அமிர்த துளியில் இருந்து துளிர்த்த மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர்!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது மேலக் கடம்பூர் கிராமம்.இங்கு ஜோதிமின்னமை உடனாய அமிர்தகடேஸ்வரர் ஆலயம் உள்ளது.
By : Karthiga
திருப்பாற்கடலை கடைந்து அமுதகலசம் பெற்ற தேவர்களும் அசுரர்களும் முழு முதல் கடவுள் விநாயகரை வழிபடாமல் அதை உண்ண நினைத்தனர்.இதனால் கோபம் கொண்ட விநாயகர் அமுத கலசத்தை பூலோகத்தில் மறைத்து வைக்க எடுத்து வந்தார். அப்படி வருகையில் கலசத்தில் இருந்து ஒரு துளி அமுதம் கடம்பவனக்காட்டில் விழுந்து சுயம்புலிங்கமாக மாறியது. இந்த சிவலிங்கமே இவ்வாலயத்தில் மூலவராக வீற்றிருக்கும் அமிர்தகடேஸ்வரர் ஆவார் கடம்பவனமே காலப்போக்கில் கடம்பூர் என்றானது.
ராஜராஜ சோழனின் பறந்து விரிந்த சோழ தேசத்தின் ஒரு சிற்றரசாக மேலக் கடம்பூர் விளங்கியது.இப்பகுதியை சம்புவராயர்கள் ஆட்சி செய்தனர். ஆனால் இக்கோவில் சம்புவராயர்களாலோ அல்லது ராஜராஜ சோழனாலோ கட்டப்படவில்லை. சிற்பக்கலையிலும் இசையிலும் அதிகம் ஆர்வம் கொண்ட சாளுக்கிய வம்சத்து சோழ அரசனான முதலாம் குலோத்துங்கனால் கிபி 1100 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு சிதலமடைந்த இந்த ஆலயம் பல அன்பர்களின் திருப்பணி சேவையால் தற்போதைய நிலைக்கு உயர்வு பெற்றிருக்கிறது .யுகங்கள் தோறும் பலர் வந்து வழிபட்டு சென்றுள்ளனர் .அவர்களில் கிருத யுகத்தில் சூரியன் ,சந்திரன் ,உரோமச முனிவர் ,இந்திரன் ஆகியோரும் திரேதா யுகத்தில் பருவத தலைவனான பர்வத ராஜனும், துவாபர யுகத்தில் பதஞ்சலி முனிவரும் வணங்கியதாக சொல்லப்படுகிறது .அதை நினைவுறுத்தும் வகையில் இங்கே சிற்பங்களும் வடிவமைக்கப்பட்டன. திருஞானசம்பந்தர் ,திருநாவுக்கரசர், சுந்தரர் ,அருணகிரிநாதர் ,ராமலிங்கர், பாம்பன் சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஆகியோர் இவ்வாலய இறைவனை பற்றி பாடி இருக்கிறார்கள் .
கோவிலின் மகா மண்டபத்தில் தர்ம நந்தியும் பிரம்மசந்தி எனப்படும் பலிபீடமும் உள்ளது. இவைகளுக்கு வட திசையில் தென்முகம் நோக்கிய அம்பிகையின் தனி சன்னதி உள்ளது. இந்த அன்னை வித்யஜோதிநாயகி என்று திருநாமம் தாங்கியுள்ளார். தமிழில் 'ஜோதிமின்னம்மை' என்பது பொருள் .இந்த அம்பாள் பார்ப்பதற்கு ஒரே தோற்றத்தில் காட்சியளித்தாலும் காலையில் வீணை ஏந்திய சரஸ்வதி ஆகவும் உச்சி காலத்தில் யானையுடன் லட்சுமியாகவும் மாலையில் சூலாயுதத்துடன் துர்க்கையாகவும் காட்சி தருவதாக ஐதீகம்.
அதனால் தான் வித்யஜோதி நாயகி என்ற பெயர் வந்தது. இதில் வித்யா என்பது சரஸ்வதியையும் ஜோதி என்பது லட்சுமியையும் நாயகி என்பது பார்வதியையும் குறிப்பதாகும். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம் தினமும் காலை 7:00 மணி முதல் 11 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்படும். காட்டுமன்னார்கோவிலில் இருந்து எய்யலூர் செல்லும் சாலையில் மேல கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம் உள்ளது .இந்த ஆலயத்திற்கு சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.