இந்துக்கள் பண்டிகையில் நவராத்திரி மிக முக்கியமானது ஏன்?
By : Dhivakar
இந்துக்களின் ஏராளமான பண்டிகைகளுள் நவராத்திரிக்கென சிறப்பு முக்கியத்துவம் உண்டு. காரணம், தீமைகளை வென்று நன்மையை நிலைநாட்டிய வெற்றியின் அடையாளமாக இந்த 9 தினங்களும் கருதப்படுகின்றன. இந்த ஒன்பது நாட்களின் கொண்டாட்டங்களும் பத்தாம் நாளில் மாபெரும் உற்சவமாக சங்கமித்து கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களும் சக்தியின் பல்வேறு ரூபங்கள் கொண்டாடப்பட்டு, வழிபடப்படுகின்றன. துர்கையம்மனின் அருளை நாடவும் அவளின் அன்பை பெறவும் இந்த நவராத்திரி வழிபாடு வழிவகுக்கிறது மேலும்,இந்த நவராத்திரி என்பது அம்பிகையின் சக்தியை, பெருங்கருணை பறைசாற்றுவதாக அமைகிறது.
மூவுலகையும் ஆண்டு வந்த அசுரன் மஹிசாசுரன். அவன் பெற்ற வரத்தின் படியே அவனை எந்தவொரு கடவுளோ, அசுரனோ அல்லது மனித பிறவியோ கொல்ல முடியாது. பெண் தன்மையிலான வடிவத்தை தவிர வேறு எவராலும் மரணமில்லாத வரத்தை அவன் பெற்றிருந்தான். அவனுடைய கணக்குகள் தேவியின் வலிமையின் முன் ஒன்று மற்று போயின.
அவனுடைய கொடூர பிடியிலிருந்து இந்த உலகைக் காப்பதற்காக, தாய் துர்கா தேவி பெரும் சக்தி படைத்த பிரமாண்ட அவதாரம் ஒன்றை எடுத்தார். அதனை தொடர்ந்து பெரும் போரை ஒன்றை தொடுத்து அந்த அரக்கனை வீழ்த்தினார். ஒன்பது நாட்கள் நடந்த போரில், பத்தாம் நாள் அந்த அரக்கனை சம்ஹாரம் செய்து வெற்றியை நிலைநாட்டினார் அம்பிகை துர்கா தேவி.
இது நவராத்திரி பண்டிகையின் கதைச்சுருக்கம். துர்கை என்கிற பெயரின் பொருளே துன்பங்களை, துக்கங்களை சம்ஹாரம் செய்பவள் என்பதே ஆகும். "'துர்கா துர்காதி நாசினி"' என்றே சமஸ்கிருதத்தில் குறிப்பிட்டுள்ளது. அப்படியென்றால் துயரங்களை அழிப்பவள் என்று பொருள். எனவே தேவியை இந்த ஒன்பது நாட்கள் வழிபடுவதன் மூலம் மகிழ்ச்சி, செல்வம், ஞானம், வெற்றி, நீடித்த இன்பம் ஆகியவை கிடைக்கும்.
இந்த பண்டிகை வெறும், கோவில் வீடு என்று மட்டுமின்றி, தொழில் செய்யும் இடம், கல்வி கூடங்கள், என சகலவிதமான இடத்திலும் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு. இந்நாளில் சுற்றுசூழலை சுத்தம் செய்து, பல கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல நன்கொடைகள், தான தர்மங்கள் ஆகியவை செய்யப்படுகின்றன. சாத்தியப்படும் அனைத்து வழிகளிலும் தேவியின் அருளை பெற அனைவரும் அவர்களால் ஆன வழிபாட்டு முறையை பின்பற்றுவதும் உண்டு.
இந்த ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள் சக்தி தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் இலட்சுமி தேவியையும், இறுதியான மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வணங்குவது மரபு. எனவே இந்த ஒரு பண்டிகைக்கு பல்வேறு பரிமாணங்கள் உண்டு எனலாம். ஆன்மீகம், ஞானம், சமூகம், கலாச்சாரம் மற்றும் தேசத்தின் பண்டிகையாக பல கோணங்களில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. வாழ்வின் அர்த்தத்தை உணர்த்தி, பிறருக்கு கொடுப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தி கடவுளின் மீதான தீராத பக்தியை நமக்குள் ஊற செய்கிறது இந்த பண்டிகை.