மதுரைக்கு எல்லையைக் காட்டிய தென்திருவாலய சுவாமி!
இறைவனின் திருவிளையாடல்கள் நிகழாத இடமே இல்லை. அதில் மார்க்கண்டேயரை எமனிடமிருந்து காத்த திருக்கடையூர் திருத்தலமும் ஒன்று. அந்த ஆலயத்திற்கு நிகரான தலம் ஒன்று மதுரையிலும் உள்ளது.
By : Karthiga
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் நிர்வாகத்திற்கு உட்பட்ட தென் திருவாலய சுவாமி திருக்கோவில் மதுரையில் உள்ள பஞ்சபூத தலங்களில் அக்னி தலம் மற்றும் திருநீற்று பதிகம் பாடல் பெற்ற பழமையான திருத்தலமாகும். 64 திருவிளையாடல் புராணக் கதைகளில் மதுரைக்கு எல்லையைக் காட்டிய படலம் நிகழப் பெற்ற தலம் இதுவாகும். பாண்டிய மன்னர்களில் சுகுன பாண்டியருக்கு பிறகு சித்திரரதன் முதல் அதுலகீர்த்தி வரை 22 பாண்டியர்கள் தொடர்ந்து அரசாட்சி புரிந்து வந்தார்கள்.
அதுலகீர்த்திக்கு பின்னர் அவனது மகன் கீர்த்திவீடணன் காலத்தில் ஒரு பிரளயம் ஏற்பட்டது. ஏழு பெருங்கடல்களும் பொங்கி உலகத்தை அழித்தன. மதுரையில் சோமசுந்தர பெருமாள் விமானம், மீனாட்சி அம்மனின் ஆலயம் மற்றும் இடபமலை,யானைமலை, நாகமலை, பசுமலை பன்றி மலை ஆகியவை மட்டும் அழியாமல் இருந்தன. வெள்ளம் வற்றிய பிறகு சிவபெருமானால் மீண்டும் உலகம் படைக்கப்பட்டது . தமிழ் வேந்தர் மூவரும் சந்திரன், சூரியன், அக்னி ஆகிய மூன்று குளத்தில் இருந்து இறைவனால் படைக்கப்பட்டார்கள்.
அக்காலத்தில் சந்திரகுலத்தில் இருந்து வந்த வங்கிய சேகர பாண்டியன் சோமசுந்தர பெருமாள் திருக்கோவிலைச் சுற்றி ஒரு சிறு நகரம் ஏற்படுத்தி ஆட்சி செய்தான். கோன் உயர குடி உயர்வது போல் நாட்டில் வளம் பெருகி மக்களும் பெருகி கொண்டிருந்தனர். இதனால் சிறிது கவலை உற்ற அரசன் சோமசுந்தர பெருமானை வணங்கி எம்பெருமானே இவ்வளவு மக்களுக்கும் விரிவான பெரு நகரம் அமைக்கப்பட வேண்டும். அடியேன் இதன் பழைய எல்லையை காண முடியவில்லை .எனவே எல்லையைக் காட்டி அருள் புரிய வேண்டும் என வேண்டினான்.
அப்போது சிவபெருமான் ஒரு சித்தராக எழுந்தருளினார் .அவர் உடம்பில் எங்கும் சர்ப்பமாக இருந்தன. தன்னுடைய திருக்கரத்தில் கங்கணமாக கட்டிய சர்ப்பத்தை பார்த்து 'நீ பாண்டியனுக்கு நகரத்தின் எல்லையை அளந்து காட்டு' என்று உத்தரவிட்டார். அதன்படி அந்த சர்ப்பம் இறைவனைத் தொழுது எம்பெருமானே இந்நகரம் அடியேன் பெயரினால் விளங்கும்படி அருள்வாயாக என வேண்டிக் கொண்டது. சிவபெருமானும் அப்படியே அருள்பாலித்தார்.
இதை அடுத்து கிழக்கு திசையில் சென்ற சர்ப்பம், வாலை நீட்டி நகரத்தை வளமாக சுற்றி உடம்பை வளைத்து வாலை தன் வாயில் வைத்து நகரின் எல்லையைக் காட்டியது. பின்னர் எம்பெருமான் கையில் பழையபடி கங்கணமாக மாறிக்கொண்டது. எம்பெருமான் திருக்கோவிலுக்கு சென்று மறைந்தருளினார் .வங்கிய சேகர பாண்டியன் சிறந்த முறையில் நகரை அமைத்தான். அந்த நகரமே 'ஆலவாய் நகரம் ' எனப் பெயர் பெற்றது. இக்கோவிலின் நுழைவு வாசலில் முன் கோபுரம் இல்லை .கிழக்கு பார்த்த திசையில் சுவாமி லிங்க வடிவத்திலும் மீனாட்சி அம்மன் நின்றகோலத்திலும் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்கள்.
சுவாமிக்கு நேராக நந்தி பிரகாரத்தை சுற்றி வரும் போது தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் ,சண்டிகேஸ்வரர், துர்க்கை அம்மன், பைரவர் மற்றும் நவக்கிரகங்களை தரிசிக்க முடியும். மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து தெற்கு வாசல் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து செல்லும் தூரத்தில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது .தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறும் இக்கோவிலின் நடை காலை 6:00 மணி முதல் 11:30 மணி வரையும் மாலை 4:30 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.