கலியுக கவலைப் போக்கும் கலிங்க நாதீஸ்வரர் திருக்கோவில்!
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள இருளஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ளது தாயினும் நல்லாள் சமேத கலிங்கநாதீஸ்வரர் கோவில்.
By : Karthiga
கி.பி பத்தாம் நூற்றாண்டு கல்வெட்டுகள் இவ்வாலயத்தில் கண்டறியப்பட்டிருப்பதால் இது சோழர் காலத்திய கோவில் என்பது அறிய முடிகிறது. இத்தல இறைவனான கலிங்க நாதீஸ்வரரின் ஆதி கால பெயர் 'கலீயஞ்சீஸ்வர மகாதேவர்' என்பதாகும். இப்பெயரை மண்டபத்தில் மேற்கு பகுதி சுவரில் காணப்படும் கல்வெட்டின் வாயிலாக அறிய முடிகிறது. 18 அக்டோபர், 1237 இல் ராஜராஜதேவன் எனப்படும் மூன்றாம் ராஜராஜனின் 22 ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டது. கலியுகத்திற்கு அஞ்சுவோருக்கு அபயம் தந்தருளும் இறைவன் என்பதால் 'கலியஞ்ஜீஸ்வரன்' என பெயர் பெற்றார்.
கலியஞ்சீஸ்வரனே மருவி கலிங்கநாதீஸ்வரர் என ஆனதாக சொல்லப்படுகிறது. சனி பிரதோஷத்தில் தொடங்கி தொடர்ந்து ஏழு பிரதோஷங்கள் இறைவனை வழிபடுபவருக்கு கலிகால கஷ்டங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்பது அடியார்களின் நம்பிக்கை. இத்தல இறைவி தாய்க்கு தாயாக விளங்குகிறார். இத்தல அம்மனின் பெயரான 'தாயினும் நல்லாள்' என்ற பெயர் வேறு எந்த சிவாலயத்திலும் அம்மன் கோவில்களிலும் காண முடியாத பெயராக உள்ளது. இக்கோவிலின் எதிரே பிரம்மாண்ட திருக்குளம் அமைந்துள்ளது. இது சங்கு தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.
கலி அஞ்சி அபயம் தந்த நாதர் என்பதால் நவகிரக சந்நிதிக்கு இங்கு இடம் இல்லை. கோபுரத்தின் கீழே குபேரன், நடராஜர் , ரம்பா, ஊர்வசி போன்ற சிற்பங்களும் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வாலய நந்தி தேவர் மிகவும் சிறப்பானவர். இவரது வலது கண் சூரியன் வடிவத்திலும் இடது கண் சந்திர வடிவத்திலும் அமைந்துள்ளது. இது வேறு எங்கும் காண முடியாத சிறப்பு. கோவிலுக்கு செல்ல சென்னை மார்க்கத்தில் இருந்து பூந்தமல்லி வழியாக அரக்கோணம் மார்க்கத்தில் பேரம்பாக்கம் வந்தடைந்து பேரம்பாக்கத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இக்கோவிலை அடையலாம்.