தமிழ் கடவுளை சிறப்பிக்கும் தைப்பூசத் திருநாள்!
தமிழ்நாட்டில் தமிழர்கள் பலரும் கொண்டாடும் முக்கியமான நிகழ்வாக தைப்பூசம் இருக்கிறது. பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் இணையும் இந்த நாளில் தெய்வங்களை வழிபடும்போது அவர்களிடமிருந்து கிடைக்கும் அருள் பன்மடங்காக இருக்கும்.

'பொருந்திய தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த ' என்ற திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பதிகத்தின் வாயிலாக சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தைப்பூசம் தமிழ்நாட்டில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்திருப்பது அறிய முடிகிறது. இந்த உலகத்தில் முதன் முதலில் நீர்தான் உருவானதுஅதன் பிறகு பிரம்மாண்டமான நிலப்பகுதி தோன்றியது என்று புராணங்கள் சொல்கின்றன. அப்படி இந்த உலகம் உருவாக தொடங்கிய தினமாக தைப்பூசம் உள்ளது என்பது முன்னோர்களின் கருத்து .அதனால்தான் இந்த உலகத்தில் முதன் முதலில் நீர் தோன்றியதை நினைவு கூறும் வகையில் தமிழ்நாட்டில் பல்வேறு ஆலயங்களிலும் தைப்பூச திருநாளை முன்னிட்டு தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது என்று அந்த கருத்துக்கு வலு சேர்க்கிறார்கள் .
தைப்பூச திருநாளில் சிவபெருமானையும் அம்பாளையும் வழிபடுவதும் முருகப்பெருமானை முன்னிலைப்படுத்துவதும் தான் முக்கிய நோக்கமாக இருக்கிறது. பதஞ்சலி முனிவர் மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்கள் பிரம்மன் விஷ்ணு உள்ளிட்ட அனைத்து தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் சிவபெருமான் அம்பாள் ஆகியோரின் நடனத்தை காணும் ஆவல் உண்டானது. அதன்படி ஈசனும் தேவியும் தங்களின் நடனத்தை அவர்களுக்கு காட்டி அருளிய தினம் இந்த தைப்பூசத் திருநாள் என்கிறார்கள். எனவே இந்த நாளில் சிவாலயங்கள் தரும் நடராஜருக்கும் சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
தைப்பூச நாளில் முருகப்பெருமானை வழிபடுவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. சூரபத்மன் சிங்கமுகாசுரன் ,தாரகசுரன் ஆகிய அசுரர்களிடம் தேவர்கள் சிறைப்பட்டு கிடந்தனர். அவர்களை மீட்பதற்காக தேவர்களின் சேனாதிபதியாக இருந்து அசுரர்களுடன் போர் புரிந்தார் முருகன். போர் கடவுள் ஆன அவரை போற்றும் விதமாகத்தான் 'தைப்பூசம்' கொண்டாடப்படுவதாக சொல்கிறார்கள். மேலும் வள்ளியை முருகப் பெருமான் மணமுடித்த தினம் இந்த தைப்பூசம் என்கிறார்கள். ஞானப்பழம் கிடைக்காததால் முருகப்பெருமான் பழனி மலையில் ஆண்டியாக வந்தது நின்ற தினம் தைப்பூசம் என்ற கருத்தும் உள்ளது. இதனால் தான் தைப்பூசத் திருநாளானது பழனியில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.