்புல்லாணிக்குச் சென்று அங்கு எழுந்தருளியுள்ள ஆதி ஜெகநாத பெருமாள், தர்ப்பசயன ராமர் மற்றும் பட்டாபிஷேக ராமர் ஆகியோரை தரிசிக்க வேண்டும். அதன் பிறகு சேது கரைக்கு சென்று ஸ்ரீ சேது பந்தன ஜெய வீர ஆஞ்சநேய சுவாமியை தரிசிக்க வேண்டும் என்பது நியமமாக உள்ளது.
அவ்வாறு செய்யும்போது ஆதி ஜெகநாதர் பெருமாள் பட்டாபிஷேக ராமர் ஆகியயோர் ஆசியுடன் சேதுக்கரை அனுமனின் ஆசியும் பரிபூரணமாக கிடைக்கும் என்கிறார்கள். ராமேஸ்வரத்திற்கு செல்லும் போது தவறாமல் சேதுகரைக்கு சென்று இங்கு எழுந்தருளியுள்ள ஸ்ரீ சேதுபந்தன ஜெய வீர ஆஞ்சநேய ஸ்வாமியை தரிசித்து திரும்புங்கள். ராமநாதபுரத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் சேதுக்கரை அமைந்துள்ளது. திருப்புல்லாணியில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
SOURCE :DAILY THANTHI