நாடி ஜோதிடம் உண்மையா ?
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மாமுனிகளால் எழுதப்பட்டது என்று சொல்கிறார்கள். குறிப்பாக அகத்தியர் அருளியது என சொல்கிறார்கள்.
By : G Pradeep
ஒருவர் உங்கள் கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் வருங்காலத்தை மிக துல்லியமாக சொன்னால் அசந்து போவோம் இல்லையா. ஜோதிடத்தின் அற்புதங்களுள் ஒன்றாக விளங்கும் நாடி ஜோதிடம் தான் அந்த அற்புத மார்கம். நாடி ஜோதிடம் பார்ப்பவர்களை நாடி ஜோதிடர்கள் என்கிறோம். இவர்கள் பார்த்து சொல்லும் ஏடுகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மாமுனிகளால் எழுதப்பட்டது என்று சொல்கிறார்கள். குறிப்பாக அகத்தியர் அருளியது என சொல்கிறார்கள்.
ஒருவரின் கட்டை விரல் ரேகையை கொண்டே அவருடைய பெற்றோர், உடன் பிறந்தோர் மற்றும் அவரின் எதிர்காலம் ஆகியவற்றை துல்லியமாக சொல்லமுடிகிறது. நாடி ஜோதிடம் பழங்கால ஜோதிடமாகும். இந்த ஜோதிடத்தை எழுதியவர் மஹாரிஷிகள். இவர்கள் ஆன்மீக ஆற்றலை அதீதமாக பெற்றவர்கள். இவர்களின் அதி தீவிர பக்தியை கண்டு மெச்சிய சிவபெருமான் அவர்களுக்கு இந்த சக்தியை அருளினார் என்பது நம்பிக்கை.
தெய்வீக வழிகாட்டுதலுடன் மகரிஷிகள் ஒவ்வொரு தனிமனிதருக்கும் என அவர்களுடைய கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் குறித்த குறிப்புகளை பனையோலையில் எழுதியுள்ளனர். இவர்கள் பல நூறாண்டுகளுக்கு முன்பு எழுதிய இந்த குறிப்புகள் இன்றும் உயிர்ப்புடன் பலருக்கு ஜோதிட வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது.
எனில், இந்த நாடி ஜோதிடத்தை அனைவரும் பார்த்து விட முடியுமா என்றால்? முடியாது. யாருக்கு விதிக்கப்பட்டிருக்கிறதோ அவர்களால் மட்டும் தான் பார்க்க முடியும். அல்லது இந்த நாடி ஜோதிடத்தை பார்க்கிறவர்கள் எல்லாம் வெளிப்புற சூழலால் உந்தப்பட்டு இதை பார்த்திருப்பார்கள் அல்லது யாருடைய கட்டாயத்தின் பேரில் பார்த்திருப்பார்கள் அல்லது தங்களை குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்கிற தீவிர தேடுதலின் பலனாய் இதை கண்டிருப்பார்கள். மொத்தத்தில் இவர்கள் எந்த நாளில் அல்லது எந்த சூழலில் இதை பார்க்கிறார்கள் என்பது கூட அந்த பனையோலையில் குறிப்பிடப்பட்டிருக்கலாம்.
இந்த பனையோலையை அனைவராலும் படித்துவிட இயலாது. இது செய்யுளின் வடிவில் இருப்பதால் அதற்குரிய பரிச்சியம் இருப்பவர்களால் மட்டுமே இதனை படித்து அர்த்தம் காண முடியும். ஆண் என்றால் வலது கட்டை விரல், பெண் என்றால் இடது கட்டை விரல் ரேகையை வைத்து அந்த ரேகையின் அடிப்படையில் பல பணை ஓலை பண்டல்கள் எடுக்கப்பட்டு ஒவ்வொரு பனையோலையாக வாசிக்கப்படும். இந்த செயல்முறையில் நமக்கு ஜோதிடம் பார்க்கும் நாடி ஜோதிடருக்கு நம்மை குறித்து எந்த தகவலும் தெரியாது என்றும் அவர் நம்மிடம் சில கேள்விகள் பனையோலையினை வாசித்து கேட்க நாம் ஆம் இல்லை என்று மட்டும் சொன்னால் போதுமானது.
இதில் நமக்கான பனையோலை கிடைக்காமலும் போகலாம். ஆனால் நமக்கான ஓலை கிடைக்காத வரை நாம் இவருக்கு பணம் செலுத்த வேண்டியதே இல்லை. தமிழகத்தில் வைத்தீஸ்வரன் கோவில் இந்த நாடி ஜோதிடத்திற்கு பெயர் போனது.
Image Source : Delhi Planet, Google.Play