Kathir News
Begin typing your search above and press return to search.

நினைத்ததை நிறைவேற்றும் வெண்ணைய்மலை முருகன்!

சிவனைப் போன்றே பன்னிரு திருமுறைகளும் 63 அடியார்களும் அமையப்பெற்ற மற்றொரு கடவுள் முருகன் மட்டுமே. அம்முருகனின் சிறப்பான தலம் பற்றி காண்போம் .

நினைத்ததை நிறைவேற்றும் வெண்ணைய்மலை முருகன்!
X

KarthigaBy : Karthiga

  |  4 Feb 2025 10:16 PM IST

குறத்தி வள்ளியை காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்து சமூக சீர்திருத்தத்திற்கு வித்திட்ட கடவுள் தமிழில் அமைந்த இறைவனின் வரலாறு கூறும் புராணங்களிலேயே அளவில் பெரியது முருகன் மீதான கந்தபுராணம் மட்டுமே. ஓங்கார மந்திரத்தின் பொருளை தந்தை சிவனுக்கு உபதேசித்ததன் மூலம் நல்ல பிள்ளைகளின் நல்லுரைகளையும் பெற்றோர் எவ்வித பாரபட்சமும் இன்றி கேட்டுப் பயன் கொள்ள வேண்டும் என்ற புது நெறியை உலகிற்கு உணர்த்தியவர் முருகன். அத்தகைய முருகப்பெருமானின் மிகச்சிறந்த மலைத்தலங்களில் ஒன்று கரூரில் உள்ள வெண்ணைய்மலை பால சுப்பிரமணிய சுவாமி ஆலயம்.


முன்னொரு காலத்தில் பிரம்மதேவனுக்கு தான் செய்யும் படைப்பு தொழிலின் காரணமாக கர்வம் உண்டானது. அவருக்கு பாடம்புகட்ட ஈசன் எண்ணினார். ஒரு கட்டத்தில் பிரம்மனால் படைக்கும் தொழிலை மேற்கொள்ள இயலாமல் போனது. பிழையை உணர்ந்த பிரம்மன் தன் பிழை பொறுக்குமாறு ஈசனிடம் வேண்டினார். வஞ்சிவனத்தில் தவம் ஏற்றும் படி பிரம்மனுக்கு ஈசன் அறிவுறுத்தினார். இந்நிலையில் படைக்கும் தொழிலை தேவலோக பசுவான காமதேனுவிடம் இறைவன் ஒப்படைத்தார். தன்னால் படைக்கப்பட்ட உயிரினங்கள் பசி இல்லாமல் வாழ்வதற்காக காமதேனு பசுவானது வெண்ணையை மலை போன்று குவித்தது.

அதன் அருகிலேயே தேனு தீர்த்தம் எனும் பொய்கையையும் உருவாக்கியது. இதனாலேயே வெயில் காலத்தில் இந்த மலை குளுமையாக இருப்பதாக சொல்கிறார்கள். பின்னாளில் இம்மலையில் யோகி பகவன் என்பவர் தியானத்தில் மூழ்கி இருந்தார்.அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து எமது அருள் இந்த வெண்ணைய்மலையில் உள்ளதாக அனைவரும் அறிய செய் என்று கட்டளையிட்டார். யோகி பகவன் இது குறித்து கருவூர் அரசனிடம் தெரிவித்தார். மன்னரும் மரத்தடியில் உயர்ந்த கோபுரம் மண்டபம் அமைத்து முருகன் சிலையை பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பினார்.

ஆலயத்தில் முருகன் சன்னதிக்கு தென்புறத்தில் காசி விஸ்வநாதர் விசாலாட்சி அம்மனையும் நிறுவினார். முருகன் சன்னதிக்கு வடபுறத்தில் முருகனின் எந்திரம் அமைத்தார். முருகப்பெருமான் கோவில் கொண்டுள்ள இந்த வெண்ணைய்மலை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. பந்த பாசத்தில் சிக்கித் தவிக்கும் மனதை ஞானத்தின் பக்கம் திருப்பும் தலமாக இந்த வெண்ணைய்மலை முருகன் கோவில் திகழ்கிறது. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், கரூர் பசுபதீஸ்வரர் கோவில் தவிர இந்த முருகன் கோவிலில் மட்டுமே கருவூர் சித்தருக்கு சந்நிதி இருக்கிறது .

இந்த ஆலயத்தில் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 8 மணிக்கு கால சந்தி பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை மாலை 6 மணிக்கு சாயரட்சை இரவு 8:15 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெறும். மலையின் அடிவாரத்தில் காமதேனுவால் உருவாக்கப்பட்ட தேனு தீர்த்தத்தில் நீராடி தொடர்ச்சியாக ஐந்து தினங்கள் முருகப் பெருமானை வழிபாடு செய்து வந்தால் குழந்தைப் பேறு கிடைக்கும். தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகும். வாழ்க்கையில் நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேற வழி பிறக்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News