பைரவர் வழிபாடும் பலன்களும்!
பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது மிகவும் விசேஷமானது. அவருக்கு ஏற்ற வேண்டிய தீபம், செய்ய வேண்டிய அபிஷேகம் படைக்க வேண்டிய நைவைத்தியம் பற்றி பார்க்கலாம்.
By : Karthiga
பைரவர் வழிபாடு பிரசித்தி பெற்ற ஒன்றாகத் திகழ்கிறது. கடன் தொல்லை எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபட பைரவரை தேய்பிறை அஷ்டமி தோறும் வழிபாடு செய்வது சிறப்பான பலன்களைத் தரும்.
சிவாலயங்கள் அனைத்திலும் காலபைரவருக்கு இடம் உண்டு. சிவபெருமானுக்கு 64 வடிவங்கள் இருப்பதாகவும் அதன் முதன்மையான வடிவம் இந்த பைரவர் என்றும் சொல்வார்கள். சிவாலயத்திற்கு சென்று தரிசனம் செய்பவர்கள் அனைத்து தெய்வங்களை வழிபட்ட பின்னர் இறுதியாக காலபைரவரை வணங்காமல் அந்த ஆலய தரிசனம் முழுமை பெறாது. இவரை வழிபடுவதற்கு உகந்த தினமாக தேய்பிறை அஷ்டமி தினம் சொல்லப்படுகிறது .இந்த நாளில் இவரை வழிபாடு செய்தால் எதிரிகள் மீதான பயம் விலகுவதோடு மன தைரியம் உண்டாகும் என்கிறார்கள்.
காசிமா நகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் காலபைரவர் திகழ்கிறார். காசியில் பைரவருக்கு வழிபாடுகள் முடிந்த பிறகு தான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடு நடைபெறும். காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக காலபைரவரையும் வழிபட்டால் தான் காசி யாத்திரை செய்ததன் முழுப்பலனும் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக சிவபெருமானைப் போலவே பைரவ மூர்த்திக்கு 64 திருவடிகள் உண்டு. கால பைரவர் எட்டு திசைகளையும் காக்கும் பொருட்டு அஷ்ட பைரவர்கள் ஆகவும் 64 பணிகளை செய்ய 64 பைரவர்கள் ஆகவும் விளங்குவதாக நம்பப்படுகிறது. பைரவரின் எட்டு வடிவங்கள் அசிதாங்க பைரவர், ருருபைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷன பைரவர், சம்ஹார பைரவர் என்பதாகும்.
சிறு வெள்ளைத் துணியில் மிளகை வைத்து அதை சிறிய முடிச்சாகக் கட்டி அதை அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணையிட்டு பைரவர் முன்பாக தீபம் ஏற்றினால் எல்லா வளமும் பெருகும். தேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றியும் வழிபடலாம். அதேபோல பூசணிக்காயை மத்தியில் இரண்டாகப் பிளந்து அதனுள் எண்ணெய் அல்லது நெய் நிரப்பி தீபம் ஏற்றியும் வழிபாடு செய்யலாம். பைரவருக்கு பிடித்தமானது சந்தன காப்பு ,வாசனை திரவியங்களால் ஆன புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் போன்றவற்றை சந்தனத்துடன் சேர்த்து தயார் செய்வார்கள். இந்த சந்தன காப்பை பைரவருக்கு சாத்தி வழிபட்டு வந்தால் தேவர்கள் ஆண்டு கணக்கில் ஒரு கோடி ஆண்டு பைரவ லோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் என்று சிவபுராணம் கூறுகிறது. பால், தேன், பன்னீர் அபிஷேகமும் மிக விசேஷம்.
பைரவருக்கு சர்க்கரை பொங்கல், தயிர், சாதம், தேன், செவ்வாழை, வெல்ல பாயசம், அவல் பாயசம், நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால் மற்றும் பழ வகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் உத்தமம். பைரவருக்கு தாமரை பூ மாலை ,வில்வமாலை, தும்பை பூ மாலை, சந்தன மாலை அணிவித்து வழிபாடு செய்யலாம் .மல்லிகை பூ தவிர்த்து செவ்வரளி, மஞ்சள் செவ்வந்தி, மற்றும் வாசனை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது உத்தமம்.