Kathir News
Begin typing your search above and press return to search.

நித்திய வாழ்வும் நிம்மதியும் அருளும் நிசும்பசூதனி அம்மன்!

சோழர்களுக்கு வெற்றியைத் தேடி தந்து இன்றும் தஞ்சையில் வடபத்ரகாளியாக பக்தர்களுக்கு அருள் பாலித்துக்கொண்டு இருப்பவள் தான் நிசும்பசூதனி அம்மன்.

நித்திய வாழ்வும் நிம்மதியும் அருளும் நிசும்பசூதனி அம்மன்!

KarthigaBy : Karthiga

  |  3 July 2024 5:39 PM GMT

முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என்ற இரு அரக்கர்கள் மக்களையும், தேவர்களையும், ரிஷி முனிவர்களையும் துன்புறுத்தி வந்தனர். இவர்களின் கொடுஞ்செயல் தாளாது அனைவரும் பார்வதி தேவியை நாடிச் சென்றனர். அன்னையும் அந்த அரக்கர்களை அழிக்க 'கவுசீகி' என்ற அழகிய பெண் வடிவம் எடுத்து வந்தாள். அவள் அழகைக் கண்டு மயங்கிய சும்ப,நிசும்பர்கள் அவளை மணக்க எண்ணினர். ஆனால் அன்னையோ இருவரில் யார் மிகுந்த பலசாலியோ அவர்களையே மணப்பேன் என்று கூறினாள். இதை அடுத்து சும்ப, நிசும்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு அழிந்து போயினர். அவர்கள் அழிவுக்கு காரணமானதால் இந்த அன்னையை நிசும்பசூதனி என்று அழைத்தனர்.

சோழர்களால் குலதெய்வமாக வணங்கப்பட்டவள்தான் இந்த நிசும்பசூதனி. கிபி 850 -ல் உறையூரில் சிற்றரசனாக பதவி ஏற்றபின் விஜயாலய சோழன் , தஞ்சையை ஆண்ட முத்தரையர்களை வீழ்த்தி பழையாறையில் இருந்து தஞ்சைக்கு தலைநகரை மாற்றினார். அங்கே தனது வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனி தேவிக்கு கோவில் எழுப்பினார். பின்பு வந்த ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் ஆகிய அனைத்து சோழ மன்னர்களும் போருக்கு செல்வதற்கு முன் இந்த அம்மனை வணங்கி விட்டு சென்று வெற்றியுடன் திரும்பினர். தங்கள் வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனியை குலதெய்வமாக வழிபட்டனர். இவளே தஞ்சையைக் காக்கும் காவல் தெய்வம் ஆனாள்.

சோழர்கள் நிர்மாணித்த தஞ்சை நிசும்பசூதனி ஆலயம் 1100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. கருவறையில் 7 அடி உயரத்தில் மெலிந்த தேகம், உடல் சதை அற்று, எலும்புகள் வெளியே தெரியும்படியான தோற்றத்தில் காட்சி தருகிறாள். அஷ்டதிக்கரங்களுடன் திகழும் இந்த அன்னை திருமுடியில் தீச்சுவாலையைக் கொண்டு அருள்கிறாள். நிசும்பனின் தலையைக் கொய்து அந்த தலை மீது தன் திருவடியை வைத்து தெற்றுப் பற்கள், முப்புரி நூலாக மண்டை ஓடுகள், திரிசூலம் ஆகியவற்றைத் தாங்கியபடி அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறாள். எட்டு கரங்களில் சூலம், கேடயம், வாள், தனுசு, அம்பு, கபாலம் ,பாசம், மணியைத் தாங்கி இருக்கிறாள்.

இக்கோவிலில் தை மாத முதல் வெள்ளிக்கிழமைத் தொடங்கி கடைசி வெள்ளிக்கிழமை வரை 21 நாட்களுக்கு ஆண்டுத் திருவிழா விமர்சையாக நடைபெறும். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கீழவாசல் பகுதிக்குச் சென்று பூமால் ராவுத்தர் கோவில் தெரு வழியாக கோவிலை சென்றடையலாம் .தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஏறத்தாழ 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஆலயம். காலை 8 மணி முதல் 11 மணி வரையும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News