இன்னல்களைப் போக்கும் இருக்கன்குடி மாரியம்மன்
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்பர். அந்த வகையில் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெறும் ஆடி கடைசி வெள்ளி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
By : Karthiga
பழமை வாய்ந்த இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையில் திருவிழா நடைபெறும். அதேபோல இந்த ஆண்டு திருவிழா கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ரிஷப வாகனத்தில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி கடைசி வெள்ளிக்கிழமையான பதினோராம் தேதி நடைபெறுகிறது.
இதில் தமிழ்நாடு மட்டுமன்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் கலந்து கொள்வர். பொதுவாக அனைத்து கோவில்களிலும் உற்சவரும் மூலவரும் ஒரே இடத்தில் இருப்பது வழக்கம். ஆனால் இந்த கோவிலில் உற்சவரும் மூலவரும் தனித்தனி கோவிலில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.ஆடி மாத திருவிழாவில் கடைசி வெள்ளிக்கிழமை அன்று 2 மணிக்கு மேல் உற்சவர் அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து மாரியம்மன் கோவிலில் உள்ள கொலுமண்டபத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
பின்னர் மறுநாள் அதிகாலையில் உற்சவர் அம்மன் மீண்டும் வீதி உலாவாக கோவிலுக்கு செல்வது வழக்கம். ரிஷப வாகனத்தில் அம்மன் வீதி உலா வரும் இந்த நிகழ்வானது வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் என்பதை இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு தினமும் வரும் பக்தர்கள் பல்வேறு வகையான நேர்த்திக்கடன் செய்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். தீராத வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள் வயிற்று வலி குணமாக அம்மனை மனதார வேண்டிக் கொள்வர்.
நோய் குணமானதும் கோவிலுக்கு வந்து மாவிளக்கு போட்டு சர்க்கரை பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவர். அதேபோல கண் வலி, கண்புரை உள்ளிட்ட நோய்கள் தீர வேண்டியும் இங்கு வந்து வழிபடும் பக்தர்கள் எண்ணிக்கை ஏராளம். இந்த வேண்டுதலுக்கு 'வயனம் காக்குதல்' என்று பெயர். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த நோயிலிருந்து விடுபட வேண்டி இந்த கோவிலுக்கு வந்து 11, 21, 31, 41 நாட்கள் என்று தங்குவார் . அப்படி வந்து தங்கும் பக்தர்கள் தங்கி இருக்கும் நாள் அனைத்திலும் கோவில் வளாகத்தில் இருந்து அம்மனுக்கு நடைபெறும் அபிஷேகத்தை கண்டு களித்து அந்த அபிஷேக தீர்த்தத்தை வாங்கி கண்ணில் வைத்துக் கொள்வார்.
இவ்வாறு தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலமாக விரைவில் கண்நோய் நீங்கும் என்பது பக்தர்களின் அபார நம்பிக்கை. அதேபோல குழந்தை வரம், கல்வி, பாக்கியம், தொழில் விருத்தி என பல்வேறு காரியங்கள் நிறைவேறவும் அம்மனை மனமுருக வேண்டி கொள்கின்றனர். அவ்வாறு வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் இங்கு வந்து தீச்சட்டி எடுத்தல், மாவிளக்கு போட்டு சர்க்கரை பொங்கல் வைத்தல், கரும்புத் தொட்டிலில் குழந்தையை வைத்து எடுத்து வருதல், என தங்களது நர்த்திகடனை அம்மனுக்கு பல்வேறு வகைகளில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.