வள்ளியை முருகன் மணந்த வேளிமலை !
நாகர்கோவில் அருகே உள்ளது குமாரகோவில் என்ற சிற்றூர். இங்குள்ள 200 அடி உயரம் உள்ள வேளிமலை என்ற குன்றில் வேளிமலை குமாரசாமி கோவில் குடைவரை கோவிலாக கட்டப்பட்டுள்ளது.

'வேள் 'என்பது இன்றைய கன்னியாகுமரி மாவட்ட பகுதியை ஆண்ட ஆய் மன்னர்களின் குடும்பப் பெயர். ஆய் மன்னர்களின் பெயரால் வேள்+நாடு என்பது 'வேநாடு' ஆனது. வேள் மன்னர்களின் மலையே வேளிர் மலை என்று பெயர் பெற்றது என்பது பலரின் கருத்து. கோவிலின் பழமை குறித்த கல்வெட்டுகள் பதினெட்டாம் பகுதியில் இருந்து தான் கிடைக்கிறது .இவற்றில் இம்மலை வேளிர் மலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு சுமார் எட்டு அடி உயரத்தில் மணமகனாக முருகன் நிற்க அருகில் சுமார் 6.30 அடி உயரத்தில் மணமகளாக வள்ளி இருந்து அருள்கிறார். மேற்கு பிரகாரத்தில் காசி விஸ்வநாதர் காட்சியளிக்கிறார். வடமேற்கு உற்சவமூர்த்தியாக இருக்கும் மணவிடைக் குமாரர் சன்னதி அமைந்துள்ளது. இவரே நவராத்திரியின் போது திருவனந்தபுரத்துக்கும் மார்கழி திருவிழாவின் போது சுசீந்திரத்திற்கும் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருள்பவர். வடக்கு பிரகாரத்தின் இறுதியில் வள்ளி தெய்வானை சமேதராக சண்முகராக ஆறுமுக நயினார் விளங்குகிறார். இவரும் நடராஜனும் அடுத்தடுத்து தெற்கு நோக்கி காட்சி தருகின்றனர் . கோவிலின் தல வரலாறு குறித்து காண்போம் .
ஒருமுறை சிவபெருமானை நினைத்து திருமால் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மான் வடிவத்தில் வந்த திருமகள் திருமலை நோக்கியதில் அந்த மான் கருவுற்றது. பின்னர் அந்தமான் வள்ளி கிழங்கு அகழ்ந்தெடுத்த குழியில் அழகிய பெண் குழந்தையை ஈன்றது. வள்ளிக்கிழங்கு செடியில் குழந்தை கிடந்ததை கண்டெடுத்த அப்பகுதியை ஆண்ட மன்னன் நம்பிராஜன் குழந்தைக்கு வள்ளி என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். வள்ளி பருவ வயதை அடைந்ததும் வேடுவர் குல வழக்கப்படி அவள் தினைப்புனம் காத்து நின்றாள். இந்த செய்தியை அறிந்ததும் முருகன் தினைப்புனம் நோக்கி சென்றார். வேடனாக வேங்கை மரமாக விருத்தனாக உருமாறி வந்த முருகன் வள்ளியுடன் ஊடல் பல புரிந்து வந்தார் .இதை பார்த்து வள்ளி வெகுண்டு நிற்கும் போது தனது அண்ணனான விநாயகப் பெருமான் துணையோடு வள்ளியை காந்தரூப முறைப்படி திருமணம் செய்வதற்காக முருகன் தனது சுய உருவை காட்டினார்.
வள்ளியும் தனது பிழையை பொறுத்தருளுமாறு வேண்டினாள்.இதை அடுத்து முருகன் வள்ளியை மணமுடித்துக்கொண்டார். இந்த சம்பவம் நிகழ்ந்த இடமாக வேளிமலை சொல்லப்படுகிறது .இக்கோவிலில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் வள்ளிக் குகை உள்ளது. அருகிலேயே விநாயகருக்கு ஒரு சிறு கோவில் உள்ளது. வள்ளி குகை அருகிலேயே திணைப்பனம் வழிச்சோலை, வட்டச்சோலை ,கிழவன் சோலை என்று அழைக்கப்படும் இடங்கள் அமைந்துள்ளன .வள்ளி நீராடிய சுனை அருகே பாறையில் விநாயகர் வேலவர் வள்ளி சிற்பங்கள் அழகிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வேளிமலையின் முக்கிய விழாக்களில் ஒன்று பங்குனி மாதம். அனுஷ நட்சத்திர நாளில் நடைபெறும் வள்ளி திருமணம் ஆகும்.
அன்று காலையில் பல்லக்கில் எழுந்தருளும் முருகப்பெருமான் வள்ளி குகை அருகே உள்ள கல்யாண மண்டபத்திற்கு செல்கிறார். வழியெங்கும் மக்கள் வரவேற்பு கொடுக்க மண்டபத்தில் தீபாராதனை மற்றும் அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பிற்பகலில் முருகன் வள்ளி தம்பதியை பல்லக்கில் அழைத்து வருகிறார்கள்.அப்போது முருகப்பெருமானுடன் குறவர்கள் போரிடும் குறவர் படுகொலை எனும் நிகழ்ச்சி மலைப்பாதை நெடுகிலும் நடைபெறுகிறது. இறுதியில் கோவிலின் மேற்கு வாசலில் குறவர்கள் முருகப்பெருமானிடம் தோல்வி அடைந்து சரணடையும் நிகழ்ச்சியும் நடக்கும். இதில் அங்கு மலையில் வாழும் குறவர் இனத்தவரே கலந்து கொள்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குமாரகோவில் எனும் சிற்றூரில் அமைந்துள்ளது வேளிமலை.