Kathir News
Begin typing your search above and press return to search.

வாழ்வை வளமாக்கும் கிருஷ்ண ஜெயந்தி!

காக்கும் தெய்வம் என்று அழைக்கப்படுபவர் மகாவிஷ்ணு. அவரது அவதாரங்களில் முக்கியமானது கிருஷ்ணாவதாரம். அவர் அவதரித்த நாளை கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடுகிறோம்.

வாழ்வை வளமாக்கும் கிருஷ்ண ஜெயந்தி!
X

KarthigaBy : Karthiga

  |  24 Aug 2024 2:15 PM GMT

வாசுதேவர் - தேவகி தம்பதியற்கு ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவில் சிறைச்சாலையில் பிறந்தவர் கிருஷ்ணர். ஆனால் அவர் வளர்ந்தது கோகுலத்தில் உள்ள நந்தகோபர் - யசோதா தம்பதியரிடம். தன்னுடைய மூன்று வயது வரை கோகுலத்திலும் மூன்று முதல் ஆறு வயது வரை பிருந்தாவனத்திலும் ஏழு வயதில் கோபியர் கூட்டத்திலும் எட்டு வயது முதல் 10 வயது வரை மதுராவிலும் கிருஷ்ணரின் இளம் வயது காலங்கள் கழிந்தன.

இந்த காலகட்டங்களில் கிருஷ்ணர் பல அரக்கர்களை அழித்ததோடு பல அற்புதங்களை செய்து கோபியர்களையும் கோகுல வாசிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். பிறந்தது முதலே கிருஷ்ணரைக் கொள்ள ஏராளமான அரக்கர்களை அனுப்பிய கம்சனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இறுதியாக அவன் கிருஷ்ணரை மதுராவிற்கு அழைத்துக் கொன்று விட முடிவு செய்தான். அதன்படி நான் தனுர்யாகம் செய்யப் போகிறேன். அதற்கு வேண்டிய பொருட்கள் உடன் நந்தகோபரை குடும்பத்துடன் இங்கு வர சொல்லுங்கள் என்று அமைச்சர் அக்ரூரரிடம் கூறி அனுப்பினான். அவரும் நந்தகோபரிடம் வந்து விஷயத்தை சொன்னார். இதை அடுத்து பலராமரும் கிருஷ்ணரும் மதுராவிற்கு புறப்பட்டு சென்றனர்.

ஆனால் அங்கு மல்யுத்தத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான் கம்சன். கண்ணனை அழிப்பதற்காக சானூரன், முஷ்டிகன்,கூடன், சலன், போன்ற பலம் வாய்ந்த மல்லர்களை தயார் செய்து வைத்திருந்தான். அவர்களுடன் கிருஷ்ணரையும் பலராமரையும் யுத்தம் செய்யும்படி கம்சன் உத்தரவிட்டான். அப்போது கிருஷ்ணருக்கு பத்துக்கும் குறைவான வயது தான். ஆனால் கிருஷ்ணரும் பலராமரும் எந்த தயக்கமும் இன்றி மாமிச மலைபோல் இருந்த மல்யுத்த வீரர்களுடன் போரிட்டு அவர்கள் அனைவரையும் கொன்றனர்.

இறுதியில் கம்சனையும் கிருஷ்ணர் வதம் செய்தார். பின்னர் பல ஆண்டுகளாக சிறையில் இருந்த பெற்றோரான வசுதேவர்- தேவகி பாட்டனார் உக்ரசேனர் ஆகியோரை விடுவித்தார். அதன் பிறகு தான் தங்களின் கல்வியை கிருஷ்ணரும் பலராமரும் கற்கத் தொடங்கினர். அவர்களின் குருவாக இருந்து கல்வியை கற்பித்தவர் சாந்திபனி முனிவர். இவரிடம் சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்த கிருஷ்ணர் அவருக்கு குருதட்சணையாக வெகு காலத்திற்கு முன்பு கடலில் விழுந்த குருவின் மகனை உயிருடன் மீட்டுக் கொண்டு வந்து கொடுத்தார். துவாபரயுகத்தின் முடிவில் கிருஷ்ணரின் அவதாரமும் முடிவுக்கு வந்தது. இதையெல்லாம் நினைவு கூறும் வகையில் தான் ஆண்டுதோறும் கிருஷ்ணரின் அவதார நாளை கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடி மகிழ்கிறோம்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று வீடுகளில் குதூகலம் நிறைந்திருக்க வாசல் முழுவதும் கோலமிட்டு, வாசலில் இருந்து பூஜை அறை வரை சின்ன சின்ன காலடி சுவடிகளை வரைவார்கள். மாயக்கண்ணன் இளமையில் செய்த சேட்டைகளை நினைத்தாலே பரமானந்தத்தை தரும். அவற்றில் முக்கியமானது கோபியர் வீடுகளில் கட்டி இருக்கும் பானைகளை உடைத்து வெண்ணெய எடுத்து தின்றது. இதை நினைவு கூறும் வகையில் தான் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பல இடங்களிலும் உறியடி திருவிழா நடத்தப்படுகிறது. கிருஷ்ணர் தனக்காக இல்லாமல் உலகத்தின் உயிர்களுக்காக வாழ்ந்தவர். அதனால்தான் அவரை கண்ணா , முகுந்தா என்று அழைக்கிறோம் .கண்ணா என்றால் கண் போல காப்பவன் என்று பொருள். முகுந்தா என்றால் வாழ்வதற்கு இடம் அளித்து முக்தி அளிப்பவன் என்று பொருள்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று பகவான் கிருஷ்ணர் நம் அனைவரின் வீட்டிற்கும் வந்து அருள் பாலிப்பார் என்பதே முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது. அவரை வரவேற்கும் விதமாகத்தான் பிஞ்சு பாதங்களை வீட்டில் வரைகிறோம். வீட்டில் உள்ள கிருஷ்ணர் சிலைக்கு அல்லது படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அதில் துளசி இருந்தால் இன்னும் சிறப்பு .அதோடு கிருஷ்ணருக்கு பிடித்த பல்வேறு தின்பண்டங்கள் ,வெண்ணெய் ஆகியவற்றை பூஜை அறையில் நிவேதனமாக வைக்க வேண்டும். சீடை, முறுக்கு, லட்டு போன்ற இனிப்பு உணவு வகைகளை கிருஷ்ணருக்கு படைக்க வேண்டும். இவ்வாறு நைவேத்தியங்களை படைக்க முடியாதவர்கள் தங்களால் முடிந்ததை செய்யலாம். ஏனெனில் ஒரு இலை, ஒரு பூ, ஒரு பழம், கொஞ்சம் தண்ணீர் அதோடு தூய்மையான பக்தியையும் சேர்த்து அளித்தால் நான் அவர்களுக்கு தேவையானதை செய்வேன் என்று கீதையில் கண்ணன் சொல்லி இருக்கிறார். எனவே உங்களால் முடிந்தபடி கிருஷ்ணரை வழிபடுங்கள்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News