Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திரன் வழிபட்ட பெண்ணாடம் பிரளய காலேஸ்வரர்!

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் ஆமோதனாம்பிகை உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தேவார பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் இரண்டாவது தலமாகும். இத்தலத்தின் இறைவன் சுடர் கொழுந்துநாதர் கை வழங்கி ஈசன் என்றும் அழைக்கப்படுகிறார்.

இந்திரன் வழிபட்ட பெண்ணாடம் பிரளய காலேஸ்வரர்!
X

KarthigaBy : Karthiga

  |  26 Feb 2025 11:03 AM IST

ஒருமுறை தேவலோகத்தில் சிவ பூஜை செய்ய பூலோகத்தின் பூக்கள் தேவைப்பட்டது. இந்திரன் பூஜைக்கான மலர்களைப் பறிக்க தேவகன்னியர்களை பூலோகம் அனுப்பி வைத்தான். அப்போது பூலாகம் வந்த தேவகன்னியர்கள் பெண்ணாடத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களுக்கு மத்தியில் உள்ள சிவலிங்கத்தை கண்டு மகிழ்ந்து வழிபாடு செய்து அங்கேயே தங்கிவிட்டனர்.


மலர்களைக் கொண்டு வரச் சென்ற தேவ கன்னியர் திரும்பி வராததை அறிந்த இந்திரன் காமதேனுவே அனுப்பி வைத்தார். ஆனால் காமதேனு இந்த இடத்திற்கு வந்து இறைவனை வழிபாடு செய்தபடி பூலோகத்திலேயே இருந்து விட்டது. காமதேனுவை தேடி செல்லுமாறு இந்திரன் தன் வெள்ளை யானையை அனுப்பி வைத்தார். அதுவும் திரும்பி வரவில்லை. ஏன் யாரும் திரும்பி வரவில்லை என்று குழம்பிய இந்திரன் தானே பூலோகம் புறப்பட்டு வந்தான். அப்போது பூத்துக் குலுங்கும் பூக்களுக்கு மத்தியில் இருந்த சிவலிங்கத்தை தேவகன்னியர் ,காமதேனு, வெள்ளை யானை வழிபட்டுக் கொண்டிருப்பதை கண்டான். இதை அடுத்து இந்திரனும் சிவபெருமானை வழிபட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

பின்னாளில் இங்கே சிவாலயம் அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருவதாக தலபுராணம் சொல்கிறது. பிரளய காலம் ஒன்றில் இத்தலம் தவிர அனைத்து இடங்களும் அழிந்தது.எனவே இங்கு வந்து உயிர்களை இத்தலத்தில் வைத்து காக்கும் படி இறைவனை வேண்டினர். அதன்படி சிவனும் நந்தியிடம் வெள்ளத்தை தடுக்க ஆணையிட்டார். இதனால் சிவனை பார்த்து இருந்த நந்தி ஊரை நோக்கி திரும்ப பார்த்து வெள்ளத்தை திசை மாற்றி பூமியை காத்தது. அதன் பிறகே இத்தல இறைவனுக்கு பிரளய காலேஸ்வரர் என்ற பெயர் வந்தது.

வெள்ளத்தில் இருந்து பூமியை காப்பாற்ற திசை திரும்பிய நந்தி இன்றும் வாசலை நோக்கி திரும்பிய நிலையிலேயே இருப்பது சிறப்பு.கோவிலின் மூலஸ்தானத்திற்கு மேல் சவுந்தரேஸ்வரர் கோவில் சன்னதி தனி கோபுரத்துடன் அமைந்துள்ளது. சமணகுறவர்களில் ஒருவரான மேகண்டாரின் தந்தை அச்சுத களப்பாளர் இப்பகுதியில் வாழ்ந்தவர். அச்சுத களப்பாளர் பெயரில் பெண்ணாடம் அருகில் உள்ள கப்பாளர் மேடு என்னும் இடமும் உள்ளது .அங்கு மெய்க்கண்டாருக்கு தனியாக சிறிய கோவில் இருக்கிறது.

மறைஞான சம்பந்தர் பிறந்த தலமும் இதுதான். இவர் பெயரில் தனிமடமும் உள்ளது.கோவிலின் முன் வாசலில் தென்பால் குடவரை விநாயகர் அருள் பாலிக்கிறார். இக்கோபுர வாசலில் மேல் பக்க சுவரின் தென் திசையில் மேற்கண்டார் கோவில் உள்ளது .அங்கு நேர் எதிரே கலிக்கம்ப நாயனார் காட்சி தருகிறார். இக்கோவிலை சுற்றி கயிலாயய தீர்த்தம், பார்வதி தீர்த்தம் ,பரமானந்த தீர்த்தம் ,இந்திர தீர்த்தம் ,முக்குளம், வெள்ளாறு உள்ளிட்ட தீர்த்த குளங்கள் அமைந்துள்ளன. இக்கோவில் தினமும் காலை 6:00 மணி முதல் பகல் 12 மணி வரையும் நாள் மாலை 4 மணி முதல் இரவு 9:00 மணி வரையும் திறந்திருக்கும். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் பஸ் நிலையத்தின் அருகில் கோவில் அமைந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News