லட்சுமி கடாக்ஷம் அருளும் திருவைகல் நாதர்!
சிவபெருமானின் சிறப்புமிக்க திருத்தலங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது திருவைகல் மாடக் கோவில்.
By : Karthiga
கோச்செங்கட்சோழன் கட்டிய 70 மாடக் கோவில்களில் ஒன்றாகத் திகழும் இந்த வைகல் மாடக்கோவில் ஈசன் மீது பதிகம் பாடியுள்ளார் திருஞானசம்பந்தர். அதோடு அப்பர் பெருமானும் இத்தலம் பற்றி பாடியிருக்கிறார் . 33-வது தலமாகத் திகழ்கிறது. இந்த வகைல் மாடக் கோவில். ஈசனுக்கு மூன்று கண்கள் இருப்பது போல இந்த வைகலில் மூன்று சிவாலயங்கள் இருப்பது சிறப்பு .இங்கு வைகல் மாடக் கோவிலோடு பெரியநாயகி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் ஆலயமும் விசாலாட்சி உடனுறை விஸ்வநாதர் ஆலயமும் ஒருங்கே அமையப் பெற்றிருப்பது விசேஷம்.
தேவர்கள் இங்கு ஈசல் வடிவில் சிவனை வழிபாடு செய்துள்ளனர் .ஆதியில் செண்பக வனமாக திகழ்ந்த இத்தலத்தில் நம்மையெல்லாம் தாங்கும் ஆதார சக்தியாக விளங்கும் அன்னை பூமாதேவி தவம் செய்தார். திருமாலை மணம் புரிந்திட வேண்டி சிவபெருமானை நோக்கி அவள் தவம் இருந்தாள். சிவபெருமான் அழைத்த வரத்தின் படி பூமாதேவி திருமாலை மணந்து கொண்டால் .இதனால் கோவிந்தன் மீது கோபம் கொண்டாள் திருமகள்.
எனவே செண்பகவனமாக இருந்த இந்த பகுதியை வந்தடைந்து அருளும் சிவபெருமானை நோக்கி கடுமையாக தவத்தை புரிந்தாள். திருமகளைத் தேடி வந்த திருமாலும் இவ்வாலயத்தில் உள்ள ஈசனை வழிபட்டார். திருமாலோடு திருமகளை தேடி வந்த பிரம்மன் ஈசனை வணங்கி நின்றார் .இதை அடுத்து மகாதேவர் ஆன சிவபெருமான் அங்கு தோன்றிய திருமகளை சாந்தப்படுத்தி திருமாலோடு சேர்த்து வைத்தார். திருமகளையும் நிலமகளையும் இரு மனைவியராய் திருமால் ஏற்றுக் கொண்ட திருத்தலம் இது.
மாடக் கோவிலை வலம் வருகையில் அம்பிகையின் தனிச் செய்தி மாடக்கோவிலின் வலப்புறம் கிழக்கு நோக்கி அமையப்பெற்றுள்ளது. சன்னதிக்குள் அழகிய வடிவில் அன்னை வீற்றிருக்கிறார். இந்த தேவியின் திருநாமம் கொம்பியல்கோதை என்பதாகும் .திருமால் தன் துணைவியர் இருவருடன் வரதராஜராக காட்சி தருவது சிறப்பு .இந்த ஆலயமானது தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் வழியில் எஸ்.புதூருக்கு அருகே உள்ளது பழியஞ்சிய நல்லூர். இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரம் சென்றால் திருவைகல் மாடக்கோவிலை அடையலாம்.