வாழ்வை சிறப்பாக மாற்றும் வாராஹி அம்மன் வழிபாடு!
வாராஹி அம்மனுக்கு தனி கோவில்கள் என்பது அதிகம் கிடையாது என்றாலும் வாராஹி அம்மனை வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம்.
By : Karthiga
ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி தேவியின் சேனை நாயகிகள் நால்வர் உண்டு சம்பத்கரீ, அச்சுவாரூடா, மந்த்ரிண்யம்பா, தண்டநாதா ஆகியோரே அவர்கள். இவர்களில் சம்பத்கரீ என்பவள் லலிதா தேவியின் அங்குசம் என்ற ஆயுதத்தில் இருந்து தோன்றியவள். இவள் யானைப்படையின் தலைவி ஆவாள்.அச்சவாரூடா தேவி பாசத்திலிருந்து தோன்றியவள்.இவள் குதிரை படைத்தலைவியாவாள். மந்த்ரிண்யம்பா என்ற தேவியானவள் ஸ்ரீ லலிதா தேவியின் ஆலோசனைக்குரிய தலைவி இவர்களில் நான்காவது தேவியான தண்டநாதா ஸ்ரீ லலிதா தேவியின் பாணத்திலிருந்து தோன்றியவள்.
இவர் ஸ்ரீ லலிதா தேவியின் சக்தி சேனை அனைத்துக்கும் தலைவியாக இருக்கிறாள். இவளையே நாம் வாராகி என்று அழைக்கிறோம். இவளுடைய சக்கரத்திற்கு கிரி சக்கரம் என்று பெயர். இந்த தேவியின் வாகனமான சிம்மத்திற்கு வஜ்ர கோஷம் என்று பெயர் .இது மூன்று யோசனை தூர உயரம் கொண்டது. பஞ்சமி, தண்டனாதா, சங்கேதா, சமயேஸ்வரி, சமய சங்கேதா, வாராஹி, போத்ரினீ, மகா சேனா, ஆஞ்சா சக்ரேஸ்வரி, அருக்னீ என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறாள்.இவள் பண்டாசுரனுடைய கையில் இருந்து தோன்றிய விசுகுரன் என்று அரக்கனை அழித்தவள்.
ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி வசிக்கும் இடமான ஸ்ரீ நகரத்தில் 16வது பிரகாரத்தில் தண்டநாதா வீற்றிருக்கிறாள். இந்த பிரகாரமானது மரகதமயமானது .இவள் 100 தூண்கள் கொண்ட மண்டபத்தில் பொன் தாமரையில் அமர்ந்துள்ளாள். உருக்கிய பொன் போன்ற மேனியை கொண்டவள். செந்நிற ஆடை அணிந்து சர்வ ஆபரணங்களையும் அணிந்து அழகுடன் தோன்றுபவள். இவளது எட்டு கரங்களிலும் சங்கு, சக்கரம், அபயம், பரதம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம் ஆகியன உள்ளன. அதோடு தன்னுடைய தலையில் சந்திர கலையை சூடிக்கொண்டு வராக முகத்துடன் காட்சி தருகிறாள்.
இவளுக்கு உன்மத்த பைரவி, ஸ்வப்னேசீ,கிரி பதாதேவி ஆகியோர் பரிகார தெய்வங்களாக உள்ளனர். வாராகியின் பெருமையைப் பற்றி வரக தந்ரம் எனும் மந்திர சாஸ்திர நூல் சிறப்பாக பேசுகிறது .அம்பிகையின் கையில் கரும்பு வில்லாக திகழ்பவள் ஷ்யாமளா. புஷ்ப பானமாக இருப்பவள் வாராஹி .எல்லா விதமான சக்திகளும் சியாமளா வாராகிக்கு உட்பட்டே இயங்குகின்றன. இவர்களுக்கு தனித்தனியான ரதங்கள் உண்டு. அம்பிகைக்கு எப்படி ஸ்ரீ சக்கரராஜரதம் உள்ளதோ அதுபோல் வாராஹிக்கு ஆறு ஆதாரங்களும் ரதமாக இருக்கின்றன.
வாராகியின் ரதத்திற்கு கிரிசக்கர ரதம் என்று பெயர் .ஸ்ரீ வித்யா உபாசனையில் கணபதியை வழிபட்டு பின் பாலா மந்திர உபதேசம் செய்த பிறகு சியாமளா மற்றும் வாராஹி மந்திரங்களை சொல்ல வேண்டும் .வாராகி மந்திரத்தை உச்சரித்த பின்னரே பஞ்சததி மந்திரத்தை சொல்வது சரியானது .சப்த மாதாக்களில் முக்கியமானவளாக திகழும் வாராகியை பஞ்சமி திதியில் வழிபாடு செய்வது சிறப்பான பலன்களைப் பெற்று தரும். காசியில் அமைந்துள்ள வாராஹி அம்மன் கோவிலும், நேபாள மாநிலம் போக்ராவில் அமைந்துள்ள வாராஹி கோவிலும் வாராகி அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றவை.