தீராத நோய் தீர்க்கும் மணல்மேல்குடி உஜ்ஜைனி மாகாளி!
புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி என்ற ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவில்.

நம் அனைவருக்கும் குலதெய்வம் கோவில் இருக்கும். அதில் ஒரு சிலருக்கு அந்த ஆலயத்தின் அருகில் வசிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும் எண்ணற்றவர்கள் குலதெய்வங்களை வழிபடுவதற்காக வெகு தூரத்தில் இருந்து தான் பயணம் செய்து வருவார்கள். பல்வேறு கால சூழ்நிலைகளால் இந்த இடைவெளி ஏற்பட்டிருக்கலாம். அந்த குலதெய்வத்தை நம்முடைய வீட்டில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகள் மற்றும் பங்குனி உத்திரம் போன்ற தினங்களில் மட்டுமே சென்று வழிபட்டு வருவோம். ஆனால் நாம் குடியிருக்கும் தெருவில் உள்ள கோவில்களுக்கு நாம் அடிக்கடி செல்வோம்.
அங்கு வீட்டில் இருக்கும் தெய்வத்திடம் எப்போது வேண்டுமானாலும் சென்று நாம் முறையிடுவோம்.நம் கோரிக்கையை வைப்போம். மனம் அமைதி இழக்கும் வேளையில் எல்லாம் அருகில் இருக்கும் ஆலயம் தான் நமக்கு அருமருந்தாக அமையும். அந்த வகையில் அந்த ஆலயங்களில் உள்ள தெய்வங்கள்தான் நாம் அன்றாடம் வணங்கும் குலதெய்வம் போல் நம் கண்களுக்குத் தெரியும். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணல்மேல்குடி நகரில் மையப்பகுதியில் அனைத்து சமூகத்தினருக்கும் பிடித்த தெய்வமாக அருள் பவள்தான் உஜ்ஜயினி மாகாளி அம்மன் .சுமார் 95 ஆண்டுகளுக்கு முன் காலரா நோயால் பாதிக்கப்பட்டு தினமும் வீட்டுக்கு ஒருவராக மடிந்து கொண்டு இருந்தார்கள். போதிய வைத்திய வசதி இல்லாத அந்த காலத்தில் அந்த நோயை போக்கும் வழிவகை தெரியாமல் மக்கள் தடுமாறினார்.
ஒருநாள் நள்ளிரவு 12 மணி அளவில் வண்டிக்கார கருப்பன் என்பவர் மீது அம்மனின் அருள் வந்தது.அவர் சந்தைபேட்டை பகுதியில் வேப்பமரத்தின் அடியில் ஊன்றியிருந்த திரிசூலத்தை எடுத்துக்கொண்டு மக்கள் படைசூழ நகர்வலம் வந்தார். பின்னர் நான் தான் உஜ்ஜைனி மாகாளி வந்திருக்கின்றேன். உங்களை காப்பாற்ற வந்திருக்கிறேன் இனிமேல் இப்பகுதியில் காலரா நோய் இருக்காது. இது சத்தியம் இது சத்தியம் என்று கூறி நகரின் மையப்பகுதியில் சூலாயுதத்தை ஊன்றினார். அன்றிலிருந்து இன்று வரை இந்த பகுதியில் காலரா பரவல் இல்லை என்கிறார்கள் இப்பகுதி மக்கள். எந்த நோய் வந்தாலும் இந்த அம்மனை மனதார நினைத்தாலே போதும் நோய் ஓடிவிடும் என்பது இந்த பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயம் குஜராத் மாநிலத்தில் உள்ள காளி கோவில் வடிவில் கட்டப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி வந்து அங்கிருந்து மணல்மேல்குடி ஆகிய இப்பகுதியில் இறங்கி நடந்தே ஆலயம் வரலாம்.