பஞ்ச பூதங்களை குறிக்கும் சிவாலயங்களில் இந்த கோவில், பூமியை குறிக்கிறது !
By : Dhivakar
சிவபெருமானுக்கு அர்பணிக்கப்பட்ட சிவாலயங்களுள் காஞ்சியின் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம். மேலும் பஞ்ச பூதங்களை குறிக்கும் சிவாலயங்களில் இந்த கோவில், பூமியை குறிக்கிறது. இங்கிருக்கும் லிங்கத்தை ப்ரித்வி லிங்கம் என அழைகின்றனர். இந்த கோவில் கிட்டதட்ட 25 ஏக்கரில் கட்டப்பட்டதாகும். இந்தியாவில் மிகப்பெரிய கோவில்களின் வரிசையில் இதுவும் முக்கியமான ஒன்று. இந்த கோவில் வளாகத்தில் தென்புற கோபுரம் மிகவும் உயரமானது கிட்டதட்ட 58.5 மீட்டர் உயரம் கொண்டது .
புராணங்களின் படி, பார்வதி தேவி இங்கே இருக்கும் புனிதமான மாமரத்தின் அடியில் சிவபெருமானை நினைத்து தவம் புரிந்ததாகவும் அருகில் இருந்த மணலை கொண்டே இந்த சிவபெருமானை வடித்ததாகவும் சொல்லப்படுகிறது. அந்த மாமரத்தின் அடியிலேயே சிவபெருமான் பார்வதி தேவிக்கு காட்சிக்கொடுத்தால் அவர் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரை பெற்றுள்ளார்.
இந்த கோவில் கிபி 600 முதல் இருப்பதாக நம்பப்படுகிறது . ஆனால் இன்று இருக்க கூடிய கோவில் அமைப்பு 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது என சொல்லப்படுகிறது. ஆயிரங்கால் மண்டபம் இந்த கோவில் கட்டிடக்கலையின் மற்றொரு ஆச்சர்யம். இங்கிருக்கும் இந்த மாமரம், 3000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. இந்த மரம் நிகழ்த்தும் அதிசயம் யாதெனில், இந்த மரத்தில் நான்கு விதமான பழங்கள், நான்கு விதமான தட்பவெட்ப சூழலில் காய்க்கிறது.
நாம் சிவாஜியின் நடிப்பில் கண்டு மெய்சிலிர்த்த திருக்குறிப்புத்தொண்ட நாயனாரின் வரலாறு நிகழ்ந்த இடம் இது தான். சிவபெருமான் அந்தணர் வேடம் தரித்து தன்னுடைய ஆடையை சூரிய அஸ்தமனத்துக்குள் துவைத்து தர வேண்டும் என கேட்டு திருவிளையாடல் நிகழ்த்தி அந்த ஆடையை துவைக்க விடாமல் செய்தார் சிவபெருமான். இந்த ஏமாற்றம் தாங்கள் தன் தலையை கல்லில் மோதி உயிர் துறக்க எண்ணிய திருக்குறிப்புத்தொண்டரின் உயிரை மீட்ட இடம் இதுவே. இந்த கோவில் பற்றிய குறிப்புகள் நம் தமிழ் இலக்கியங்களான மணிமேகலை மற்றும் பெரும்பாணாற்றுப்படை ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன.
இந்த கோவில் வளாகத்தினுள்ளே நிலதிங்கள் துன்டம் பெருமாள் கோவில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு இங்கிருக்கும் பெருமாள் வாமன மூர்த்தியாக வழிபடப்படுகிறார். ஆழ்வார்கள் பாடிய 108 திவ்யதேஷங்களுள் ஒன்றாக இந்த இடம் உள்ளது.
Image : India Tales