Kathir News
Begin typing your search above and press return to search.

வாழ்க்கையையே வெற்றியாக்கும் பெரும்பேர் கண்டிகை தான் தோன்றீஸ்வரர்.

நம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய அனைத்து நிகழ்வுகளும் வெற்றி அடைய வேண்டுமாயின் பெரும்பேர் கண்டிகை தான் தோன்றீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வணங்கினால் அனைத்திலும் வெற்றி காணலாம்.

வாழ்க்கையையே வெற்றியாக்கும் பெரும்பேர் கண்டிகை தான் தோன்றீஸ்வரர்.
X

KarthigaBy : Karthiga

  |  20 Oct 2022 10:45 AM GMT

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது பெரும்பேர் கண்டிகை என்ற ஊர்.இங்கு தடுத்தாட்கொண்ட நாயகி உடனாய தான் தோன்றீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. மணல் லிங்கமாக சுயம்புவாக தோன்றி அகத்திய முனிவருக்கு காட்சி கொடுத்ததால் தான்தோன்றீஸ்வரர் என்று பக்தர்களால் வணங்கப்படுகிறார். கைலையில் சிவ பார்வதி திருமணம் நடக்க இருந்தது. திருமணத்தை காண்பதற்காக தேவர்கள் முனிவர்கள் உள்ளிட்ட அனைவரும் கைலையில் குவிந்தனர். இதனால் வடபகுதி தாழ்ந்தும் தென் பகுதி உயர்ந்தும் காணப்பட்டது .இதனை சமன் செய்வதற்காக தென்பகுதியை நோக்கி செல்லும்படி அகத்தியரிடம் கூறினார்.

சிவபெருமான்.


நான் வேண்டும் இடங்களில் எல்லாம் தங்களின் திருமண கோலத்தை காட்டி அருள வேண்டும் என்ற நிபந்தனையுடன் தென்பகுதி நோக்கி புறப்பட்டார் அகத்தியர். அதன் ஒரு பகுதியாக அவர் பெரும்பேர் கண்டிகை வந்தார்.அங்கு தற்போது தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள சஞ்சீவி மலை மீது வீற்றிருக்கும் முருகப்பெருமானை வழிபடச் சென்றார். இதனை அறிந்த முருக பெருமான் வள்ளி தெய்வானையுடன் தெற்கு முகமாக திரும்பி அகத்தியருக்கு காட்சியளித்தார்.இந்த ஆலயத்தில் உள்ள முருகன் சன்னதி எதிரில் சக்திவேல் மற்றும் பிரம்மாவின் வாகனமான அன்னப்பறவை காணப்படுகிறது. கோவில் தல விருட்சமாக ருத்ராட்ச மரம் உள்ளது. அகத்தியர் இத்தல முருகனை வணங்கிவிட்டு பெரும்பேர் கண்டிகை ஏரிக்கரையின் கீழ் உள்ள தான்தோன்றீஸ்வரரை வழிபட்டார். பின்னர் அந்த ஆலயத்தின் அருகில் உள்ள அத்தி மரத்தின் அடியில் அமர்ந்து சிவ பார்வதி திருக்கல்யாணம் காட்சியை காண்பதற்காக தவம் இருந்தார் .


அந்த நேரத்தில் சிவபெருமான் திரிபுரத்தை அழிப்பதற்காக தேரில் சென்று கொண்டிருந்தார் .விநாயகரை வழிபடாததால் அவரது தேர்அச்சு முறிந்து போனது.தேர் அச்சு முறிந்த இடமே தற்போது அச்சரப்பாக்கம் என்று அழைக்கப்படுகிறது. அதன் பின்னர் விநாயகரை வழிபட்டு சிவபெருமான் திரிபுரத்தை எரித்தார் என்பது வரலாறு. அதற்கு முன்பாக தேர் அச்சு முறிந்ததும் அந்த பகுதியில் தவம் செய்து கொண்டிருந்த அகத்தியரை காண்பதற்காக சிவபெருமானை பெரும்பேர் கண்டிகைகக்கு அழைத்துச் சென்றார் பார்வதி தேவி. இதை அறிந்த முருகப்பெருமானும் அகத்தியரும், சிவபெருமானையும் பார்வதியையும் வரவேற்பதற்காக வந்தனர். பின்னர் பெரும்பேர் கண்டிகையில் அகத்தியருக்கு சிவனும் பார்வதியும் திருக்கல்யாணம் கோலத்தை காட்டி அருளினார் .


தேர் அச்சு முறிந்ததும் சிவபெருமானை தடுத்தாட்கொண்டு பெரும்பேர் கண்டிகைக்கு அழைத்து வந்ததால் இத்தல அம்மன் தடுத்தாட்கொண்ட நாயகி என்று அழைக்கப்படுகிறார்.இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் அச்சரப்பாக்கம் ஆற்றீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் முடிந்ததும் சித்திரை மாத சுவாதி நட்சத்திரத்தில் சிவபெருமானும் பார்வதியும் பெரும்பேர் கண்டிகையில் எழுந்தருளி அகத்தியருக்கு திருமண கோலத்தை காட்டி அருளும் வைபவம் வெகு சிறப்பாக நடந்தேறுகிறது. இந்த தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சுமார் 1000 ஆண்டு பழமை வந்த 'கோமடி' சங்கு உள்ளது .இந்த சங்கினை கொண்டு சுயம்புவமாக உள்ள மணல் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மணல் லிங்கம் என்பதால் நிரந்தரமாக செப்பு கவசம் பொருத்தப்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது. சுவாமிக்கு 'கோமடி' சங்கினால் அபிஷேகம் செய்து வழிபட்டால் தேர்தல், தேர்வு, வாழ்க்கை, போன்றவற்றில் வெற்றி கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதனாலேயே இத்தல சிவபெருமான் வாழ்க்கையே வெற்றியாக்கும் பெரும்பேர் கண்டிகை தான் தோன்றீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News