Kathir News
Begin typing your search above and press return to search.

அனுமன் தாகம் தீர்த்த ஆறுமுகப்பெருமான்!

மனித இனம் முதன் முதலில் தோன்றிய இடம் குறிஞ்சி நிலம் ஆகும். முருகன் குறிஞ்சி நில கடவுள் மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலம் ஆகும்.

அனுமன் தாகம் தீர்த்த ஆறுமுகப்பெருமான்!
X

KarthigaBy : Karthiga

  |  4 March 2025 3:45 PM IST

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அத்தகைய பேரருள் பெற்ற முருகன் இந்த வழியாக சஞ்சீவி மலையை தூக்கி சென்ற அனுமனுக்கும் அருள் செய்து தன் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டுள்ளார். அந்த இடம் கோயம்புத்தூர் அருகே உள்ள அனுவாவி மலையாகும். அனு என்பது அனுமன் என்னும் ஆஞ்சநேயரை குறிக்கிறது. மேலும் வாவி என்பது தமிழில் நீர்வளம் என்று பொருள்படும்.எனவே அனுவாவி என்பது ஆஞ்சநேயருக்காக தோன்றிய நீர் ஆதாரம் என்று பொருள். காலப்போக்கில் அந்த பெயர் அனுவாவி என்று மாறியது .

அனுமனின் தாகம் தீர்க்க ஆறுமுகப்பெருமான் உருவாக்கிய மலை இது என்று புராணக் கதைகளில் கூறப்படுகிறது. வடக்கே குருவிருட்சமலை தெற்கே அனுவாவி மலை மேற்கே கடலரசி மலை என்று திக்கெல்லாம் சூழ்ந்து நிற்க ஏறத்தாழ ஒரு பசுமை பள்ளத்தாக்கில் வீற்றிருக்கிறார் முருகப்பெருமான்.இந்த இடம் மூர்த்தி தலம் தீர்த்தம் என்று மூவகையில் சிறப்புடையது. அனுவாவி என்பதற்கு சிறிய குலம் என்றும் பொருள். கோவில் பகுதியில் ஒரு பெரிய மரம் அடர்ந்து பறந்து வளர்ந்து இருக்கிறது. அருகில் அகத்தியர் ஆசிரமமும் அதில் சித்த வைத்தியசாலையும் இருக்கிறது. பசுமை படர்ந்த மலைகள் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. அந்த அற்புதமான சூழல் மனதிற்கு அமைதியை கொடுக்கிறது. பிரம்மாண்டமான நுழைவு வாசல் வரவேற்கிறது. அதன் மேல் வளைவில் சுப்பிரமணிய கணபதீச்சரம் என்ற பெயர் எழுதப்பட்டிருக்கிறது.

இந்த நுழைவு வாசலில் நின்று பார்த்தால் மேலே முருகனின் கோவில் மிக அருகில் இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் அடிவாரத்தில் இருந்து 423 படிகளைக் கடந்து செல்ல வேண்டும். அடிவாரத்தின் முன் மண்டபத்தில் வழித்துணை விநாயகர் இருக்கிறார். கொஞ்சம் மேலே போனால் இடும்பன் சன்னதியும் மலையடிவாரத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கோவிலும் அமைந்துள்ளது. கருவறையில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். இந்த பகுதியில் ஒரு வற்றாத நீரூற்று பாய்கிறது .இந்த நீரூற்று உச்ச கோடையில் கூட ஒருபோதும் வறண்டு போவதில்லை என்பது வியப்பாக இருக்கிறது. இந்த வற்றாத நீரூற்றுக்கு பின்னால் ஒரு கதை உள்ளது.

இலங்கையில் ராவணன் மீதான யுத்தத்தை ராமன் தொடங்கியிருந்தார். அதன் ஒரு கட்டத்தில் ராவணனின் மகன் தொடுத்த அம்பின் வீரியத்தால் லட்சுமணன் வானரபடையில் ஒரு பகுதி என்று பலரும் மயங்கி விழுந்தனர். அவர்களைக் காப்பாற்ற இமயமலை தொடரில் உள்ள சஞ்சீவி மலையில் வளர்ந்திருக்கும் சில மூலிகை செடிகள் தேவைப்பட்டது. அதை கொண்டு வர அனுமன் சென்றார்.அவர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு வானில் பறந்து சென்ற போது அவருக்கு தாகம் ஏற்பட்டது. அவருக்கு முருகப் பெருமான் தன் வேல் கொண்டு ஒரு சுனையை ஏற்படுத்தி ஆஞ்சநேயரின் தாகத்தை தீர்த்துள்ளார் என்கிறது இவ்வாலய தலவரலாறு.

இந்த கோவில் அமைந்துள்ள பகுதிக்கு நேர் தென்புறத்தில் மருதமலை உள்ளது. இவ்வாலயத்தில் குழந்தை வரம் வேண்டுபவர்கள் தொடர்ச்சியாக 5 செவ்வாய்க்கிழமைகளில் வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும். திருமணத் தடை உள்ளவர்கள் இத்தல முருகனுக்கு தாலி ,ஆடை போன்றவற்றை காணிக்கை செலுத்தி கல்யாண உற்சவம் நடத்துவது வழக்கமாக உள்ளது.இவ்வாலயம் தினமும் காலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News