அயோத்தி ராமர் சிலைக்கு ராம நவமியில் சூரிய ஒளி பட்டு உருவாகும்'சூரிய திலகம்'!
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.
By : Karthiga
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நாட்டு மக்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது .தீபாவளியை கொண்டாடுவது போல ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை கொண்டாட மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். பலரிடம் இருந்தும் பல ஊர்களில் இருந்தும் ராமர் கோவிலுக்காக நன்கொடைகளும் பரிசுப் பொருட்களும் ஏராளமாக குவிந்த வண்ணம் இருக்கின்றன.
ராமர் கோவில் கட்டுமான பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்று இருக்கும் வேளையில் ராமர் கோவிலில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படும் ராமர் சிலைக்கு 'சூரிய திலகம்' விழும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை தலைமை விஞ்ஞானி ஆர்.தரம் ராஜு வடிவமைத்துள்ளார். அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் பல்வேறு கலை அம்சங்களை கொண்டுள்ளது. அந்த வகையில் மற்றொரு சிறப்பு அம்சமாக ஒவ்வொரு ராம நவமியின் போதும் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் கருவறையில் சூரிய ஒளியின் கதிர்கள் விழும் வகையில் அதற்கான சிறப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக அமைக்கப்பட்டுள்ள லென்ஸ்கள் வழியே ஊடுருவி வரும் சூரியக்கதிர்கள் கருவறையில் உள்ள குழந்தை ராமரின் நெற்றியில் திலகம் வடிவில் விழும். அது குழந்தை ராமரின் நெற்றியில் 'சூரிய திலகம்' போல் காட்சியளிக்கும் .இதனை வடிவமைத்த தலைமை விஞ்ஞானி ஆர் தரம் ராஜு கூறுகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த சூரிய ஒளி சிலையின் நெற்றியில் மதியம் 12 மணி முதல் ஆறு நிமிடங்கள் வரை படும் என்றார். அயோத்தி ராமர் கோவிலில் கருவறை முதல் அனைத்து தளங்களும் மிகவும் நேர்த்தியாகவும் அனைத்து ஆகம விதிகளையும் உள்ளடக்கிய படியும் கட்டப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோவிலுக்காக உற்சவர் வீதி உலா வருவதற்கு பர்மா தேக்கில் செய்யப்பட்டுள்ள பல்லக்கு மாமல்லபுரத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்படி ராமர் கோவிலின் ஒவ்வொரு நிகழ்வுகளும் மிகச் சிறப்போடு அரங்கேறிக் கொண்டிருக்கிறது. பக்தர்கள் அனைவரும் கும்பாபிஷேக விழாவை காண்பதற்கு ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். ஜனவரி 22 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் நாள் அன்று மாலை அனைவர் வீட்டிலும் கார்த்திகை தீபங்கள் ஏற்றி கொண்டாடுங்கள் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். அதன் மூலம் நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்மைகள் பெருகும் சுபிக்ஷம் நிறையும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.