Kathir News
Begin typing your search above and press return to search.

வாழை மரத்திற்கு தாலி கட்டும் சடங்கு ஏன்? அதனால் ஏற்படும் பலன்கள்

வாழை மரத்திற்கு தாலி கட்டும் சடங்கு ஏன்? அதனால் ஏற்படும் பலன்கள்
X

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  25 Jan 2023 12:45 AM GMT

இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் பல பிரச்சனையில் பிரதானமானது திருமணத்தடை. குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்கிற மீம்ஸ்கள் இணையத்தில் படு பிரபலம். விளையாட்டு ஒருபுறம் இருக்க, உண்மையில் திருமணத்தடை என்பது ஒரு பிரதான பிரச்சனை தான். திருமணத்தடைக்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் ஒரு பகுதியினருக்கு ஜாதக ரீதியான பிரச்சனை இருப்பதை பார்கக் முடிகிறது.

ஜாதக ரீதியாக திருமணத் தடை நிலவுபவர்களுக்கு அவரவரின் ஜாதக அமைப்புக்கு ஏற்ப ஜோதிடர்கள், ஆன்மீக பெரியோர்கள் பல பரிகாரங்களை சொல்வார்கள். அதில் வெகு பிரபலமானது வாழை மரத்திற்கு தாலி கட்டுவது.

வாழை மரத்திற்கு தாலி கட்டுவது என்கிற சடங்கு இந்தியா முழுவதிலும் பரவலாக இருக்கக்கூடிய ஒரு சடங்கு. திருமணம் ஆக வேண்டிய மணமகனுக்கு ஜாதகத்தில் இரு தாரம் என்றோ அல்லது விவாகரத்து அல்லது சேர்ந்து வாழ முடியாத சூழல் போன்ற அறிகுறிகள் தென்பட்டாலோ அதனை அகற்றுவதற்காக சொல்லப்படும் பரிகாரம் இது.

உதாரணமாக, ஒரு ஜாதகருக்கு அவருடைய ஜாதக அமைப்பின் படி முதல் தாரம் இறந்துவிடுவார் என்கிற பலனிருந்தால், அந்த தோஷத்தை நீக்க வாழை மரத்திற்கு தாலி கட்டும் பரிகாரத்தை செய்வார்கள். அதாவது மணமகன் வாழை மரத்தை மணமகளாக அதாவது தன் மனைவியாக பாவித்து தாலி கட்டுவார். பின் அந்த வாழை மரத்தை வெட்டி ஓடு நீரும் விட்டுவிடுவார்கள். அந்த வாழை மரத்திற்கு கட்டப்பட்ட தாலியை எளியோருக்கு தானம் அளிப்பார்கள். இந்த சடங்கின் மூலம் முதல் தாரம் இறந்ததாக கருதப்பட்டு, பின் வீட்டில் பார்த்த பெண் அல்லது விரும்பிய பெண்ணை திருமணம் செய்யலாம்.

இந்த சடங்கு இன்றும் பலரால் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஏன் வாழைமரத்தை தேர்வு செய்தார்கள் என்ற கேள்வி பலருக்கு இருக்கும். இந்த சடங்கில் மட்டுமல்ல, திருமணம் மற்ற நல்ல விஷேசங்கள் அனைத்திற்கும் வாழை மரத்தை வீடு வாயிலில் கட்டுவதன் காரணம் வாழை மரம் என்பது சுபிக்ஷத்தின் அடையாளம். வாழைமரத்தின் காய், மரம், இலை, கனி என எந்த பகுதியானலும் மற்றவருக்கு பயன்படக்கூடியது. மற்றும் விதையிட்டு வளரும் தன்மையின்றி கன்றாக வளரும் தன்மையுடையது. அதனால் மகாலட்சுமியின் அம்சமாக வாழை மரம் கருதப்படுகிறது. அதனாலேயே நம் மரபில் பல நல்ல காரியங்களுக்கு வாழை மரத்தை பயன்படுத்தினர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News