தமிழ் மண்ணிலிருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும் புனித தீர்த்தங்கள்!
By : Sushmitha
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர் கோவிலில் கட்டுமான பணிகளை கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த கோவிலின் கட்டுமான பணிகளானது விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் வருகின்ற ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நாடு முழுவதும் உள்ள நதிகளில் இருந்து புனித நீர் எடுக்கப்பட்டு ராமர் கோவிலின் கும்பாபிஷேகத்திற்காக தற்போது அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் தற்போது மானாமதுரை ஆனந்தபல்லி சோமநாதர், அங்காள பரமேஸ்வரி அம்மன், சோனையா சுவாமி, அலங்கார குளம் சோனையா சுவாமி குளங்களிலிருந்து மானாமதுரையில் ஒன்றிய நகர பாஜக சார்பில் புனித தீர்த்தங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. அதோடு சிங்கம்புணரியில் உள்ள சித்தர் முத்துவடுகநாதர் கோவில், ராமர் கோவில், சேவகபெருமாள் அய்யனார் கோவில் போன்ற கோவில்களில் இருந்தும் புனித நீர்களை பாஜகவினர் சேகரித்து அனுப்பி வைத்து வருகின்றனர்.
இதேபோன்று காளையார் கோவில், சிவகங்கை, பாபநாசத்தில் இருந்தும் புனித நீர் எடுத்து கலசங்களில் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த கலசங்கள் அனைத்தும் பிள்ளையார்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜையுடன் ராம ஜென்ம பூமி புனித கோஷ்த்ரா குழுவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இப்படி கலசங்களை சேகரித்த அனைவருக்கும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழ் வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் மொத்தம் மூன்று லட்சம் இந்து குடும்பங்களுக்கு இந்த அழைப்பிதழ்கள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : Dinamalar