Kathir News
Begin typing your search above and press return to search.

வேண்டும் வரங்களை அருளும் வேணுகோபாலன்!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாலுக்கா பெரிய காட்டுப்பாக்கம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது ருக்மணி - சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி திருக்கோவில்.

வேண்டும் வரங்களை அருளும் வேணுகோபாலன்!
X

KarthigaBy : Karthiga

  |  19 July 2024 5:33 AM GMT

முன் காலத்தில் கிராமப்புறங்களில் ஒரு சிறிய கோவிலை அமைத்து அதில் ராமபிரான் அல்லது கண்ணபிரான் திருவுருவப் படங்களை வைத்து வழிபடும் வழக்கம் இருந்தது .இத்தகைய கோவில்கள் பஜனைக் கோவில்கள் என்று அழைக்கப்பட்டன . இறைவனை பல வழிகளில் நாம் தரிசிக்க முடியும். அதில் ஒரு வழியே பஜனை. நமது முன்னோர்கள் ஒன்றாய் கூடி பஜனை பாடல்களை இசையோடு பாடுவதன் மூலம் இறைவனை தரிசிக்க முடியும் என்ற நம்பிக்கையில் பல ஊர்களிலும் பஜனை மடங்களை நிறுவினர்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் பஜனை கோவில்கள் இருப்பதைக் காணலாம். இந்த பஜனைக் கோவில்களில் சனிக்கிழமை மற்றும் ஏகாதசி, மார்கழி மாதங்களில் பக்தர்கள் ஒன்று கூடி பஜனை இசைத்து நாம சங்கீர்த்தனம் வாயிலாக இறைவனை வழிபடுவார்கள்.இந்த பஜனைக் கோவில்கள் நாளடைவில் விரிவுபடுத்தப்பட்டு, கருவறைக்குள் ராமபிரான் ருக்மணி - சத்யபாமா சமேத வேணுகோபாலர் ஆகியோரது சிலைகள் பிரதிஷ்டை செய்து முழுமையாக ஆலயமாக மாற்றப்பட்டன. அப்படிப்பட்ட ஒரு கோவில்தான் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாலுகா பெரிய காட்டுப்பாக்கம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி திருக்கோவில்.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படும் இந்த பஜனைக் கோவிலில் நவநீதக்கண்ணன் ஆராதிக்கப்பட்டு வந்துள்ளார்.1904 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஏகாதசி தினத்தில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று வருகிறது. நவநீத கண்ணன் பஜனைக் கோவிலாக திகழ்ந்த இத்தலத்தில் முதலில் ருக்மணி- சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமியை பிரதிஷ்டை செய்த மக்கள் பின்னர் பல்வேறு திருப்பணி மூலமாக கருடாழ்வார் சன்னிதி, சக்கரத்தாழ்வார் சன்னிதி, காளிங்கநர்த்தனர் சன்னிதி, தும்பிக்கை ஆழ்வார் சன்னிதி ஆகிய சன்னிதிகளையும் அமைத்தனர். கோவிலுக்குள் நுழைந்ததும் ஒரு சிறிய சன்னிதியில் சிறிய திருவடியான பக்த ஆஞ்சநேயர் அருள்பாளிக்கிறார்.

தொடர்ந்து பலிபீடமும் அதற்குப் பின்னால் பெரிய திருவடியான கருடாழ்வார் சன்னிதியும் உள்ளன. கருவறைக்குள் ருக்மணி - சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி நின்ற திருக்கோலத்தில் அருள் புரிகிறார். இத்தலத்தில் பொங்கல் பண்டிகை, மாட்டுப் பொங்கல் அன்று பரிவேட்டை, உற்சவம் ,கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி, அனுமன் ஜெயந்தி உட்பட பல சிறப்பு உற்சவங்கள் விமர்சையாக நடைபெறுகின்றன. சந்தான பாக்கியம் அளிக்கும் தலமாக விளங்கும் இத்தலத்திற்கு வந்து இத்தல இறைவனை வழிபட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் .

மன அமைதியை நாடுவோர் இத்தலத்திற்கு ஒருமுறை வந்து வேணுகோபாலசாமியை மனம் குளிர தரிசித்தால் நம் மனம் முழுவதும் அமைதி பரவுவது நிச்சயம். திருக்கழுக்குன்றத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் வீராபுரம்- விட்டிலாபுரம் சாலையில் அமைந்துள்ளது பெரிய காட்டுப்பாக்கம் திருத்தலம் .ஒரு கால பூஜை நடைபெறும் இவ்வாலயம் தினமும் காலை 8:00 மணி முதல் 9.00 மணி வரை ஒரு மணி நேரம் திறந்திருக்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News