Kathir News
Begin typing your search above and press return to search.

ஒட்டுமொத்த சிறப்புகளையும் ஒருங்கே கொண்ட 'ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம்' தோன்றிய லலிதாம்பிகை ஆலயம்!

திருமீயச்சூர்.அகிலம் சிறக்க தனது திவ்ய நாமங்களைக் கொண்டே அன்னையானவள் தன்வடிவான தேவதைகள் மூலமாக ஸ்ரீ லலிதா சகரஸ்ரநாமத்தை உருவாக்கிய தலம் திருமீயச்சூர்.

ஒட்டுமொத்த சிறப்புகளையும் ஒருங்கே கொண்ட ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் தோன்றிய லலிதாம்பிகை ஆலயம்!

KarthigaBy : Karthiga

  |  16 Dec 2023 4:00 AM GMT

திருமீயச்சூர் மேகநாதர் கோயில் என்பது சம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும். இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 56ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தில் சூரியன் வழிப்பட்டான் என்பது பழைய காலத்தில் இருந்து நம்பிக்கை.அம்பிகை திருத்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த தலம். ஸ்ரீ லலிதாம்பிகை வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்டவாறு அமைந்துள்ளார். கிருத யுகத்திலிருந்து உள்ள திருக்கோயில் இது.


இக்கோயிலின் உள்ளேயே திருமீயச்சூர் இளங்கோயில் அமைந்துள்ளது. சோழர் கால கோயில்களான இந்த இரு கோயில்களும், இராஜேந்திர சோழன், செம்பியன் மாதேவி முதலானவர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டவை. இது சோழ நாட்டு காவிரி தென்கரையின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களில் 56- வது கோவிலாகவும் அமைந்துள்ளது. ஸ்ரீலலிதாம்பிகையை தரிசனம் செய்ய வந்த காஞ்சி மகாப்பெரியவர், அம்பிகையை விட்டு செல்ல மனம் வராமல் பிடிவாதம் பிடித்தது அம்பிகையின் பெருமைக்கு ஒரு சான்றாகக் கூறப்படுகிறது.


1999 ஆம் வருடம் ஒரு பக்தையின் கனவில் அம்பாள் தங்கக்கொலுசு கேட்டதால், அவர் திருமீயச்சூர் ஆலய அர்ச்சகர்களிடம் தொடர்பு கொண்டு கேட்கையில் அம்பிகையின் சிலாரூபத்தில் கொலுசு அணிவிக்கும் அமைப்பு இல்லை எனத் தெரிவித்தனர். அந்த பக்தை மீண்டும் வலியுறுத்திக் கேட்கையில் கவனத்துடன் தேடிப்பார்த்தனர். ஆண்டுக்கணக்கில் அபிஷேகம் செய்திருந்ததில் அபிஷேக பொருட்கள் கொலுசு அணிவிக்கக்கூடிய துவாரத்தை அடைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் அம்பிகைக்கு தங்கக்கொலுசு அணிவிக்கப்பட்டது.


சூரியனின் தேரோட்டியான அருணன் அந்த பதவியைப் பெற மாற்றுத்திறனாளியாக இருந்த போதும் முயன்ற போது சூரியனால் உடல் குறைபாடு சுட்டிக்காட்டப்பட்டு கேலி செய்யப்பட்டதால், சிவபெருமான் சூரியன் ஒளியிழக்கும் படி சபிக்க, தன் தவறு உணர்ந்து, சாபம் தீர தவம் செய்து சிவபெருமான அருளால் தன் கருமை நிறம் விடுபட்டு இங்கு வெளிச்சம் பெற்றார். சூரிய பகவான் தன் கருமை நிறத்திலிருந்து மீண்டதால் ’மீயச்சூர்’ என்று வழங்கப்படுகிறது.


திருமீயச்சூர் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் தோன்றிய திருத்தலம். இங்குதான் ஸ்ரீ ஹயக்ரீவர், அகத்திய முனிவருக்கு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்தார். அகத்தியரும் ஒரு பௌர்ணமி நாளன்று ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தினால் திருமீயச்சூர் லலிதாம்பிகையை வழிபட்டதுடன் ஸ்ரீலலிதா நவரத்தின மாலை என்ற பாடலையும் தமிழில் இயற்றி அம்பிகைக்கு அர்ப்பணித்தார். இதனை தினமும் படித்து லலிதாம்பிகையை வழிபட சகல நலன்களும், செல்வச்செழிப்பையும் அடைவது உறுதி என்று கூறப்படுகிறது.


கருவறை தேவகோட்டத்தில் உள்ள சிற்பங்களில் தெற்கு தேவகோட்டத்தில் உள்ள சிற்பம் சிற்பக் கலையின் மிகச்சிறந்த கலைப்படைப்பாகும். உமையின் கோபத்தைப் போக்கும் நிலையில் கங்காதர மூர்த்தியாக உள்ள மூர்த்தியின் வடிவம் சிறப்பானது. இதனை சேத்ரபுராணேசுவரர் என்று அழைக்கின்றனர். இச்சிற்பத்தில் அம்பாளில் முகத்தில் வலது புறம் கோபமாகவும், இடது புறம் பார்த்தால் புன்னகைத் தவழும் நிலையிலும் இருப்பதைக் காணலாம்.உலகில் கணவன் – மனைவிக்கான இணக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில் இச்சிற்பம் அமைந்துள்ளது.


தலவரலாறின்படி காசிப முனிவரின் மனைவிகளான வினதை, கர்த்துரு ஆகிய இருவரும் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டு பிள்ளைபேறு பெற்றனர். சூரிய பகவான் இங்கு தவமியற்றி சாப விமோசனம் பெற்றார்.கருத்து வேற்றுமையாலும், இதர பிரச்சனைகளாலும் பிரிந்திருக்கும் தம்பதியினருக்கும், கொடிய நோய்கள், கிரக தோஷங்களால் ஆயுள் குறைவு ஆகியவற்றிற்கும் இந்த தலம் பரிகாரத் தலமாகக் கூறப்படுகின்றது. இங்கு பிரண்டை சாதத்தை தாமரை இலையில் வைத்து சிவபெருமானுக்கு படைத்த பின்னர் நோய்க்கு பரிகாரமாக உண்பர்.திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையிலும் அருகிலுள்ள பேரளம் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்து உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News