மாந்தி வழிபட்ட மாந்தீஸ்வரர்: திருவாலங்காடு ஈசன்- யார் இந்த மாந்தி?
மாந்தி என்பவர் யார் என்பது பற்றியும் அவர் தோஷம் நீங்கியது பற்றியும் அவர் வணங்கிய சிவலிங்கம் எழுந்தருளியுள்ள ஆலயத்தின் சிறப்பு பற்றியும் காண்போம்.
By : Karthiga
சனிபகவானின் புதல்வர் மாந்தி. ஒரு முறை இவர் மீது பல்லி ஒன்று விழுந்தது. அதற்குரிய பலன் தீயதாக இருந்ததால் வருத்தப்பட்ட மாந்தி தன் தந்தையிடம் இது குறித்து முறையிட்டார். சனி பகவானோ சிவபெருமானை நோக்கி தவம் செய்யுமாறு கூறினார். அதன்படி மாந்தி திருவாலங்காடு வந்து தவம் செய்தார். சிவபெருமான் மாந்திக்கு நேரில் திருக்காட்சி அருளினார். அப்போது மாந்தி தனக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்கி அருள வேண்டினார். அதற்கு ஈசன்" ஒரு மண்டலம் என்னை வழிபட்டு தோஷம் நீக்கிக்கொள்" என்று அருளினார்.
மாந்தி இத்திருத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஒரு மண்டலம் வழிபட்டார். இதனால் அவரது தோஷம் நீங்கியது. மாந்தி வழிபட்ட சிவலிங்கம் மாந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது. இந்த சிவலிங்கத்தை வழிபட்டால் அஷ்டமச்சனி அர்த்தாமச் சனி, ஜென்ம சனி போன்றவற்றின் தாக்கம் குறையும், அதோடு தீராத நோயும் தீரும்,திருமண தடை அகலும் ,குழந்தை பாக்கியம் கிடைக்கும் கடன் சுமையாக அகன்று நிம்மதி ஏற்படும் மாணவ மாணவிகளுக்கு கல்வி அறிவு பெருகும்.