Kathir News
Begin typing your search above and press return to search.

வள்ளலாருக்கு முருகப் பெருமான் காட்சி கொடுத்த நிலைக் கண்ணாடி!

வள்ளலாருக்கு முருகப்பெருமான் காட்சி கொடுத்த நிலை கண்ணாடி இன்றும் புதுப்பொலிவுடன் சென்னை திருவொற்றியூரில் உள்ள ஸ்ரீமத் ராமலிங்க சுவாமிகள் மடாலயத்தில் புனிதப் பொருளாக வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

வள்ளலாருக்கு முருகப் பெருமான் காட்சி கொடுத்த நிலைக் கண்ணாடி!
X

KarthigaBy : Karthiga

  |  16 Oct 2024 4:00 PM GMT

அருணகிரிநாதருக்கு அடி எடுத்து தந்து பாட வைத்தவர் முருகப்பெருமான். அதுபோலவே வடலூர் வள்ளலாருக்கு அடி எடுத்து தந்து பாட வைத்தவர் சிவபெருமான் என்பது வரலாறு. வடலூர் வள்ளலார் இப்பூவுலகில் 51 ஆண்டுகள் வாழ்ந்தார். அதில் சுமார் 33 ஆண்டுகள் சென்னை 7 கிணறு வீராசாமி தெருவில் வசித்தார். வள்ளலார் வசித்த வீட்டின் அருகில் இருந்த நிலைக் கண்ணாடியில் திருத்தணிகை முருகப் பெருமான் அவருக்கு காட்சி தந்து அருளினார் என்பதையும் நாம் வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு நிகழ்வுகளின் வாயிலாக அறியலாம்.

அப்படி வள்ளலாருக்கு முருகப் பெருமான் காட்சி கொடுத்த அந்த நிலைக் கண்ணாடி இன்றும் புதுப்பொலிவுடன் சென்னை திருவொற்றியூரில் உள்ள ஸ்ரீமத் ராமலிங்க சுவாமிகள் மடாலயத்தில் புனிதப் பொருளாக வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது வியப்பூட்டும் உண்மையாகும். பலரும் அறிந்திடாத அந்த நிலைக் கண்ணாடியின் அபூர்வ காட்சியையும் அதைப் பாதுகாத்து போற்றி வரும் ஸ்ரீமத் ராமலிங்க சுவாமிகள் மடாலயம் பற்றியும் அறியலாம் வாருங்கள். முதலில் இந்த மடாலயத்தின் பெருமைகளை அறியலாம். வடலூர் வள்ளலார் அனுதினமும் தாம் வசிக்கும் ஏழு கிணறு பகுதியில் இருந்து நடந்து சென்று வடிவுடையம்மனையும் திருவொற்றியூர் ஈசனையும் வணங்கி மகிழ்ந்து இன்றைய பட்டினத்தார் கோவில் வழியாக மீண்டும் வீடு திரும்புவது வழக்கம் .அவ்வாறு வரும்போது அத்தெருவில் இருந்த பெரிய மாமரத்தின் நிழலில் அமர்ந்து செல்வாராம்.

அப்படி அவர் அமர்ந்து சென்ற இடமே இப்போது ஸ்ரீமத் ராமலிங்க சுவாமிகள் மடாலயமாக எழுந்துள்ளது. தொடக்க நாளில் இந்த இடத்தின் புனிதம் கருதி சன்மார்க்கிகள் அதே இடத்தில் அணையா விளக்கு ஏற்றி அங்கே வழிபாடும் செய்து வந்தனர்.இதன் பின்பு 1939 ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் தேதி அன்று கருங்கற்கொண்டு எழுப்பப்பட்ட கட்டிடம் பயன்பாட்டுக்கு வந்தது. இதனை இங்குள்ள கல்வெட்டின் வாயிலாக அறிய முடிகிறது. இந்த மடாலயம் தொடங்கியது முதல் நாள்தோறும் தீப தூப ஆராதனைகளும் சன்மார்க்க தொழில் சொற்பொழிவுகளும் ஆண்டுதோறும் தைப்பூச விழாக்களும் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை 7 கிணறு வீராசாமி தெருவில் உள்ள வீட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு வடலூர் வள்ளலார் வசித்தபோது அந்த வீட்டில் இருந்த நிலைக்கண்ணாடியில் சுவாமிகளுக்கு திருத்தணி முருகன் காட்சி அருளினார் எனக் கூறப்படுகிறது. இறையருளால் அந்த திருநிலைக் கண்ணாடி பல ஆண்டுகள் முன்பாக இந்த ஸ்ரீமத் ராமலிங்க சுவாமிகள் மடாலயத்திற்கு நல்லபடியாக வந்து சேர்ந்தது. அந்த திருநிலைக் கண்ணாடி அழகான எழிலான வேலைபாடுடன் கூடிய மரபீடத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதன் கீழே ஒரு மரப்பலகையில் வள்ளலார் முருகனை தரிசித்த கண்ணாடி என்று எழுதப்பட்டுள்ளது. அதனை படிக்கும் போது நாம் மெய்சிலிர்ப்பது உறுதி. அந்த புனித கண்ணாடியின் முன்பு விழுந்து எழுந்து இரு கரங்களாலும் வணங்கிச் செல்லும் பக்தர்கள் ஏராளம். அதன் அடிப்பகுதியில் வள்ளலாரால் எழுதப்பட்ட திருவருட்பா நகல் பிரதியும் வைக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அணையா விளக்கு, வள்ளலார் திருவுருவப்படம் ,சிலை வடிவம் கொண்ட மரத்தேர் இருக்கிறது.

திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் வடிவுடையம்மன் ஆலயம் செல்லும் தேரடி நிறுத்தத்தில் இறங்கினால் கடைகள் நிறைந்த மார்க்கெட் தெரு வரும். இத்தெருவே பட்டினத்தார் கோவில் தெரு என வழங்கப்படுகின்றது.இத்தெருவில் தான் ஸ்ரீமத் ராமலிங்க சுவாமிகள் மடாலயம் இருக்கிறது. கடற்கரை சாலை வழியே வருவோர் பட்டினத்தார் கோவிலின் மேற்கே உள்ள பட்டினத்தார் கோவில் தெரு வழியே மடாலயம் வரலாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News