Kathir News
Begin typing your search above and press return to search.

பெண் வடிவில் பெருமாள் வந்து ஈசனை வழிபட்ட திருப்பெருவேளூர் திருத்தலம்!

மோகினி வடிவத்தில் இருந்த பெருமாள் தன் சுய ரூபத்தை அடைய இத்தல இறைவனை வழிபட்டதாக கூறுகிறது தல புராணம். இவ்வாலயத்தின் சிறப்பு பற்றி காண்போம்.

பெண் வடிவில் பெருமாள் வந்து ஈசனை வழிபட்ட திருப்பெருவேளூர் திருத்தலம்!
X

KarthigaBy : Karthiga

  |  1 July 2024 2:01 PM GMT

மேருமலையின் சிகரம் மூன்றாகப் பிளந்து விழுந்தது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரையில் அமைந்துள்ள தலம் பெருவேளூர் எனும் தொன்மைப் பெயர் கொண்ட இவ்வூர் இன்று அய்யம்பேட்டை என்று வழங்கப்படுகிறது . இதே மாவட்டத்தில் வேறொரு அய்யம்பேட்டை இருப்பதால் இவ்வூரை மணக்கால் அய்யம்பேட்டை என்று அழைக்கின்றனர். திருஞானசம்பந்தர் , திருநாவுக்கரசர் இருவராலும் பாடப்பெற்ற பழம்பதி. சூரனை சம்ஹாரம் செய்த பின் அந்த தோஷம் நீங்குவதற்காக முருகப்பெருமான் சிவபெருமானை வழிபட சில தலங்களுக்குச் சென்றார்.

திருச்செந்தூரில் இருந்து கீழ்வேளூர் திருமுருகன்பூண்டி ,வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் இத்தலமாகிய திருப்பெருவேளூர் ஆகியன அத்தகைய தலங்கள். இவ்வாலயத்து இறைவன் சுயம்புவானவர். இத்தலத்த முருகனை அருணகிரிநாதரும் பாடியுள்ளார். ஆலயத்தின் பின்புறம் உள்ள தீர்த்தம் சரவணப் பொய்கை என்று அழைக்கப்படுகிறது. வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டி நடந்ததாம். அப்போது மேருமலையின் சிகரம் மூன்றாகப் பிளந்து விழுந்தது . அதில் ஒன்று இந்த தலத்தில் விழுந்தது. அதுவே காலப்போக்கில் சுயம்புலிங்கமாக வெளிப்பட்டதாம். இந்த ஐதீகத்தின் காரணமாக இத்தல இறைவனை வழிபட்டால் கயிலை மலையை வணங்கிய புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள். மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் ஐந்து கலசங்களுடன் கிழக்கு நோக்கி கனகம்பீரமாக நிற்கிறது.

கோயிலைத் தாண்டி உள்ளே நுழைந்தால் தரைத்தளத்தில் பலிபீடம், வானளாவி நிற்கும் கொடிமரம், அடுத்து நந்தியம் பெருமான் வீற்றிருக்கும் நந்தி மண்டபம். நந்தியம்பெருமானை வணங்கிவிட்டு நிமிர்ந்தால் எதிரே இடதுபுறம் உள்ள வாசல் வழியே 18 படிகள். படியேறி கோயிலுக்குள் நுழைகிறோம். எதிரே சோமாஸ்கந்த முகூர்த்தம். அவரை வணங்கி வலது புறம் உள்ள வாசல் வழியே நுழைந்தால் மகா மண்டபத்தில் தெற்கு பார்த்த நடராஜர் சிவகாமி அம்மையுடன் அருள் தோற்றம் அளிக்கிறார் .கருவறை கிழக்கு நோக்கிய நிலையில் சுயம்புலிங்கமாக அபிமுக்தீஸ்வரர். சுயம்புலிங்க ரூபங்களுக்கே அலாதியான ஒரு வசீகர சக்தி இருப்பதை உணர முடியும். இந்த ஈசனும் அதை நம் உள் மனதுக்கு உணர்த்துகிறார் .

