காட்மாண்டு கிருஷ்ணர் கோவில்!
நேபாள நாட்டின் காட்மாண்டுவில் மிகச் சிறந்த கல் நினைவுச் சின்னங்களில் ஒன்றாக கருதப்படுவது அங்குள்ள கிருஷ்ணர் கோவில்.
By : Karthiga
காட்மாண்டுவின் பதன் தர்பார் சதுக்கத்தில் அமைந்துள்ளது கிருஷ்ணர் கோவில். இந்த கோவில் ஷிஹாரா கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டிருக்கிறது. மதுராவில் உள்ள பதான் என்ற இடத்தில் கி.பி 1637 ஆம் ஆண்டு சித்தி நரசிம்ம மல்லாவால் கட்டப்பட்ட கிருஷ்ணர் கோவிலின் பிரதியாக இந்த கோவில் இருக்கிறது. சித்தி நரசிம்மம் மல்லாவின் கொள்ளுப்பேத்தி அன்ன யோகமதி என்பவர் கி.பி 1723 ஆம் ஆண்டு பதந்தர் சதுக்கத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலை கட்டியிருக்கிறார்.
இந்த கிருஷ்ணர் கோவில் 21 தங்க சிகரங்களின் மூன்று தலங்களைக் கொண்டு அமைந்துள்ளது. முதல் தளத்தில் கிருஷ்ணரும் இரண்டாவது தளத்தில் சிவபெருமானும் மூன்றாவது தளத்தில் லோகேஸ்வரரும் அருள் பாலிக்கின்றனர். இந்த ஆலயம் முழுவதையும் ராமாயண காட்சிகள் அற்புதமாக அலங்கரிக்கின்றன. கோவிலுக்குள் நுழையும் வழிகளில் பல தெய்வங்களின் சிற்பங்கள் கல்லால் செதுக்கப்பட்டுள்ளன. கோவிலின் முதல் தளத்தில் கிருஷ்ணரும் அவரது மனைவிகளான சத்யபாமா, ருக்மணி ஆகியோரும் உள்ளனர்.
இந்த கடவுளர்கள் அமைந்த முதல் தளம்தான் முக்கியமான வழிபாட்டுக்குரிய இடமாக உள்ளது. இரண்டாவது மாடியில் சிவபெருமானின் உருவம் உள்ளது. தற்போது எந்த சிலைகளும் இல்லாமல் காணப்படும் மூன்றாவது தளத்தில் புத்த மதத்தைச் சேர்ந்த அவலோகி ஈஸ்வரரின் சிலை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கோவிலானது ஷிகாரா எனப்படும் இந்திய துணைக்கண்ட கட்டிடக்கலை பாணியை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்கு எதிரே கிருஷ்ணரின் வாகனமான கருடன் சிலை ஒன்று அமர்ந்து கைகூப்பிய நிலை இதில் மிக உயரமான தூணில் மீது அமைக்கப்பட்டுள்ளது.
மதுராவில் கட்டப்பட்ட கிருஷ்ணர் கோவிலின் அடிப்படையில் அந்த மன்னனின் வாரிசான கொள்ளுப்பேத்தியால் காட்மாண்டுவில் உள்ள கோவில் கட்டப்பட்டதாக தல வரலாறு சொல்கிறது. இந்த ஆலயம் பல்வேறு இயற்கை பேரழிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு மக்களின் பங்களிப்பினால் ஆலயம் சீரமைக்கப்பட்டு 2018 -ஆம் ஆண்டு மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.