Kathir News
Begin typing your search above and press return to search.

முருகப்பெருமான் வழிபட்ட குகநாதீஸ்வரர்!

கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகிலேயே இருக்கிறது குகநாதீஸ்வரர் கோவில்.

முருகப்பெருமான் வழிபட்ட குகநாதீஸ்வரர்!
X

KarthigaBy : Karthiga

  |  31 July 2024 5:08 PM GMT

குகநாதீஸ்வரர் கோவில் ஆலயத்தில் இருக்கும் இறைவனுக்கு கோனான்டேஸ்வரன், 'குகனாண்டேஸ்வரர் என்ற பெயரும் வழங்கப்படுகிறது. பிரகாரம் குறுகி இருப்பதாலும் இவ்வாலய இறைவன் குகநாதீஸ்வரர் என்று அழைக்கப்படுவதாக சொல்கிறார்கள். இந்த கோவில் கருவறை, அர்த்தமண்டபம், முக மண்டபம், உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் என்னும் அமைப்பைக் கொண்டது. கோவிலின் முன்பு சிறிய தோட்டம் இருக்கிறது. இவ்வாலய மூலவர் சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் சிவாலயங்களிலேயே இந்த ஆலயத்தில் இருக்கும் சிவலிங்கம் தான் மிகப்பெரியது என்று சொல்கிறார்கள். அன்னையின் திருநாமம் பார்வதி என்பதாகும். ஆலய தல விருட்சமாக வில்வமரம் இருக்கிறது. இவ்வாலயத்தில் தட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், கஜலட்சுமி, வள்ளி, தெய்வானை உடனாய முருகப்பெருமான், துர்க்கை, நவக்கிரகங்கள் காலபைரவர் ஆகியோர் பரிவார தெய்வங்களாக அருளுகின்றனர். இங்கு உள்ள கல்வெட்டு ஒன்று இவ்வாலய இறைவனை 'ராஜபாண்டி நாட்டு உத்தமசோழன் வளநாட்டு புறத்தாய நாட்டு அழிக்கைகுடி ராஜராஜேஸ்வர உடையார்' என்று நீண்ட அடைமொழியோடு குறிப்பிடுகிறது.

இந்த கல்வெட்டு பதினோராம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும் பிற்காலச் சோழர்களின் ஆட்சி கன்னியாகுமரியில் நிலவிய போது இந்த குகநாதீஸ்வரர் கோவிலுக்கு அவர்கள் திருப்பணி செய்ததும் இந்த கல்வெட்டில் காணப்படுகிறது. இந்த ஆலயத்தில் சோழ மன்னர்கள் வழிபாடு நடந்தியிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இவ்வாலயத்தில் முதலாம் ராஜேந்திரன் இரண்டாம் ராஜேந்திரன் முதலாம் ராஜாதிராஜன் ஆகிய மன்னர்கள் கால கல்வெட்டுகளும் உள்ளன. கோடை வெயில் அதிகரிக்கும் காலத்தில் இத்தல இறைவனுக்கு 1008 இளநீர் அபிஷேகம் செய்வார்கள்.

இந்த அபிஷேக இளநீர் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திரம் நாளில் 18 சங்காபிஷேகம் நடைபெறும் அன்று கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், கோமாதா பூஜை ,சங்கு பூஜையும் நடக்கும். ஐப்பசி மாதம் பௌர்ணமியில் இத்தல இறைவனை வழிபட்டால் குடும்ப பிரச்சினை நீங்கும் என்கிறார்கள். கார்த்திகை சோமவாரத்தில் மூலவருக்கு சிறப்பு பூஜை நடைபெறும். ஆலயத்தில் காரைக்கால் அம்மையாருக்கு தனிச்சன்னிதி உள்ளது. ஆண்டுதோறும் ஆனி மாத பௌர்ணமியில் காரைக்கால் அம்மையாருக்கு இத்தலத்தில் மாங்கனி திருவிழா நடத்தப்படுகிறது.மனம் உருகி வேண்டும் எல்லா பிரார்த்தனைகளையும் இத்தல இறைவன் நிறைவேற்றுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். திருமணத் தடை நீக்கும் ஆலயமாகவும் இத்தலம் உள்ளது. தினமும் காலை 5.30 முதல் பகல் 12:30 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News