அவரை நெஞ்சார தரிசித்து பரவசத்தோடு மீண்டும் படி இறங்கி கீழே தரைத் தளத்துக்கு வந்து பிரகாரத்தை வலம் வரத் தொடங்கினால் முதலில் கன்னி மூலையில் எதிர்ப்படுபவர் பிரதான விநாயகர். இவர் தனிச்சன்னதியில் வீற்று உள்ளார் .அது போல் தெற்கு நோக்கிய தனிச் சன்னதியில் தட்சிணாமூர்த்தி .பிரதான விநாயகர் பக்கத்து சன்னதியில் வைகுண்ட நாராயண பெருமாள். தாருகாவனத்தில் இருந்த முனிவர்களின் ஆணவத்தை அடக்கும் பொருட்டு சென்றார் சிவபெருமான். அப்போது விஷ்ணு மோகினி வடிவம் எடுத்துச் சென்றார். தன்னுடைய பெண் வடிவத்தில் இருந்து ஆண் உருவம் பெற இத்தலத்து இறைவனை திருமால் வந்து வழிபட்டார். அதன் நினைவாக இங்கு திருமால் தனி சன்னதி கொண்டு எழுந்தருளி உள்ளார் என்கிறது தலபுராணம்.

தரைத்தளத்தில் இறைவன் கருவறைக்கு நேர் இடது திசையில் அம்பாள் சன்னதி. அம்மையின் பெயர் அபினாம்பிகை. இவருக்கு ஏலவார் குழலி என்ற பெயரும் உண்டு. ஆலய பிரகாரத்தில் மேற்கு நோக்கிய திசையில் மகாலிங்கம் ,சரஸ்வதீஸ்வரர், ஜம்புகேஸ்வரர், ஐராவதீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர் என ஐந்து சிவலிங்கங்கள் உள்ளன .இவற்றுள் சரஸ்வதி பூஜித்த லிங்கம் சரஸ்வதீஸ்வரர் எனும் பெயரில் அமைந்துள்ளது .இவர் தனி அலங்காரத்துடன் விளங்குகிறார். தனி சிறப்பு மிக்கவர் .முன்னொரு காலத்தில் வாழ்ந்த ஒரு சிவ பக்தர் தன் புதல்வனின் பேச இயலாத குறைபாட்டை நீக்கும்படி தினமும் இந்த ஈசனை அபிஷேகம் செய்து ஆராதித்து வந்தார். அவரது குழந்தைக்கு பேசும் திறனை அளித்து அருள் புரிந்தார் ஈசன். குழந்தைக்கு பேச்சுத்திறன் குறைபாடு இருந்தாலோ அல்லது பெரியவர்கள் ஆகியும் சிலருக்கு சரிவர பேச வராமல் கஷ்டப்பட்டாலோ இந்த சரஸ்வதீஸ்வரரை வழிபட்டு பிரார்த்தித்துக் கொண்டால் விரைவில் பேச்சுக் குறைபாடு நீங்கி விடுகிறது. கிழக்கு பிரகாரத்தில் பைரவர் ,கால பைரவர், வடுக பைரவர் என்று மூன்று பைரவர்கள் உள்ளனர்.

அசுர குருவான சுக்ராச்சாரியார் ஒருமுறை தனது ஆற்றல்கள் அனைத்தையும் இழந்தார். பின்னர் இந்த தலத்திற்கு வந்து சரவண தீர்த்தத்தில் நீராடி அம்பிகையை நோக்கி தவம் இருந்தார். அன்னையின் அருட்கடாட்சம் கிட்டியதால் சுக்ராச்சாரியாருக்கு மீண்டும் அனைத்து ஆற்றல்களும் பரிபூரணமாகக் கிடைத்தது. சுக்ராச்சாரியார் போலவே மிருகண்டு மகரிஷி, பிருங்கி முனிவர், கௌதம முனிவர் ஆகியோரும் இத்தலத்து இறைவனை வழிபட்டு நற்பேறு அடைந்துள்ளனர். திங்கட்கிழமைகளில் இவ்வாலய சரஸ்வதீஸ்வரருக்கு தீபம் ஏற்றி வழிபட பேச்சு குறைபாடு நீங்குவது அனுபவ உண்மை. ஊரின் நான்கு திசைகளிலும் காவல் தெய்வமான அய்யனார் கோவில்கள் உள்ளன. இதுவும் ஒரு சிறப்பு. கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் போகும் வழியில் குடவாசலை அடுத்துள்ளது மணக்கால் அய்யம்பேட்டை. திருவாரூரில் இருந்து 15 கிலோமீட்டர், நன்னிலத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவு. பஸ் வசதி உண்டு.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News